50 வது தொடர்........
தமிழீழ ஆயுத போராட்ட வரலாற்றில், போர்க் களத்தில் வீரமரணம் அடைந்தவர்களைவிட, இயக்கங்களுக்கு இடையிலான சகோதர மோதல்கள் மூலம் கொல்லப்பட்டவர்கள் ஏராளம் எனலாம்.
அதில் காட்டிக்கொடுப்புக்கள், சித்திரவதை, படுகொலைகள், கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை, சந்தேகத்தின் அடிப்படையில் கொல்லப்பட்டவர்கள் என பட்டியல் நீண்டுகொண்டே செல்கின்றது.
இதில் LTTE யினர் என்ற சந்தேகத்தில் ஏனைய இக்கதினர்களும், துரோகிகள் என்ற போர்வையில் LTTE யினரும், மற்றும் ஒரே இயக்கத்துக்குள்ளும் படுகொலைகள் நிகழ்ந்தது.
இதன் மூலம் தமிழ் மக்களின் உயிரிழப்புகளுக்கு அரச படையினர் மட்டுமல்லாமல், LTTE உட்பட அனைத்து தமிழ் இயக்கங்களும் பொறுப்பாளிகளாகும்.
போராட்ட ஆரம்பத்தில் TELO, LTTE, EROS, EPRLF, PLOTE ஆகிய ஐந்து பிரதான இயக்கங்கள் அறியப்பட்டாலும், போராட்ட வரலாற்றில் 40 க்கு மேற்பட்ட இயக்கங்கள் மற்றும் குழுக்கள் செயற்பட்டன. இந்த இயக்கங்கள் மற்றும் குழுக்கள் எல்லாம் அரச படைகளுடன் இணைந்து LTTE க்கு எதிராகவே செயற்பட்டு வந்தன. இது பற்றி இந்த கட்டுரையின் 16 வது தொடரில் விரிவாக எழுதியுள்ளேன்.
போராட்ட ஆரம்ப காலங்களில் அரசுக்கு எதிராகவே அனைத்து இயக்கங்களும் செயற்பட்டன. 1986 மே மாதம் TELO இயக்கத்தின்மீது LTTE யினர் தாக்குதலை ஆரம்பித்து அதன் ஏராளமான போராளிகளும், தலைவர் சிறி சபாரத்தினமும் கொலை செய்யப்பட்டதுடன், TELO இயக்கத்தின் பலம்பொருந்திய இராணுவக் கட்டமைப்பு சிதைக்கப்பட்டது.
போராட்ட இயக்கங்களுக்கு இடையிலான அதிகாரப் போட்டியானது இறுதியில் TELO மீதான சகோதரப் படுகொலையாக மாறியபின்னர் ஏனைய இயக்கங்கள் சோர்வடைந்தன.
TELO மீதான தாக்குதல் வெற்றியளித்ததனால் ஏனைய இயக்கங்கள் மீதான தாக்குதலையும் தீவிரப்படுத்தினர்.
அந்தவகையில் 1986 டிசம்பர் மற்றும் 1987 இல் EPRLF இயக்கத்துக்கு எதிரான தாக்குதல் ஆரம்பமானது. LTTE யினரின் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏராளமான EPRLF கைதிகளும் கொலை செய்யப்பட்டனர்.
அரச படைகளிடமிருந்து மட்டுமல்லாது LTTE யிடமிருந்தும் போராளிகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஏனைய தமிழ் இயக்கங்களுக்கு ஏற்பட்டது.
இந்த நிலையில் 1987 இல் இந்தியப் படையினர் இலங்கைக்கு வந்ததன் பின்னர் சோர்வடைந்திருந்த தமிழ் இயக்கங்கள் மீண்டும் எழுச்சி பெற்றதுடன், அவர்களது தமிழீழக் கொள்கையினை கைவிட்டனர். இதற்கு LTTE யின் நடவடிக்கையும் ஒரு காரணமாக இருக்கலாம்.
இயக்கங்களின் செயற்பாடுகளானது தமிழ் மக்களின் அரசியல் சுதந்திரத்துக்கு சவாலாக அமைந்தது. மாற்றுக் கொள்கையுடையவர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டனர். தமிழ் அரசியல் கட்சிகளின் மிதவாத தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர்.
தமிழ் ஊடகவியலாளர்கள், கல்வியாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் போன்றோரும் கொல்லப்பட்டனர்.
LTTE இயக்கத்தின் உள் முரண்பாடு காரணமாக 1993 இல் இயக்கத்தின் பிரதித் தலைவர் மாத்தையா மற்றும் அவரது விசுவாசிகள், ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்பட்டவர்கள் மீதான விசாரணை மற்றும் தண்டனை என்ற ரீதியில் நூற்றுக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர்.
1987 தொடக்கம் 1990 வரையில் இந்திய படையினரின் துணையுடன் செயற்பட்ட தமிழ் இயக்கங்களினால் LTTE என்ற சந்தேகத்தில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.
அதே காலப்பகுதியில் வடகிழக்கு மாகாண சபையின்கீழ் இந்திய அனுசரணையுடன் செயற்பட்ட CVF, TNA ஆகிய படையினர் ஏராளமானோர் LTTE யினரால் கொல்லப்பட்டனர்.
இரண்டாவது ஈழப்போர் ஆரம்பிக்கப்பட்டதன் பின்பு முகமூடி அணிந்த பலர் காட்டிக் கொடுத்ததன் காரணமாக LTTE உறுப்பினர் என்ற சந்தேகத்தில் ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்டு அல்லது காணாமல் ஆக்கப்பட்டதாக Human Rights Watch பதிவு செய்துள்ளது.
1988 தொடக்கம் 1990 வரையான காலத்தில் சுமார் 27,200 பேர் காணாமல் போனதாக இலங்கை அரசாங்கம் 2002 இல் ஐ.நா.விடம் தெரிவித்திருந்தது.
1995/96 காலப்பகுதியில் யாழ்ப்பாணம் கைப்பற்றப் பட்டதன்பின்பு பலர் காணாமல் போனதாக அறிக்கைகள் கூறுகின்றன.
1986 இல் TELO இயக்கம் மீதான தாக்குதல் தொடக்கம் 2004 இல் கருணா அம்மானின் பிரிவுக்கு பின்பு நடைபெற்ற வெருகல் படுகொலை வரைக்கும் LTTE யினரால் பல இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.
அத்துடன் கருணாவின் பிரிவுக்கு பின்பு அவரது ஆதரவாளர்கள் பலர் கொல்லப்பட்டனர். கருணாவிடமிருந்த கிழக்கு மாகாணத்தின் அதிகாரத்தினை மீண்டும் பெறுவதற்காக LTTE யினர் கடுமையான நடவடிக்கைகளில் இறங்கினர்.
இறுதியாக 2009 இல் நடைபெற்ற முள்ளியவாய்க்கால் வரையிலான இறுதிப் போரின்போது ஏராளமான தமிழ் மக்கள் இரு தரப்பாலும் கொல்லப்பட்டதாகவும், அதில் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் நுழைய முற்பட்ட மக்களை LTTE யினர் வன்முறை மூலம் தடுத்ததாகவும் ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே LTTE மற்றும் ஏனைய தமிழ் ஆயுத இயக்கங்களுக்கிடையிலான சகோதர படுகொலைகள் தமிழ் சமூகத்திற்கு மிகப்பெரிய உயிரிழப்புகளையும், பின்னடைவினையும் ஏற்படுத்தின.
வரலாறு இவ்வாறு இருக்கும்போது கிழக்கில் முஸ்லிம் ஊர்காவல் படையினராலும், ஜிஹாத் அமைப்பினாலும் தமிழர்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் முன்வைக்கின்ற குற்றச்சாட்டானது இன்றைய இளைய சமுதாயத்தினருக்கு உண்மைகளை மறைக்க முற்படுவதாகும்.
தொடரும்..............
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
