எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் வலய கல்வி பணிமனையின் வழிகாட்டலில் கல்பிட்டி கோட்ட பாடசாலைகளில், வெவ்வேறு சமயங்களையும், மொழிகளையும் கற்கும் மாணவர் இடையே தேசிய ஒருமைப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் மாணவர்களுக்கான பயிற்சி முகாம் நுரைச்சோலை முஸ்லிம் வித்தியாலயத்தில் அண்மையில் நடைபெற்றது.
இந்நிகழ்வானது கல்பிட்டி கோட்ட கல்வி பணிப்பாளர் ஏ.எம்.ஜவாத் தலைமையில் நடைபெற்றது.
இந்த மாணவர் பயிற்சி முகாமில், இம்முறை க.பொ.த (சா/த) பரீட்சை எழுதவுள்ள மாணவர்களின் பெறுபேறுகளை அதிகரிக்கும் நோக்கில், அதன் ஓர் அங்கமாக சித்திரப் பாடத்தில் உயர் பெறுபேறுகளை அடைவதற்காக சித்திரப்பாட பயிற்சி முகாமை ஆசிரிய ஆலோசகரும், நாடறிந்த ஓவியருமான கலாநிதி எம்.எம்.முஹம்மது நடாத்தினார்.
கடந்த காலங்களிலும் இதேபோன்று சித்திரப் பாடத்தில் பயிற்சி முகாம்களை நடாத்தியதன் மூலமாக, மிகவும் பின் தங்கி இருந்த சித்திரப் பாட பெறுபேறுகள் சிறப்பான முன்னேற்றத்தை அடைவதற்கு வழி வகுத்ததாகவும் வளவாளர் எம்.எம். முஹம்மது தெரிவித்தார்.
கல்பிட்டி கோட்ட ஆசிரிய ஆலோசகர் ஏ.என்.எம்.எம்.இன்சாப் மற்றும் பங்கு பற்றிய பாடசாலைகளின் சித்திரப்பாட ஆசிரியர்களும் மாணவர்களுக்கான இந்த பயிற்சி வழங்குவதில் சிறப்பான பங்களிப்பை வழங்கினர்.
நிகழ்வுதனை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய கல்பிட்டி கோட்டக்கல்வி பணிப்பாளர் ஏ.எம்.ஜவாத் அங்கு கருத்துரைக்கையில்,
சமூகத்தில் வாழும் பல்வேறு இன, மத, மொழி மற்றும் கலாசாரங்களைச் சேர்ந்த மக்கள் பரஸ்பர மரியாதை, புரிந்துணர்வு, சமத்துவம், ஒத்துழைப்பு மற்றும் நம்பிக்கையுடன் ஒற்றுமையாக வாழும் நிலையே சமூக ஒருமைப்பாடு ஆகும்.
பாடசாலைச் சூழலில் சமூக ஒருமைப்பாட்டை வளர்க்கும் வழிகளில் இன, மத நல்லிணக்கத்தை ஊக்குவித்தல், மாணவர்களிடையே பரஸ்பர மரியாதையை வளர்த்தல், கூட்டுச் செயற்பாடுகளை முன்னெடுத்தல், பாகுபாடற்ற சமத்துவமான சூழலை உருவாக்குதல், பல்வேறு கலாசார விழாக்களைக் கொண்டாடுதல், ஆசிரியர், மாணவர், பெற்றோர் மற்றும் சமூகத்தினரிடையே ஒத்துழைப்பை மேம்படுத்துதல் ஆகியன உள்ளடங்குகின்றன எனக்கூறினார்.












