JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் நகரின் சகல துறை விளையாட்டின் ஜாம்பவானான இன்றும் பிரகாசிக்கும் எம்.ஏ.செய்யது ரிபாய்.

எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் நகரின் விளையாட்டு துறையில் கால்பதித்த எம்.ஏ.செய்யது ரிபாயை காற்பந்தாட்டம், கரப்பந்தாட்ட துறையிலே முன்னையவர்களில் தெரியாத யாருமே இருக்க முடியாது.

அந்தளவுக்கு இவரின் அபார விளையாட்டும், இவரின் ஸ்டைலும் இவருக்கே உரித்தானவை. காற்பந்தாட்டத்தில் முன் வரிசை, மத்திய மற்றும், பின் வரிசை வீரராக ஒட்டு மொத்த அத்தனை திறமைகளையும் கொண்டு விளையாடி சாதனை படைத்தவர். 

தன்னால் தொடங்கப்பட்ட காற்பந்தாட்ட கழகத்தில் கோல் காப்பாளராகவும் பெயர் பெற்று விளங்கிய சகல துறை ஆட்ட வீரர்.

புத்தளத்திலே, 1965 இல் மர்ஹூம்களான அபூபக்கர், ரமீஸா உம்மா தம்பதிகளுக்கு பிறந்த இவர் தனது ஆரம்பக் கல்வியை புத்தளம் சாந்த அன்றூஸ் கல்லூரியில் தொடங்கி, அதன் பின்பு 4ம் தரத்தில் புத்தளம் ஸாஹிரா கல்லூரியில் தனது கல்வியை தொடர்ந்தார். 

அன்றைய கால கட்டத்தில் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கியே இவர் பல மெய்வல்லுனர் போட்டிகளில் பாடசாலை மட்டத்திலும், மாகாண மட்டத்திலும் பல வெற்றிகளை ஸாஹிரா தேசிய கல்லூரிக்கு பெற்றுக் கொடுத்தார். 

அதே போலவே உதைப்பந்தாட்டத்திலும், கரப்பந்தாட்டத்திலும் சிறந்து விளங்கிய இவர் அவைகளின் போட்டி நடுவராகவும் சிறந்து விளங்கினார்.

இவரின் திறமையை கண்ட அன்றைய பாடசாலை ஆசிரியர்களான மர்ஹூம் என்.எம் ஹலீல் சேர் மற்றும் கலாம் சேர், ஏ.ஓ. நைனா மரிக்கார் சேர், வீ.டி.ரஜாப்தீன் சேர் போன்றோர் இவரை ஸாஹிராவின் உதைப்பந்தாட்ட கழகத்தினுள் கனிஷ்ட பிரிவில் உள்வாங்கி கொண்டனர். 

அதிலும் இவர் தனது திறமைகளை வெளிப்படுத்தி "பாகிஸ்தான் வெற்றி கிண்ண" போட்டியில் ரன்னரப்பாக சாஹிரா அணியை வெற்றி காண்பதில் பங்குதாரர் ஆனார். 

அன்றைய காலத்தில் பிரபலமான கழகங்கள் இவரை தமது கழகங்களில் இணைத்துக் கொள்ள சுற்றி சுற்றி வந்தன. ஆனால் இவர், இவருடைய சகோதரர்கள் மற்றும் நண்பர்களால் ஆரம்பிக்கப்பட்ட புத்தளம் நியூ ஸ்டார்ஸ் கழகத்திலேயே ஏ டிவிஷன் பிரிவில் விளையாடி, பல வெற்றிகளையும் பெற்றுக் கொடுத்து அணி தலைவராகவும் செயற்பட்டார்.

காற்பந்தாட்ட ரசிகர்களிடம் அதிகம் வரவேற்பை பெற்ற இவர், பெரியவர்களால் கூட "ரிபாய் காக்கா" என்று அழைக்கும் அளவுக்கும் நல்ல நற்குணத்தை காட்டினார். 

பாடசாலையை விட்டு வெளியேறிய பின், இவர் சில வருடம் நியூ ஸ்டார் அணிக்காக விளையாடிய பின்னர் அதிலிருந்து விலகி "பிரிஸ்டல் கிண்ணம்" விளையாடும் பொருட்டு,  அன்றைய பிரபல கழகமான புத்தளம் விம்பிள்டன் அணியில் சேர்ந்தும் விளையாடி பல வெற்றிகளை பெற்று, காற்பந்தாட்ட துறையிலே முடி சூடா மன்னராக தனது பெயரை  பதித்தார்.

காற்பந்தாட்டம், கரப்பந்தாட்டம் நடுவராக, திறமையான விளையாட்டு வீரராக திகழ்ந்ததால் இவரை, இவரின் குரு "ஹலீல் ஆசிரியர்" "புத்தளம் உதைப்பந்தாட்டத்தின் முத்து" என செல்லமாக பெயரிட்டார். 

அன்றைய கால கட்டத்தில் புத்தளம் ஸாஹிரா அணி "பிரேமதாச கிண்ண" தொடருக்கு தகுதி பெற்ற வேளை, முன்னாள் விளையாட்டு துறை ஆசிரியர்களான ரஹ்மத்துல்லா சேர், சபருல்லா சேர், புத்தளம் மாநகர சபையின் இன்றைய உறுப்பினர்களான ஏ.ஓ. அலிகான், கலாநிதி எஸ்.ஆர்.எம்.ஆஸாத் அனைவரின் வேண்டுகோளில் ஸாஹிராவின் பயிற்றுவிப்பாளராக இணைந்து செயற்பட்டு சாஹிரா அணியினை அரை இறுதி போட்டி வரை கொழும்பு  சுகதாச மைதானத்தில் விளையாட வைத்த பெருமையும் இவரையே சேரும்.

இவர் உருவாக்கிய வீரர்களும், நடுவர்களும் ஏராளம். அன்றைய ஸாஹிரா அணியினை அப்படியே, ஓரிருவரை தவிர மற்றவர்களை அணைத்துக்கொண்டு தனி ஒருவராக புத்தளம் நகரில் இன்றும் இயங்கும் ஒடிடஸ் என்ற கழகத்தை உருவாக்கி, வடமேல் மாகாணத்தில் அவ் அணியை தனது பயிற்றுவிப்பின் மூலமாக தனது விளையாட்டினாலும், அதிர வைத்தவர் என்றால் அது மிகையாகாது.

தனது ஆழ்ந்த நம்பிக்கையால் கால்ப்பந்தாட்டத்தில் சகல துறை நாயகனான இவர் மிளிர்ந்தமை புத்தளம் நகரம் பெற்ற அதிர்ஷ்டம் என்றே கூற வேண்டும்.

தற்போது கொழும்பிலே வசிக்கும் இவர், அங்குள்ள கழகங்களில் சேர்ந்து செயல் படுகிறார். 

குரே கழக முகாமையாளராக, யங் சில்வர் செயலாளராக கடமையாற்றுவதோடு, ரீடோஸ் என்ற தனது சொந்த அணி ஒன்றை தொடங்கி அதன் சகல துறையிலும் செயல் பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இப்போதும் புத்தளம் நகரம் காற்பந்தாட்ட துறையில் திறமையான இவரை  இழந்து நிற்பது துரதிஷ்டம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இவர் முன்னைய லீக செயலாளராகவும், நடுவர் குழு மற்றும் ஒழுக்க மேம்பாட்டு குழுவில் பணியாற்றியமையும் நினைவில் கூறப்படவேண்டியவை.

இவரின் சேவைகள் தொடர்ந்தும் புத்தளம் நகருக்கு கிடைக்க வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.









Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال