(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
‘க்ளீன் ஸ்ரீ லங்கா’ தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், கொழும்பு ரோயல் கல்லூரியின் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் கிழக்குக் கரையோர பழைய மாணவர் அமைப்பின் நிதிப் பங்களிப்புடனும், இலங்கை கடற்படையின் தொழில்நுட்ப மற்றும் கைவினைப் பங்களிப்புடனும் புனரமைக்கப்பட்ட ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் திஸ்ஸமஹாராம, மெதவெலேன மகா வித்தியாலயத்தின் கட்டிடங்கள் மற்றும் வசதிகள் வியாழக்கிழமை (2026 ஒக்டோபர் 01) மாணவர்களின் பயன்பாட்டிற்காக கையளிக்கப்பட்டன.
‘க்ளீன் ஸ்ரீ லங்கா’ தேசிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் முக்கிய பங்குதாரராகத் திகழும் இலங்கை கடற்படை, இத்தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களுக்கு தொடர்ச்சியாக சமூக சேவைப் பங்களிப்பை வழங்கி வருகிறது.
அதன்படி, கொழும்பு ரோயல் கல்லூரியின் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் கிழக்குக் கரையோர பழைய மாணவர் அமைப்பின் நிதிப் பங்களிப்புடனும், தெற்கு கடற்படை கட்டளையின் தொழில்நுட்ப மற்றும் கைவினைப் பங்களிப்புடனும் மெதவெலேன மகா வித்தியாலயத்தில் புனரமைக்கப்பட்ட வகுப்பறைக் கட்டிடங்கள் மற்றும் சுகாதார வசதிகள் இவ்வாறு மாணவர்களின் பயன்பாட்டிற்காக கையளிக்கப்பட்டன.
இந்த நிகழ்வு, இலங்கை கடற்படைக் கப்பல் காவந்திஸ்ஸ நிறுவனத்தின் கட்டளை அதிகாரியான கெப்டன் சேனக பிரேமரத்ன தலைமையில், குறித்த பாடசாலையின் அதிபர் உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.












