எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் மணல் குன்று பிரதேசத்தில் இருந்து புத்தளம் அனுராதாபுரம் வீதி வரைக்குமான, இதுவரை காலமும் குன்றும் குழியுமாக காணப்பட்ட கடையாக்குளம் பிரதான பாதை, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் கொங்ரீட் பாதையாக புனரமைக்கப்பட்டு பொதுமக்களுடைய பாவனைக்கு கையளிக்கப்பட்டிருக்கின்றது.
குறித்த இந்தப் பாதையானது இதுவரை காலமும் மிகவும் பழுதான நிலையிலே காணப்பட்டதோடு, இறுதியாக புத்தளம் நகரில் பெய்த பெரும் மழையின் காரணமாக பாதை அல்லுண்டும் செல்லப்பட்டு இருந்தது.
இந்தப் பாதையினை புனரமைப்பு செய்து தருமாறு பிரதேசத்தின் மக்கள் கடந்த கால அரசாங்கத்திடம் பல்வேறு விதமான வேண்டுகோள்களை விடுத்தும் அது நிறைவேறாத நிலையில் தேசிய மக்கள் அரசாங்கம் பாதையினை புனரமைத்து பொதுமக்களின் பாவனைக்கு வழங்கியிருக்கிறது.
குறித்த இந்த பாதையில் இரண்டு பள்ளிவாசல்கள், பிரபலமான இரண்டு அரபு மத்ரஸாக்களும், பாடசாலையும் காணப்படுகின்றன.
புனரமைப்பு செய்யப்பட்ட இந்த பாதையில் நின்றவாறு, இரண்டு அரபுக் கல்லூரிகளின் அதிபர்கள், உஸ்தாதுமார்கள், பள்ளிவாசலின் பரிபால சபை நிர்வாகிகள், பொதுமக்கள், பிரதேச வாசிகள் பகிரங்கமாக ஊடகங்களுக்கு நன்றியுடன் கருத்து தெரிவித்தனர்.
இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த புத்தளம் மன்பஉஸ் சாலிஹாத் பெண்கள் அரபுக் கல்லூரியின் அதிபர், நாடறிந்த உலமா அஷ்ஷெய்க், அல்ஹாபிழ், அல்காரி ஏ.எம். ரியாஸ் தேவ்பந்தி தெரிவிக்கையில்,
அன்பான சகோதர, சகோதரிகளே, நாம் நிற்கக்கூடிய இடம், பிரதானமான கடையாக்குளம் பாதை. இந்த பாதை ஊடாகத்தான் அனுராதபுர வீதிக்கு போக வேண்டும். அதே போல, அனுராதபுர வீதியில் இருந்து, இந்த பாதையாகத்தான் மணல் குண்றுக்கு போக வேண்டும்.
இது ஒரு பிரதானமான பாதை. இந்த பாதையில இரண்டு பள்ளிவாசல்கள், இரண்டு அரபு மத்ரஸாக்கள், பெரிய பாடசாலை இருக்கிறது.
நீண்ட நாட்களாக, இந்த பாதையால், போகக்கூடிய மக்கள் பல விதமான கஷ்டங்களை அனுபவித்தோம். குறிப்பாக, மழை காலங்களில் மிகவும் கஷ்டத்தை நாங்கள் அனுபவித்தோம்.
இறைவனின் கிருபையினால், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, பல அரசாங்கங்கள் ஆட்சியில் இருந்த போதெல்லாம் கவனத்திற்கொள்ளாத இந்த பாதை புனரமைக்கப்பட்டுள்ளது.
எம்மை துன்பத்தில் இருந்த மீட்டெடுக்க உதவிய முதலில் இறைவனுக்கும், அரசுக்கும், பாராளுமன்ற உறுப்பினர்கள், புத்தளம் மாநகர மேயர் பொறியியலாளர் ரின்சாத் அஹ்மத், இரண்டாம் வட்டார உறுப்பினர் ஆசிரியர் ஷிபாக் மற்றும் ஏனைய உறுப்பினர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கின்றோம்.
அதே போல எதிர்காலத்திலும் இந்த பிரதேசத்தினுடைய குறைகளை நீங்கள் வந்து அறிந்து எங்களுக்கு அவ்வப்போது செய்து தருவீர்கள் என்பதாக நாங்கள் எதிர்பார்க்கிறோம். இந்த பிரதேச வாசிகள் என்றைக்கும் உங்களுக்கு நன்றியாக, விசுவாசமாக இருப்போம் எனக்கூறினார்.






