JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் ஹிஜ்ரி 1400 மினாரா கோபுரம் தொடர்பில் புத்தளம் முஹியத்தீன் ஜும்ஆ பெரிய பள்ளி விடுத்துள்ள அறிக்கை.

எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் பெரிய பள்ளிவாசலான முஹியத்தீன் ஜும்ஆ பள்ளிவாசலின் பராமரிப்பில் இருந்து வரும் ஹிஜ்ரி 1400 மினாரா கோபுரம் தொடர்பான புனர்நிர்மாணப் பணிகள், தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் உரிய அரச நிறுவனங்களின் வழிகாட்டல்களுக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முன்னைய நிர்வாகத்தினால் இதற்காக நியமிக்கப்பட்ட புனர்நிர்மாணக் குழுவினருடன், தற்போதைய நிர்வாகம் உத்தியோகபூர்வ கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டு, இதுவரை அவர்கள் மேற்கொண்ட பணிகளுக்கு நன்றியைத் தெரிவித்ததுடன், தற்போதைய நிர்வாகத்தின் வழிகாட்டலின் கீழ் பணிகளை விரைவாக முன்னெடுத்துச் செல்லவும் தீர்மானித்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக ஆரம்ப கட்ட மண் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இப்பணிக்காக உதவ முன்வந்த நலன்விரும்பிகளின் உறுதிமொழிகளும் பெறப்பட்டுள்ளன.

இந்நிலையில், குறித்த இடத்தில் நிர்வாகத்திற்கோ அல்லது அதற்காக நியமிக்கப்பட்ட குழுவிற்கோ முன்கூட்டிய தகவல் இல்லாத நிலையில் சில பொருட்கள் வைக்கப்பட்டமை தொடர்பில் நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர், அது தொடர்பான விடயம் மற்றும் அதற்கான காரணம் நிர்வாகத்திற்கு தெளிவு படுத்தப்பட்டது.

அதேபோன்று, அண்மையில் குறித்த காணியில் முன்கூட்டிய அறிவித்தல் இன்றி சில நடவடிக்கைகள் இடம்பெற்றதாகவும் நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இதனுடன் தொடர்பாக புத்தளம் மாநகர சபை மேயர் அவர்கள், குறித்த பகுதி புத்தளம் நகரின் முக்கியமான இடமாக இருப்பதால், அதன் தூய்மை, ஒழுங்கு மற்றும் அழகை பாதுகாப்பது முக்கியமானது என்பதை நிர்வாகத்திடம் சுட்டிக்காட்டினார்.

இங்கு ஒரு விடயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறோம். "புனர்நிர்மாணம் செய்யப்படவுள்ள மினாரா கோபுரத்திற்கும், தற்போது முன் அனுமதியின்றி குறித்த இடத்தில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு நடவடிக்கைக்கும் இடையே நேரடியான தொடர்பு எதுவும் இல்லை."

எனவே, குறித்த இடத்தை மீண்டும் தூய்மையாகவும் ஒழுங்காகவும் வைத்திருப்பது நிர்வாகத்தின் பொறுப்பாகும். 

அந்த அடிப்படையில், எம்மை தொடர்புகொண்டு, எமது முன் அனுமதியுடன் குறித்த இடத்தை சுத்தப்படுத்துமாறு கேட்டுக்கொண்டதன் பேரில், தற்போது அந்த இடம் சுத்தம் செய்யப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

மினாரா கோபுரத்தின் புனர்நிர்மாணப் பணிகள் உரிய தொழில்நுட்ப ஆலோசனைகள், சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களின் வழிகாட்டல்கள் மற்றும் நிர்வாக நடைமுறைகளுக்கு அமைவாக தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த விடயத்தில் இதுவரை ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து தரப்பினருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன், எதிர்கால நடவடிக்கைகளும் பரஸ்பர புரிந்துணர்வுடனும் ஒத்துழைப்புடனும் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கிறோம் என்றும் பெரிய பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.





Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال