(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான அலுவலகத்தின் உலகளாவிய கடல்சார் குற்றத் தடுப்பு திட்டத்தின் கீழ், கடல்சார் போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பது தொடர்பான பயிற்சிநெறியின் முதல் கட்டம் திருகோணமலை சிறப்பு படகுப் படையணியின் பயிற்சிப் பாடசாலையில் வெற்றிகரமாக நிறைவடைந்ததுடன், அதற்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (2026 ஒக்டோபர் மாதம் 02( நடைபெற்றது.
அதன்படி, இப்பயிற்சிநெறியின் போது கப்பல்களில் ஏறுதல், சோதனை செய்தல் மற்றும் கைது செய்தல், மறைக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்வதற்கான முறைகள் மற்றும் கடல்சார் கள விழிப்புணர்வு தொடர்பில் கோட்பாட்டு மற்றும் நடைமுறை அறிவு வழங்கப்பட்டது. இப்பயிற்சிநெறியில் பங்களாதேஷை பிரதிநிதித்துவப்படுத்தி எட்டு (08) பிரதிநிதிகளும், இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி ஒருவரும் (01), மாலைதீவை பிரதிநிதித்துவப்படுத்தி எட்டு (08) பிரதிநிதிகளும், இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பதின்மூன்று (13) பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
இலங்கை பிரதிநிதிகள் இலங்கை கடற்படை, இலங்கை கடலோரக் காவல் படை, இலங்கை சுங்கத் திணைக்களம் மற்றும் இலங்கை பொலிஸை பிரதிநிதித்துவப்படுத்தி 16 பேர் கலந்து கொண்டனர்.
மேலும், இப்பயிற்சிநெறி ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான அலுவலகம் மற்றும் ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் கடல்சார் ஆய்வுகளுக்கான பிராந்திய மையம் (RCMS) ஆகியவற்றின் இணை ஏற்பாட்டில் நடத்தப்பட்டது.
பிரெஞ்சு சுங்க அதிகாரிகள் உள்ளிட்ட சர்வதேச நிபுணர்களின் சிறப்பு பங்களிப்புகளும் இப்பயிற்சிநெறிக்கு வழங்கப்பட்டன. பயிற்சிநெறியின் நடைமுறைப் பயிற்சிகள் 2026 செப்டம்பர் மாதம் 29 ஆம் திகதி ‘Stella Beauty’ வர்த்தகக் கப்பலின் பங்களிப்புடன் நடத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து, இலங்கை கடற்படையின் A 521 படகில் மறைக்கப்பட்ட இடங்களில் போதைப்பொருட்களைத் தேடும் பயிற்சி மேற்கொள்ளப்பட்டதுடன், நடைமுறைப் பயிற்சிகள் வெற்றிகரமாக நிறைவடைந்தன.
இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த சிறப்பு படகுப் படையணியின் கட்டளை அதிகாரி கெப்டன் தர்மசிறி ஹேரத், இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் கடல்சார் சட்ட அமுலாக்கத் திறன்களை வலுப்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான அலுவலகத்திற்கும் சிறப்பு படகுப் படையணிக்கும் இடையிலான நீண்டகால ஒத்துழைப்பும் கூட்டாண்மையும் 2015 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
2016 ஆம் ஆண்டு முதல் கப்பல்களில் ஏறுதல், சோதனை செய்தல் மற்றும் கைது செய்வதற்கான நடைமுறைகள் தொடர்பான பயிற்சிகள் மற்றும் அது தொடர்பான அடிப்படை பயிற்றுநர் பயிற்சிநெறிகள் படிப்படியாக ஆரம்பிக்கப்பட்டு, தற்போது மேம்பட்ட கடல்சார் சட்ட அமுலாக்கப் பயிற்சி வரை விரிவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
குறிப்பாக, சிறப்பு படகுப் படையணி பயிற்சிப் பாடசாலையின் Ship-in-a-Box VBSS பயிற்சி வசதி மற்றும் அலுவலக மற்றும் தங்குமிட வசதிகளை மேம்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான அலுவலகம் வழங்கிய பங்களிப்பையும் அவர் பாராட்டினார்.
மேலும், இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான அலுவலகத்தின் தென்கிழக்கு ஆசிய பிராந்திய நிகழ்ச்சித் திட்ட ஒருங்கிணைப்பாளரும், எல்லை முகாமைத்துவப் பிரிவின் ஆசிய ஒருங்கிணைப்பாளருமான David O’Connell, பயிற்சிநெறியை வெற்றிகரமாக நிறைவு செய்த அனைவருக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பிரெஞ்சு சுங்கத் திணைக்களத்தைச் சேர்ந்த திருமதி Ana Verron மற்றும் திரு. Johann Hendrick, பிரதான பயிற்றுநர் திரு. Leonard Adams உள்ளிட்ட வெளிநாட்டு பிரதிநிதிகளும், கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான அலுவலகத்தின் திட்ட உதவி அதிகாரி திருமதி தினிதி மெண்டிஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

















