எம்.யூ.எம்.சனூன்
இலங்கை கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் ஏற்பாட்டில், யுனிசெப் அமைப்பின் நிதி மற்றும் தொழிநுட்ப அனுசரணையுடன், பாடசாலைகளில் காலநிலை மாற்றங்களின் தாக்கங்களை எதிர்கொள்ளும் ஆற்றலை வளர்ப்பதற்கும், காலநிலை அனர்த்த முகாமைத்தவத்தினை வலுப்படுத்துவதற்குமான விசேட முன்னோடி வேலைத்திட்டம் நாடு தழுவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இத்திட்டத்தின் கீழ் இலங்கை முழுவதிலும் உள்ள 9 மாகாணங்களில் இருந்தும் மாகாணத்திற்கு 7 பாடசாலைகள் வீதம் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
வடமேல் மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட 7 பாடசாலைகளில் புத்தளம் கல்வி வலயத்தைச் சேர்ந்த புத்தளம் பாத்திமா பாலிகா மகா வித்தியாலயம் இத்திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் முதலாவது அங்குரார்ப்பண மாநாடு கடந்த ஜூன் மாதம் தலவத்துகொடையில் நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக, இரண்டாம் கட்ட வழிகாட்டல் மற்றும் பயிற்சிப் பட்டறை (30) அனுராதபுரத்தில் உள்ள அலகமண்டா ஹோட்டலில் வெற்றிகரமாக நடைபெற்றது.
இக்கூட்டத்தில் புத்தளம் பாத்திமா பாலிகா மகா வித்தியாலயம் சார்பில் அதிபர் ஏ.எல்.சரீனா பர்வீன், பிரதி அதிபர் என்.டபிள்யூ. பிரியதர்சினி, ஆசிரியர் தசினான் ஆகியோர் கலந்துகொண்டு பாடசாலையை பிரதிநிதித்துவப்படுத்தினர்.
இச்செயற்திட்டத்தின் மூலம் எதிர்காலத்தில் காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான பல்வேறு கல்வி, வள மற்றும் உள்கட்டமைப்பு சார்ந்த அபிவிருத்தி திட்டங்கள் பாடசாலைகளுக்கு கிடைக்கப்பெறவுள்ளன.


