29 வது தொடர்.............
மட்டக்களப்பு நகருக்குள் 19.06.1990 அன்று இராணுவத்தினர் நுழைந்திருந்தாலும், சில கிலோ மீட்டர் தூரத்திலுள்ள காத்தான்குடி மற்றும் அதனைச் சூழ்ந்த பிரதேசங்களில் LTTE யினரின் நடமாட்டங்கள் அதிகமாக இருந்தது.
26.06.1990 அன்று LTTE யினர், முஸ்லிம் கிராமமான காத்தான்குடி பிரதேசத்துக்குள் ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்தனர்.
அதன்பின்பு வீதியின் இருபுறமும் நின்றுகொண்டு 93 முஸ்லிம்களின் கடைகளை உடைத்து பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டதுடன், சில கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன. தீயிடப்பட்ட மூன்று கடைகள் பள்ளிவாசலுடன் இருந்ததன் காரணமாக பள்ளியிலும் தீ பரவியது.
அன்றைய தினம் LTTE யினரின் ஊரடங்கு உத்தரவினை மீறி வீதியில் வந்த பல முஸ்லிம் இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அதன்பின்பு 12.07.1990 அன்று குருக்கள்மடம் பகுதியால் காத்தான்குடி நோக்கிச் சென்ற முஸ்லிம் பொது மக்கள் 165 பேர் வாகனங்களிலிருந்து இறக்கி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.
இவ்வாறான முஸ்லிம்களுக்கு எதிரான சம்பவங்கள், மற்றும் இரண்டாவது ஈழப்போர் ஆரம்பிக்கப்பட்ட 11.06.1990 அன்று சரணடைந்த முஸ்லிம் பொலிசாரை கொலை செய்தமை, அதே தினத்தில் சம்மாந்துறையில் ஐந்து முஸ்லிம் பொலிசார் சுட்டுக் கொல்லப்பட்டமை.
மேலும் 03.06.1990 காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை, 11-12.08.1990 ஏறாவூர் படுகொலை காரணமாக LTTE இயக்கத்தின் முஸ்லிம் உறுப்பினர்கள் மத்தியில் இயக்கத்தின் மீது கடுமையான அதிருப்தி உருவானது.
LTTE யினரால் முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்ட காலங்களிலும் ஏராளமான முஸ்லிம் உறுப்பினர்கள் அவ்வியக்கத்தில் இருந்துள்ளனர். ஏறாவூர் பகுதியை சேர்ந்தவர்கள் மாத்திரம் 100 க்கு அதிகமானவர்கள் LTTE போராளிகளாக இருந்துள்ளனர்.
இந்தநிலையில், முஸ்லிம்கள் மீதான LTTE யினரின் கொலை நடவடிக்கைக்கு அதிருப்தி தெரிவித்து சக இயக்க போராளிகள் மற்றும் தளபதிகளுடன் முஸ்லிம் போராளிகள் வாதிட்டுள்ளனர்.
ஆரம்ப நாட்களில் முஸ்லிம்கள் மீதான படுகொலைகள் பற்றி கேள்வி எழுப்பியதற்கு, அந்த கொலைகளை நாங்கள் செய்யவில்லை, அது இலங்கை இராணுவத்தினரினால் மேற்கொள்ளப்பட்டதாக விளக்கம் கூறி வந்தனர். ஆனால் அவ்வாறான விளக்கத்தில் சந்தேகம் ஏற்பட்ட காரணத்தினாலேயே வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
LTTE யினரின் விதிமுறையின்படி அவ்வாறு இயக்கத்தின் நடவடிக்கை பற்றி கேள்வி கேட்பது குற்றமாகும். அதனால் LTTE யினரின் முஸ்லிம்களுக்கு எதிரான நடவைக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த ஐந்து முக்கிய முஸ்லிம் LTTE யினர் கொக்கட்டிச்சோலை பகுதியில் கொலை செய்யப்பட்டனர்.
இந்த செயற்பாடானது ஏனைய முஸ்லிம் LTTE உறுப்பினர்களுக்கும் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் ஏராளாமான முஸ்லிம் LTTE உறுப்பினர்கள் இயக்கத்தைவிட்டு தப்பிச் சென்றனர். இன்னும் சிலர் இராணுவத்தினரிடம் சரணடைந்தனர். தப்பிச்சென்று மறைந்து வாழ்ந்துவந்தவர்களில் சிலர் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டனர். அவர்கள் LTTE யிலிருந்து விலகியதாக கூறியிருந்தும், அதனை நம்பும் நிலையில் இராணுவம் இருக்கவில்லை.
இவ்வாறு முஸ்லிம் போராளிகள் இயக்கத்தைவிட்டு தப்பியோடும் நிலை அதிகரித்த நிலையில், இயக்கத்திலுள்ள ஏனைய அனைத்து முஸ்லிம் உறுப்பினர்களையும் கொலை செய்வதற்கு தீர்மானித்ததன் காரணமாக கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமல்லாது, அம்பாறை மாவட்டத்தில் உள்ள இயக்கத்தின் முஸ்லிம் போராளிகளின் ஆயுதங்கள் களையப்பட்டு சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் எத்தனை பேர்கள் ? எந்த திகதியில் ? எந்த இடத்தில் கொலை செய்யப்பட்டனர் என்ற துல்லியமான தரவுகள் இல்லை.
இயக்கத்தில் உள்ள முஸ்லிம் போராளிகளை LTTE யினர் கொலை செய்தமை ஒருபுறமிருக்க, மறுபுறத்தில் LTTE முஸ்லிம் போராளிகளின் குடும்பங்கள், மற்றும் LTTE யினர் ஆட்சி செய்த காலங்களில் அவர்களுடன் தொடர்பினை பேணியவர்கள், LTTE யின் அரசியல் பிரிவில் பணியாற்றியவர்கள் என அனைவரயும் தேடித் தேடி கைது செய்யும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டனர்.
அவ்வாறு இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டவர்கள் பலர் மீண்டும் திரும்பி வரவேயில்லை.
கொழும்புக்கு தப்பிச் சென்ற சிலர், வாகனத்திலிருந்து இடையில் இறக்கப்பட்டு சுட்டு டயரில் போட்டு எரிக்கப்பட்டதாக அப்போது செய்திகள் பரவியது.
தொடரும்..............
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
