JobVibe.lk - Sri Lanka Job Portal

சரணடைந்த பொலிசாருக்கு நடந்த சம்பவம். வெளிவராத ரகசியம்.

28 வது தொடர்.............

சரணடைந்த 600க்கு மேற்பட்ட பொலிசார் கொலை செய்யப்பட்ட சம்பவமானது உலகம் அறிந்த விடயம். கல்முனை பொலிஸ் நிலையத்தில் கடமை புரிந்தபோது LTTE யினரால் கொண்டு செல்லப்பட்டு தப்பித்தவர்களில் ஒருவரான நற்பிட்டிமுனையை சேர்ந்த உதுமாலெப்பை (சேவை இலக்கம் R15310) என்பவர் அன்றைய சம்பவம் பற்றி என்னிடம் கூறியதை இங்கே பதிவு செய்கிறேன்.

11.06.1990 கல்முனை பொலிஸ் நிலையம் மீது பின்னேரம் 3.30 மணியளவில் LTTE யினர் தாக்குதலை ஆரம்பித்தனர். அதில் முதலாம் பொய்ன்ட் மீது செல் வீழ்ந்து பலர் கொல்லப்பட்ட பின்பு அனைவரையும் சரணடையுமாறு ASP கட்டளை வழங்கியதும், மாலை 5 மணிக்கு தாக்குதல் நிறுத்தப்பட்டு LTTE யினரிடம் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைந்தனர். 

சரணடைந்த பொலிசாரில் தமிழர்களை தவிர, சிங்கள, முஸ்லிம் பொலிசாரை மாத்திரம் மூன்று பஸ்களில் ஏற்றிச் சென்றனர். அவ்வாறு செல்லும்போது கல்முனைக்குடியிலிருந்து அக்கரைப்பற்று வரைக்கும் முஸ்லிம் கிராமங்கள் வழியாக தப்பித்து செல்வதற்கான சந்தர்ப்பம் இருந்தது. ஆனால் தங்களை விட்டுவிடுவார்கள் என்ற நம்பிக்கை பொலிசாரிடம் இருந்ததனால், அவ்வாறு முயற்சிக்கவில்லை. 

அக்கரைப்பற்றை தாண்டி கோளாவிலில் உள்ள LTTE யினரின் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு பொலிசாரின் கண்களும், கைகளும் கட்டப்பட்டு கோளாவிலிலிருந்து இருள் நிறைந்த கிரவல் பாதையூடாக கொண்டு செல்லப்பட்டனர். 

அந்தச் சூழ்நிலையில் இனிமேல் தாங்கள் திரும்பிவரப் போவதில்லை, தங்களை கொலை செய்யப் போகின்றார்கள் என்ற எண்ணம் பொலிசாரின் மனதில் தோன்றியது. அதனால் எல்லோரும் அழ ஆரம்பித்தனர், இறைவனை பிரார்த்தித்தனர். LTTE உறுப்பினர்களிடம் கெஞ்சினர், அழுது புலம்பினர், தங்களது குழந்தைகளுக்காக விட்டுவிடுங்கள் என்ரெல்லாம் கதறி அழுதனர். 

இறுதியில், இருள் நிறைந்த இரவு சுமார் 8 மணியளவில் ரூபஸ் குளம் பகுதி அருகில் பஸ்ஸிலிருந்து அனைவரையும் இறக்கப்பட்டு, எல்லோருடைய தலையையும் ஒரே நேர்கோட்டில் உள்ளவாறு குப்பற படுக்கவைத்தனர். 

அவ்வாறு படுக்கவைத்தவுடன் சற்றும் தாமதிக்காமல், தலையை நோக்கி சாரமாரியாக துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்தனர். 

இரத்தம் பீரிட்டு எழுந்தது. சத்தங்களும், அழுகுரல்களும், ஓலங்களும் ஓங்கியொலித்து, படிப்படியாக அடங்கியது. 

துப்பாக்கிப் பிரயோகத்துக்கு பின்பு LTTE யினர் தங்களுக்குள் பின்வரும் உரையாடல்களை மேற்கொண்டனர். 


LTTE 1: இவ்வாறு சுட்டால் தப்பிப்பதற்கு சந்தர்ப்பம் உள்ளது. 

LTTE 2: அதற்கு சந்தர்ப்பமே இல்ல. 

LTTE 1: யாராவது தப்பித்தால் நடந்த ரகசியம் வெளியாகிவிடும். 

LTTE 1: குழி தோண்டுங்கள் புதைத்து விடுவோம். 

LTTE 2: இது கிறவல் நிலமாக இருப்பதனால் இந்த இடத்தில் குழி தோண்டுவது கடினம், அவ்வாறு தோண்டுவதற்கான உபகரணங்களும் தற்போது கொண்டுவரவில்லை.  

LTTE 1: வேறு மணல் பகுதிக்கு கொண்டு சென்றிருக்கலாம். 

LTTE 2: நாளைக்கு மொத்தமாக எரித்துவிடுவோம். இப்போது எல்லா சடலத்தையும் ஒன்றாக குவிப்போம். 

சுடப்பட்ட ஒவ்வொரு உடல்களையும் இருவர், மூவர் சேர்ந்து தூக்கி குவிக்கப்படுகிறது. அவ்வாறு தூக்கும்போது இவர்கள் சரியான பாரமாக உள்ளார்களே என்றும் பேசிக்கொண்டனர்.

அப்போது உதுமாலெப்பை உட்பட காயப்பட்டவர்களும் தங்களை உயிரற்ற உடல் போன்றே காண்பித்தனர்.  

சிறுது நேரத்தில் LTTE யினர் அங்கிருந்து அகன்று சென்றதன் பின்பு, ஒருவர் நகர்ந்து செல்வதை உதுமாலெப்பை அவதானித்தார். பின்பு அவரைத் தொடர்ந்து இவர் பின்னால் செல்ல, இன்னும் இருவர் என மொத்தமாக நான்கு பேர் பிணக் குவியலிலிருந்து காட்டுப் பக்கமாக தப்பி ஓடினர். 

ஓட முடியாமல் கால்களில் குண்டுபட்டு காயமடைந்த சிலரும் அந்த பிணக் குவியலுக்குள் இருந்துள்ளனர். ஆனால் அவர்களை காப்பாற்றிக் கொண்டு செல்லும் நிலையில் இந்த நால்வரும் இருக்கவில்லை. மறுநாள் அவர்கள் எரிக்கப்பட்டிருக்கலாம். 

உடல் முழுக்க இரத்தம் இருந்ததன் காரணமாக எந்த இடத்தில் காயம் உள்ளதென்று தேடியபோது உதுமாலெப்பைக்கு எந்தவித காயமும் இருக்கவில்லை. ஆனால் தப்பியவர்களில் ஏனைய ஒரு சிங்கள பொலிசார் மற்றும் கல்முனையை சேர்ந்த கபூர், லரீப் ஆகிய மூவருக்கும் காயம் இருந்தது. 

தப்பிய நால்வரும் திசை தெரியாமல் தென் பகுதியை நோக்கிச் சென்றனர். பின்பு வயல் பகுதியில் இருந்த ஒரு பரணில் வயல் காவலுக்கு இருந்த ஒரு முதியவரிடம் வினவியபோது, முஸ்லிம் பகுதிக்கு மறு பக்கமாக செல்லுமாறு கூறியதனால், மீண்டும் மேற்குப் பக்கம் நோக்கி நடந்தனர். 

பின்பு அதிகாலை 4 மணியளவில் பணங்காட்டுப் பகுதியில் ஒருவரிடம் பாதையை விசாரித்தபோது அவர் LTTE உறுப்பினர். துப்பாக்கியை கண்டதும், நால்வரும் அதிர்ச்சியடைந்து பல திசைகளில் தப்பியோட முற்பட்டபோது அதில் சிங்கள பொலிசார் உட்பட இரண்டு பேர் மீண்டும் LTTE யிடம் அகப்பட்டுக்கொண்டனர்.

தப்பியோடிய உதுமாலெப்பை சிறுது தூரம் சென்று ஒரு வீட்டுக்குள் நுழைந்து விடயத்தை கூறி உதவி கோரி அழுதுள்ளார். வீட்டுக்கார பெண் அவருக்கு உணவு வழங்கி உபசரித்தார். அந்த வீட்டுக்காரப் பெண்ணின் தம்பி ஓர் LTTE உறுப்பினர். அப்போது தம்பியும் வீட்டுக்குள் வந்துவிட்டார். பின்பு அக்காவின் வேண்டுகோளுக்கு இணங்க காட்டிக் கொடுக்கமல் குறித்த LTTE உறுப்பினர் உதுமாலெப்பையை பாதுகாப்பாக அக்கரைப்பற்று முஸ்லிம் பகுதிக்குள் துவிச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்று விட்டுவிட்டு வந்துள்ளார். 

தொடரும்..............

முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது




Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال