(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்களுக்கான அனர்த்தம், பேரிடர் தயார்நிலை, மீள்திறன் மற்றும் பொறுப்பு வாய்ந்த ஊடக அறிக்கையிடல் தொடர்பான இரு நாள் வதிவிட செயலமர்வு ஒன்று வடமேல் மாகாணத்தின் குருநாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கு கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமை (29,30) ஆகிய இரு நாட்களும் குருநாகல், பொத்துஹரவில் உள்ள சமூக அபிவிருத்தித் திணைக்களத்தின் தேசியப் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்றது.
அனர்த்த முன்னெச்சரிக்கை மற்றும் தயார்படுத்தல், மண்சரிவு அபாயங்களும் முன்னெடுக்க வேண்டிய நடைமுறைகளும், காலநிலை மாற்றங்களும் மேற்கொள்ள வேண்டிய அவதானங்களும், ஊடக அறிக்கையிடுதல் தொடர்பில் ஊடகவியலாளர்களின் அவதானம், ஊடக அறிக்கையிடல் தொடர்பான ஊடகச் சட்டங்கள் என பல்வேறு பட்ட தலைப்புக்களில் முழுமையான செயன்முறையாக பயிற்சிகளும் வழங்கப்பட்டன.
இச் செயலமர்வில் அனர்த்த காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு செய்தி அறிக்கையிடல் அமைய வேண்டியதன் முக்கியத்துவம் பற்றி ஊடகவியலாளர்களுக்கு வலியுறுத்தப்பட்டிருந்ததுடன் கலந்து கொண்ட சகல ஊடகவியலாளர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.









