(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
காலி பிரதேசத்தில் கிங் கங்கையின் குறுக்கே அமைந்துள்ள வக்வெல்ல பாலத்தின் ஊடாக நீர் வடிந்து செல்வதற்குத் தடையாகச் சிக்கியிருந்த மூங்கில் புதர்கள் உள்ளிட்ட தாவரப் பகுதிகளை அகற்றும் விசேட நடவடிக்கையொன்று, வியாழக்கிழமை (2026 செப்டம்பர் 24) கடற்படையினரால் நீர்ப்பாசனத் திணைக்களத்துடன் இணைந்து வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.
தீவில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பெய்து வரும் கனமழை காரணமாக, வெள்ளநீரில் அடித்து வரப்பட்ட மரக் கட்டைகள், மூங்கில் புதர்கள் உள்ளிட்ட தாவரப் பகுதிகளும் கழிவுகளும் வக்வெல்ல பாலத்தில் சிக்கியதால் நீர் முறையாக வடிந்து செல்வது தடைப்பட்டது. இது குறித்து அவதானம் செலுத்தி வரும் தெற்கு கடற்படை கட்டளையானது, நீர் வழிந்தோடுவதை இயல்புநிலைக்குக் கொண்டுவருவதற்காக ஏனைய தரப்பினருடன் இணைந்து உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
அதற்கமைய, தெற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் எச்.என்.எஸ். பெரேராவின் மேற்பார்வையின் கீழ், கட்டளை முழ்குதல் மற்றும் மீட்புப் பிரிவு, இலங்கை கடற்படை கப்பல் தக்ஷிண நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட சிறப்புப் படகுப் படைப்பிரிவு மற்றும் விரைவுப் படகுப் படைப்பிரிவினால் நீர்ப்பாசனத் திணைக்களத்துடன் குழுவாக இணைந்து இந்த வக்வெல்ல பாலத்தின் அடைப்புகளை அகற்றும் நடவடிக்கையை மேற்கொண்டன. இதன் போது, பாலத்தினுல் நீர் வடிந்து செல்வதற்குத் தடையாகச் சிக்கியிருந்த தாவரப் பகுதிகள் உள்ளிட்ட கழிவுகள் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் அகற்றப்பட்டு, நீர் முறையாக வழிந்தோடத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.










