(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
‘கிளீன் ஸ்ரீ லங்கா’ செயலகமும் சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகாரசபையும் இணைந்து ஏற்பாடு செய்யும் ‘சர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தல் தினம் மற்றும் தேசிய கடல் வளங்கள் பாதுகாப்பு வாரம்’ தேசிய வேலைத்திட்டம் சனிக்கிழமை (2026 செப்டம்பர் 19) காலை பானந்துறை கடற்கரை பிரதேசத்தை மையப்படுத்தி ஆரம்பிக்கப்பட்டதுடன், 2026 செப்டம்பர் 19 ஆம் திகதிக்கு தழுவியுள்ள ‘சர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தல் தினம்’ மற்றும் தேசிய கடல் வளங்கள் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, அனைத்து கடற்படை கட்டளைகளையும் உள்ளடக்கும் வகையில் கடற்கரை தூய்மைப்படுத்தும் தொடர் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு இலங்கை கடற்படை ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
‘கிளீன் ஸ்ரீ லங்கா’ தேசிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நிறுவப்பட்ட ஜனாதிபதி செயலணியின் முதன்மைப் பங்காளியாக இலங்கை கடற்படை தொழிற்பட்டு வருவதுடன், அதன் கீழ் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் மற்றும் “தூய்மையான தேசத்திற்கான தேசிய பிரஜைகளின் பணி” எனும் கருப்பொருளை முன்னிறுத்தி நடைமுறைப்படுத்தப்படும் “அத்தம” தேசிய தூய்மைப்படுத்தல் நாள் வேலைத்திட்டங்கள் உள்ளடங்கலாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு வேலைத்திட்டங்களுக்கு கடற்படை தொடர்ச்சியாக சமூகநலப் பங்களிப்பை வழங்கி வருகின்றது.
அதன்படி, ‘சர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தல் தினம்’ மற்றும் தேசிய கடல் வளங்கள் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு; மேற்கு கடற்படை கட்டளையினால் பானந்துறை கடற்கரை பிரதேசமும், கிழக்கு கடற்படை கட்டளையினால் திருகோணமலை டவுன் பே, மூதூர், கிண்ணியா, செல்லப்புரம், அரிசிமலை, கோபாலபுரம், திரியாய், பணிச்சங்கேணி மற்றும் லங்காபடுன ஆகிய கடற்கரை பிரதேசங்களும், வடக்கு கடற்படை கட்டளையினால் காங்கேசன்துறை கடற்கரை பிரதேசமும், தென்கிழக்கு கடற்படை கட்டளையினால் கார்த்தீவு கடற்கரை பிரதேசமும், தெற்கு கடற்படை கட்டளையினால் காலி தடல்ல மற்றும் அம்பாந்தோட்டை தொடவாய ஆகிய கடற்கரை பிரதேசங்களும், வடமத்திய கடற்படை கட்டளையினால் வங்காலை கடற்கரை பிரதேசமும், வடமேற்கு கடற்படை கட்டளையினால் சின்னப்பாடு, தலவில மற்றும் மொல்லிகுளம் ஆகிய கடற்கரை பிரதேசங்களும் மையப்படுத்தப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த கடற்கரை தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டங்களுக்கு இலங்கை கடற்படையினர் ஏனைய தரப்பினருடன் இணைந்து தமது சமூகநலப் பங்களிப்பை வழங்கினர்.
மேலும், இந்த கடற்கரை தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டத்தின் மூலம், பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உள்ளிட்ட பெருமளவிலான திடக் கழிவுகள் கடற்கரை பிரதேசங்களிலிருந்து அகற்றப்பட்டு முறையாக அப்புறப்படுத்தப்படுவதற்கு கடற்படை பங்களிப்பு வழங்கியது.










