JobVibe.lk - Sri Lanka Job Portal

வெல்லாவெளி பொலிஸ் நிலைய முற்றுகைக்கு பின்பு ஏற்பட்ட திகிலூட்டும் திரைப்படக் காட்சிகள்.

25 வது தொடர்..........

இரண்டாவது ஈழப்போர் ஆரம்பமான தினத்தில், கிழக்கு மாகாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களை LTTE யினர் சுற்றி வளைத்ததில் மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் நிலைய முற்றுகைக்கு பின்பு திகிலூட்டும் சம்பவம் நடந்துள்ளது. 

11.06.1990 அன்று காலை வெல்லாவெளி பொலிஸ் நிலையம் சுற்றி வளைக்கப்பட்டபோது 150 வரையிலான பொலிசார் கடமையில் இருந்துள்ளனர். 

ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு LTTE யினரிடம் சரணடைந்த பொலிசார் அனைவரும் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, அதில் தமிழ் மற்றும் முஸ்லிம் பொலிசாரை மட்டக்களப்பு சிறைச்சாலையில் அடைத்தனர். அப்போது மட்டக்களப்பு சிறைச்சாலை LTTE யினரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. 

ஏனைய சிங்கள பொலிசாரின் கைகள் பின்பக்கமாக கட்டப்பட்டு கொக்கட்டிச்சோலைக் காட்டுப் பகுதியில் தடுத்து வைக்கப்பட்டனர். 

தற்பொழுது கல்முனையில் உதவிப் பொலிஸ் அத்தியஸ்தராக (ASP) கடமைபுரிகின்ற MK. இப்னு அசார் அவர்கள், 1990 இல் பொலிஸ் சேவையில் இணைந்து உதவிப் பொலிஸ் பரிசோதகராக (SI) தனது முதலாவது கடமையை பொறுப்பேற்று வெல்லாவெளி பொலிசில் பணியாற்றியபோது, பொலிஸ் அடையாள அட்டையை பெறுவதற்காக கொழும்பு தலைமை பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டார். 

11.06.1990 காலை வெல்லாவெளி பொலிஸ் நிலையத்திலிருந்து வெளியேறிய ஒரு மணித்தியாலயத்தின் பின்பு குறித்த பொலிஸ் நிலையம் LTTE யினரினால் சுற்றிவளைக்கப்படுகிறது. 

இந்த சம்பவத்தினால் இப்னு அசார், சுற்றிவளைப்பில் அகப்படாமல் மயிரிழையில் தப்பியதுபோன்று ஏராளமான சம்பவங்கள் பலருக்கு நடந்துள்ளன என்பதனை அன்று உயிர் தப்பியவர்கள் மூலமாக அறிய முடிகிறது. 

பின்னாட்களில் இப்னு அசார் அவர்களுக்கு ஏற்பட்ட இதுபோன்றதொரு இன்னுமொரு சம்பவத்தினை இங்கே பதவு செய்கிறேன். தேர்தல் காலங்களில் விசேட கடமைக்காக தனியார் வாகனங்களை வாடகைக்கு அமர்த்துவது பொலிசாரின் வழமை. 

இவ்வாறு வாடகைக்கு விடப்படுகின்ற வாகனங்களில் உரிமையாளருக்குத் தெரியாமல் குண்டுகளை தயார் செய்து முகாம்களுக்குள் அனுப்பும் வழக்கம் LTTE யிடம் இருந்தது. 

அந்தவகையில் 2000ம் ஆண்டு பொதுத் தேர்தல் விசேட கடமைக்காக கல்முனைப் பொலிசார் வெள்ளைநிற வேன் ஒன்றினை வாடகைக்கு பெற்றிருந்தனர். அந்த வாகனத்தில் நேரக் குண்டுகள் பொருத்தப்பட்டிருந்ததனை பொலிசார் அறிந்திருக்கவில்லை.   

2000.09.18 அன்று இரவு நேரத்தில் குண்டு பொருத்தப்பட்டிருந்த வேனில் இன்றைய ASP இப்னு அசார் அவர்கள், கல்முனை பொலிஸ் நிலையத்திலிருந்து சாய்ந்தமருதை நோக்கி கல்முனை எலிபன்ட் கவுஸ் முன்பாக செல்லும்போது, கையிலிருந்த சிகரட்டை மூட்டுவதற்காக, வீதியின் மறுபக்கத்தில் சிகரட் புகைத்துக்கொண்டு வந்த ஒருவரை நோக்கி வாகனத்திலிருந்து இறங்கி சென்ற மறு நொடியில் வாகனத்திலிருந்த குண்டு வெடித்தது. தன்னுடன் வாகனத்திலிருந்த அனைவரும் கொல்லப்பட்ட நிலையில், இப்னு அசார் அவர்கள் மாத்திரம் சிறு காயங்களுடன் மயிரிழையில் உயிர் தப்பினார்.   

நானும், இப்னு அசார் அவர்களும் மோட்டார் சைக்கிலில் சென்றபோது LTTE யினரின் பிஸ்டல் இலக்கிலிருந்து மயிரைழையில் தப்பிய சம்பவங்கள் ஏராளம் உள்ளது. அவைகளை வேறு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன். 

11.06.1990 அன்று வெல்லாவெளி பொலிஸ் நிலையத்திலிருந்து கைகள் பின்பக்கமாக கட்டப்பட்டு கொக்கட்டிச்சோலைக் காட்டுக்குள் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிங்கள பொலிசாரினை இரண்டு LTTE உறுப்பினர்கள் மாத்திரம் காவல்காத்து வந்தனர். 

“நாளைக்கு மருத்துவர்கள் வருவார்கள். இவர்களின் உடலில் உள்ள இரத்தங்கள் எடுக்கப்பட்ட பின்பு எல்லோரையும் போட்டுத் தள்ளுமாறு உத்தரவு வந்துள்ளது” என்று குறித்த LTTE உறுப்பினர் தங்களுக்குள் உரையாடியதை தமிழ் மொழி தெரிந்த சிங்களப் பொலிசார் செவிமடுத்து, அதனை ஏனைய சிங்கள பொலிசாருக்கு எத்திவைத்தார்.   

நாளைக்கு எப்படியும் எங்களிலிருந்து இரத்தத்தை எடுத்துவிட்டு கொன்றுவிடுவார்கள் அதற்குள் முடியானவரை தப்பிக்க முயற்சிப்போம் என்று கட்டப்பட்டிருந்த பொலிசார் திட்டமிட்டனர்.   

இதற்காக உயிரைப் பணயம்வைத்து மிகவும் நுட்பமாக ஒருவரது கைகளை மற்றவர் வாயினால் கழட்டியதுடன், கைகள் கட்டப்பட்டிருப்பது போன்றே கான்பித்துக் கொண்டிருந்தனர். 

இந்த நிலையில், பொலிசாருக்கிடையில் சண்டை பிடிப்பதுபோன்று பாசாங்கு செய்தபோது, காவலுக்கு இருந்த இரண்டு LTTE உறுப்பினர்களும் அருகில் வந்தனர். அப்போது இருவரையும் தாக்கி துப்பாக்கியை பறித்து, அதன்பின்பு இருவரையும் சுட்டுக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்தனர். 

தப்பித்த பொலிசார் காடுகளில் பதுங்கியிருந்து LTTE யினரின் கண்களில் படாதவாறு பல வாரங்களாக காடுகள் மற்றும் வயல் நிலங்கள் ஊடாக உணவின்றி பதுங்கிச் சென்றபோது, அம்பாறையின் “மங்களகம” பொலிஸ் பிரிவுக்குள் சிங்கள விவசாயிகள் வழங்கிய தகவலில் மங்களகம பொலிசாரினால் மீட்கப்பட்டனர். 

இதுபோன்று மட்டக்களப்பு சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த முஸ்லிம், தமிழ் பொலிசாரும் அங்கிருந்து தப்பித்தனர். 

கொக்கட்டிச்சோலை காடு, மட்டக்களப்பு சிறை ஆகியவற்றிலிருந்து தப்பித்த பொலிசாரை கண்டுபிடித்து கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தும், அது LTTE யினரால் முடியவில்லை. 

கிழக்கு மாகாணம் முழுவதும் ஒரே நேரத்தில் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டதன் காரணமாக இறுதி நேரத்தில் LTTE யினருக்கு ஆளணி பற்றாக்குறை ஏற்பட்டிருக்கலாம்.  

இந்த சம்பவங்கள் திரைப்படக் காட்சிகள் போன்று அமைந்துள்ளது.

தொடரும்........... 

முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது




Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال