(எழுத்து : வை.அறபாத்)
ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 23ம் நாள் சவூதி அரேபியா தனது தேசிய தினத்தை (Al-Yaom Al-Watani) பெரும் உற்சாகத்துடனும் பெருமிதத்துடன் கொண்டாடி வருகிறது.
இன்றைய நவீன சவூதி அரேபியா ஒரே இரவில் உருவானதல்ல. பல தசாப்தகாலப்போராட்டங்கள், தியாகங்கள் மற்றும் அரசியல் விழிப்புணர்வுக்குப்பின் பல சிறிய மாகாணங்களையும் பிராந்தியங்களையும் ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட ஒரு மகத்தான நாடாகும்.
18ம் நூற்றாண்டு முதல் முகம்மது பின் சவூத் மற்றும் முகம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் ஆகியோரின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்ட முதல் சவூதி அரசும், அதனைத்தொடர்ந்து இரண்டாம் சவூதி அரசும் பல்வேறு அரசியல் மாற்றங்களைச்சந்தித்தன.
இத்தகைய வரலாற்றுத்திருப்புமுனையில், 1902ம் ஆண்டு ஜனவரி 15 அன்று இளம் வீரரான அப்துல் அஜீஸ் பின் அப்துல் ரஹ்மான் அல் சவூத் அவர்கள் மிகத்துணிச்சலான முறையில் ரியாத் கோட்டையை மீட்டார்.
அதனைத்தொடர்ந்து நஜ்த், ஹிஜாஸ் மற்றும் பிற பிராந்தியங்களை ஒன்றிணைக்கும் நீண்ட நெடிய பயணத்தைத்தொடங்கிய அவர், இறுதியாக 1932 செப்டம்பர் 23 அன்று வெளியிடப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க அரசுப்பிரகடனத்தின் மூலம் நாட்டின் பெயரை 'சவூதி அரேபியா இராச்சியம்' என்று அதிகாரப்பூர்வமாக மாற்றினார். இந்த நாளே இன்று நாட்டின் 96வது தேசிய தினமாக நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
ஒரு நூற்றாண்டுக்கும் குறைவான காலத்தில் பாலைவன பூமியிலிருந்து உலகப்பொருளாதார மற்றும் அரசியல் மையமாக சவூதி அரேபியா உருவெடுத்திருப்பது மானுட வரலாற்றில் ஒரு பொன்னான அத்தியாயமாகும்.
மக்கா மற்றும் மதீனா ஆகிய இரு புனிதத்தலங்களின் பாதுகாவலராகத்திகழும் இந்நாடு, உலகளாவிய இஸ்லாமிய உலகின் ஆன்மீக மையமாக விளங்குவதோடு, தனது பாரம்பரியத்தை எள்ளளவும் கைவிடாமல் நவீன உலகிற்கு தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் துடிப்பான போக்கைக் கொண்டுள்ளது.
குறிப்பாக, இளவரசர் முகமது பின் சல்மான் அவர்களின் 'விஷன் 2030' (Vision 2030) திட்டமானது எண்ணெய் வளத்தை மட்டுமே நம்பியிருந்த பொருளாதார நிலையை மாற்றி, தொழிநுட்பம், சுற்றுலா, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், சுகாதாரம் மற்றும் கல்வி எனப்பல்துறை சார்ந்த பொருளாதாரமாக நாட்டை மாற்றியமைப்பதில் மாபெரும் வெற்றியை ஈட்டித்தந்துள்ளது.
ரியாத் சீசன், உலகளாவிய தொழிநுட்ப மாநாடுகள், பிரம்மாண்டமான நகர்ப்புறக்கட்டமைப்புகள் என சவூதி அரேபியா இன்று உலக நாடுகளின் கவனக்குவியும் கேந்திரமாக மாறியுள்ளது.
வெறும் உள்நாட்டு வளர்ச்சியோடு நின்று விடாமல், உலகளாவிய பொருளாதார இஸ்திரத்தன்மைக்கும் மனிதாபிமான உதவிகளுக்கும் சவூதி அரேபியா வழங்கும் பங்களிப்பு ஈடு இணையற்றதாகும். சர்வதேச எரிசக்தி சந்தையின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் வளரும் மற்றும் இஸ்லாமிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு நிதியுதவிகளை வழங்குவதிலும் இந்நாடு முன்னணியில் திகழ்கிறது.
உலகெங்கிலுமுள்ள இயற்கை இடர்பாடுகள், வறுமை மற்றும் மோதல்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு 'கிங் சல்மான் நிவாரணம் மற்றும் மனிதாபிமான உதவி மையம்' (KSrelief) மூலமாக பில்லியன் கணக்கான டொலர்களை வாரி வழங்கி, மனிதநேயத்தின் முகமாக சவூதி அரேபியா தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. முஸ்லிம் உலகிற்கான எவ்வித நெருக்கடி நிலையிலும், அவர்களின் கல்வி, பொருளாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடுகளுக்கு தொடர்ச்சியான கரங்களை நீட்டி வருகிறது.
அதேவேளையில், பாலஸ்தீன விவகாரத்திலும் என்றும் மாறாத அதீத கரிசனையோடும் உறுதியோடும் நிலைத்து நிற்கிறது. சர்வதேச அரங்குகளில் பாலஸ்தீன மக்களின் நியாயமான உரிமைகளுக்காகவும் கிழக்கு ஜெரூசலேமை தலைநகரமாகக்கொண்ட சுதந்திர பாலஸ்தீன நாட்டை உருவாக்குவதற்காகவும் ஏனைய உலக நாடுகளின் ஆதரவைத்திரட்டுவதில் சவூதி அரேபியா தொடர்ச்சியாகவும் ஆணித்தரமாகவும் குரல் கொடுத்து வருகிறது.
இத்தகைய வியத்தகு வளர்ச்சிகளையும் உலகளாவிய நற்பெயரையும் சவூதி அரேபியா அடைந்திருந்தாலும், கடந்த காலங்களிலும் சரி, தற்போதும் சரி, அது பல பூகோள அரசியல் சவால்களை எதிர்கொண்டு தான் வருகிறது.
குறிப்பாக, நாட்டின் தெற்கு எல்லையில் அமைந்துள்ள எமன் நாட்டில் நிலவும் போர்ச்சூழல் மற்றும் அங்கிருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மூலமாக தொடுக்கப்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதன் அமைதிக்குப்பரிசோதனை முயற்சிகளாக அமைகின்றன.
எனினும், தனது நாட்டின் இறையாண்மையையும் பிராந்திய இஸ்திரத்தன்மையையும் காக்க சவூதி அரேபியா இச்சவால்களை மிகுந்த உறுதியுடனும் தற்காப்புத்திறனுடனும் எதிர்கொண்டு வருகிறது.
வரலாற்றில் எத்தனையோ நெருக்கடிகளைத்திறம்படக் கடந்ததைப்போல, இத்தற்காலப்பாதுகாப்புக் சவால்களிலும் சவூதி அரேபியா முழுமையான வெற்றியடையுமென்பதில் ஐயமில்லை.
சவூதி அரேபியாவின் வளர்ச்சியும் பாதுகாப்பும் ஏதோ ஒரு நாட்டின் விவகாரம் மட்டுமல்ல, அது ஒட்டுமொத்த உலகளாவிய முஸ்லிம் சமூகத்தின் பெருமையுடனும் மாண்புடனும் பின்னிப்பிணைந்துள்ளது.
அதன் பாதுகாப்பும் இறையாண்மையும் சோதிக்கப்படும் போதெல்லாம், உலகெங்கிலுமிருக்கும் முஸ்லிம் சமூகம் ஒட்டுமொத்தமாக சவூதியுடன் உறுதுணையாக நிற்கிறது.
சவூதி அரேபியா தனது அமைதி முயற்சிகளிலும், நீடித்த வளர்ச்சியிலும் மேலும் பல உன்னத உயரங்களை எட்டவும், அதன் எதிர்காலம் எப்போதும் செழித்தோங்கவும் மனதார வாழ்த்துகிறோம்.

