புத்தளம் ஹிதாயத் நகர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞரான பதுருதீன் முஹம்மட் பவாஸ் அவர்கள், கல்வி மற்றும் தொழில் துறைகளில் தொடர்ச்சியாகப் பல்வேறு சாதனைகளைப் படைத்து, தனது கிராமத்திற்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இவர், தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை புத்தளம் ஹிதாயத் நகர் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் பயின்று, பின்னர் புத்தளம் கடையாமோட்டை தேசியப் பாடசாலையில் உயர்தர (வர்த்தகப் பிரிவு) கல்வியைத் தொடர்ந்து, 3A சித்திபெற்று சிறப்பான பெறுபேற்றைப் பதிவு செய்தார்.
மேலும், ஹிதாயத் நகர் கிராம வரலாற்றில் வர்த்தகப் பிரிவில் 3A சித்தி பெற்ற முதல் மாணவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, இலங்கை வயம்ப பல்கலைக்கழகத்தின் 21ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவில், கணக்கியல் மற்றும் வணிக நிதி (Bachelor of Science in Accountancy and Business Finance) பட்டத்தை வெற்றிகரமாகப் பெற்றுள்ளார்.
தற்போது அவர் ஆசிரியர், விரிவுரையாளர், கணக்காளர் மற்றும் முகாமையாளர் ஆகிய பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி வருகிறார்.
கல்விச் சேவையிலும் அவர் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகிறார். குறிப்பாக, கணிதப் பாடத்தில் பல மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெறுவதற்கு வழிகாட்டியாக இருந்து வருகிறார். மேலும், ஹிதாயத் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக பல ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் உழைத்து, ஆலோசனைகள், வழிகாட்டல், மேலதிக வகுப்புகள் மற்றும் தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சிகள் மூலம் பல மாணவர்களின் எதிர்காலத்தை வளப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இவரது கடின உழைப்பு, விடாமுயற்சி, கல்வியின் மீதான அர்ப்பணிப்பு மற்றும் சமூகப் பொறுப்புணர்வு ஆகியவை இளம் தலைமுறையினருக்கு சிறந்த முன்மாதிரியாக அமைந்துள்ளன. கிராமப்புற மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் தொழில்முறை வெற்றிகளை அடைய முடியும் என்பதை தனது வாழ்க்கைப் பயணத்தின் மூலம் அவர் நிரூபித்துள்ளார்.
பதுருதீன் முஹம்மட் பவாஸ் அவர்களுக்கு சமூகத்தின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகள் தெரிவிக்கப்படுகின்றன. எதிர்காலத்திலும் கல்வி, தொழில் மற்றும் சமூகச் சேவைகளில் மேலும் பல உயரிய சாதனைகளைப் படைத்து நாட்டிற்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்க்க அனைவரும் வாழ்த்துகின்றனர்.
நாமும் அவரது எதிர்காலம் சிறந்து விளங்க எமது மதுரங்குளி மீடியா சார்பில் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
