எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் நகரை சேர்ந்த ரஷா ஹிப்ஸுல் ரஹ்மான், அமெரிக்காவின் நோட்ரே டேம் சட்டப் பள்ளியில் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தில் முதுகலை சட்டப் பட்டத்தை (L.L.M.) சிறப்புத் சித்தியுடன் (cum laude) பெற்றுள்ளார்.
ரஷா தனது பள்ளிப்படிப்பை புத்தளம் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியில் தரம் 01 முதல் 13 ஆம் வரை பயின்றார். உயர்தரப் பரீட்சையை நிறைவு செய்ததை தொடர்ந்து, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் சட்டத் துறையில் சட்ட இளங்கலைப் பட்டப்படிப்பை (LL.B.) மேற்கொள்ளத் தெரிவு செய்யப்பட்டார்.
பட்டப்படிப்பை முடித்த பிறகு, அவர் சட்டத்தரணிக்கான பரீட்சையில் தேர்ச்சி பெற்றதுடன், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சட்டத் துறை உதவி விரிவுரையாளராகப் பணியாற்றினார்.
வெளிநாட்டில் முதுகலைப் படிப்பைத் தொடர புலமைப்பரிசில்களுக்கு விண்ணப்பித்து வந்த நிலையில், அமெரிக்காவின் சிறந்த 20 சட்டப் பள்ளிகளில் ஒன்றான நோட்ரே டேம் பல்கலைக்கழகத்தில் முழுமையான புலமைப்பரிசிலைப் பெற்றதைத் தொடர்ந்து, அப்புலமைப்பரிசிலின் பிரகாரம் கடந்த ஆண்டு தனது முதுகலை படிப்பை நோத்ரே டேமில் தொடங்கினார்.
சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தில் LL.M. கற்கைநெறிக்காகத் தெரிவு செய்யப்பட்ட 10 பேர்கொண்ட மாணவர் குழுவில் அவரும் ஒருவராக இருந்தார்.
நோட்ரே டேமில், அவர் 'Notre Dame Journal of International & Comparative Law' இதழின் மாணவர் இதழாசிரியராகவும் (Staff Editor), 'Global Human Rights Clinic' இல் மாணவர் பயிற்சியாளராகவும் (Student Intern) பணியாற்றினார்.
மேலும், பிரேசிலின் பிரேசிலியா நகரில் நடைபெற்ற 'Inter-American Court of Human Rights' இன் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பொதுக் கருத்துக் கேட்பிலும் (public hearing) அவர் கலந்துகொண்டார்.
சிறிய நகரங்களைச் சேர்ந்த பெண்கள் மற்றும் முதற் தலைமுறை பட்டதாரிகள், தங்கள் உடனடிச் சூழலுக்கு அப்பால் உள்ள வாய்ப்புகளை நம்புவதற்கு ஊக்கமளிக்கும் விருப்பமே தனது பயணத்தை வடிவமைத்ததாக ரஷா கூறினார்.
சிறிய நகரங்களிலிருந்து வரும் மாணவர்கள் மற்றும் முதற்தலைமுறை பட்டதாரிகள், தாம் வாழும் பௌதீக மற்றும் சமூகச் சூழல்களுக்குள்ளேயே தம்மை சுருக்கிக்கொள்ளச்சொல்லும் உள் மனக்குரல்கள் மற்றும் சுயசந்தேகங்களுக்கு எதிராக போராட வேண்டியிருப்பதையும் அவற்றை தாண்டிய வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்பதை தொடர்ந்து நினைவூட்டிக்கொள்ளவேண்டியிருப்பதையும் அவர் நினைவு கூர்ந்தார்.
இந்த சவால் மிக்க பயணம் தனது குடும்பத்தாரின் தொடர்ச்சியான ஆதரவின்றி சாத்தியப்பட்டிருக்காது என்பதை தெரிவித்துக்கொண்டதோடு தனது எல்லைகளை விரிவுபடுத்திக்கொள்ளத் தன்னை நம்பி ஆதரவளித்த பெற்றோர், கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு அவர் நன்றியைத் தெரிவித்தார். அத்துடன், புத்தளம், யாழ்ப்பாணம் மற்றும் நோட்ரே டேமில் தனக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்த அனைத்து ஆசிரியர்களுக்கும் அவர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறார்.
