JobVibe.lk - Sri Lanka Job Portal

இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரியின் 'மரநடுகை திட்டம் 2026'

பெண் கல்வி விருத்தியினூடாக சமூகங்களை வலுவூட்டுவதையும் சிறந்ததோர் எதிர்காலத்தை கட்டியெழுப்புவதையும் நோக்காகக் கொண்டு இயங்கும் இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரியின் 'மரநடுகை திட்டம் 2026' (Tree Planting Project 2026) இற்கு மரக்கன்றுகள் கையளிக்கும் விசேட நிகழ்வு 29.06.2026 (திங்கள்) அன்று கல்லூரியின் 'ஸாமில்' (Zaamil) கேட்போர் கூடத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இலங்கை முஸ்லிம்களுக்கான உலக மன்றத்தின் கனடா கிளை (World Forum for Sri Lankan Muslims - Canadian Chapter) இன் அனுசரணையுடனும் 'Tree for Mercy Foundation' அறக்கட்டளை citigardens நிறுவனம் ஆகியவற்றின் பங்களிப்புடனும் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. உணவுப் பாதுகாப்பு, உலகளாவிய ரீதியில் சூழல் சமநிலையை பேணல் மற்றும் வருமான உற்பத்தி வழிகளை மேம்படுத்தல் ஆகிய இலக்குகளை மையமாகக்  கொண்டு கல்லூரியின் 26 ஏக்கர் நிலப்பரப்பை அபிவிருத்தி செய்யும் வகையில் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வின் போது 800 மரக்கன்றுகள் கல்லூரிக்கு கையளிக்கப்பட்டன. இவற்றுள் 500 தென்னங் கன்றுகளும் 300 பல்வகை கனிதரும் மரக்கன்றுகளும் உள்ளடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  அத்துடன், நன்கொடையாளர்கள் சார்பாக 'Citigardens', 'Tree for Mercy Foundation' அமைப்புகளின் நிறுவனர் ஹிள்ரு சித்தீக் அவர்கள் நிகழ்நிலையூடாக (online) இணைந்து விசேட உரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில், இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரி முகாமைத்துவ சபை தலைவர் எச். அஜ்மல், கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் எம்.ஏ.எல்.எம். பஸ்லுல் பாரிஸ் (நளீமி) ஆகியோருடன்  தோட்ட அபிவிருத்தி குழு உறுப்பினர்களான சகோதரர் அலிசிமாக், சகோதரர் நஸீர், கல்லூரியின் பிரதி அதிபர், தற்போதைய மற்றும் முன்னாள் முகாமையாளர்கள், விரிவுரையாளர்கள்,  பழைய மாணவியர் அமைப்பின்  தலைவி அஷ்ஷெய்கா நும்ரா ஸாஜிதா (இஸ்லாஹி), உத்தியோகத்தர்கள், மாணவிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

'இன்றைய நாளில் ஒரு மரத்தை நடுவோம்; அதுவே நாளைக்கான சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும்' என்ற கருத்திற்கு அமைய இத்திட்டத்தின் மூலம் நடப்படும் மரங்கள் எதிர்காலத்தில் கல்லூரியின் பொருளாதார மற்றும் சுற்றாடல் தேவைகளுக்குப் பெரும் பங்களிப்பை வழங்கும் என பலராலும் பாராட்டப்பட்டது.

"World Forum for Sri Lankan Muslims - Canadian Chapter', 'Citigardens', மற்றும் 'Tree for Mercy Foundation ஆகிய தொண்டு நிறுவனங்களுக்கும் அதன் நிருவாகிகள் மற்றும் அங்கத்தவர்களுக்கும் எமது நன்றியை தெரிவிப்பதோடு அவர்களுக்காக வல்ல இறைவனிடம் பிரார்த்தித்துக்கொள்கிறோம்.












Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال