சம்மாந்துறை பிரதேச சபையில் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு முன்வைக்கப்படும் கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுகின்றன : பிரதேச சபை உறுப்பினர் எம்.சி. நௌஸா குற்றச்சாட்டு
நூருல் ஹுதா உமர்
சம்மாந்துறை பிரதேச சபையில் உள்ள உறுப்பினர்களின் கருத்துகளும், மக்களின் தேவைகளை அடிப்படையாகக் கொண்ட முன்மொழிவுகளும் உரிய கவனத்தைப் பெறாமல் புறக்கணிக்கப்படுவதாக சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் எம்.சி. நௌஸா குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,
“ஒரு தவிசாளர் தனது சபையில் உள்ள அனைத்து உறுப்பினர்களையும் சமமாக வழிநடத்தி, அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும் வளங்களையும் வாய்ப்புகளையும் சமமாகப் பகிர்ந்தளித்து, மக்களுக்கான சேவைகளை முன்னெடுக்க வேண்டும். ஆனால் சம்மாந்துறை பிரதேச சபையில் அத்தகைய நடைமுறை காணப்படவில்லை.
மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஆர்வத்துடனும், சமூகத்திற்கு பயனுள்ள திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும் மக்கள் பிரதிநிதியாக நான் இந்த சபைக்கு வந்தேன். ஆனால் இங்கு வந்து பார்த்தபோது மக்களின் நலனை முன்னிறுத்திய பல முன்மொழிவுகள் நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பது மிகுந்த மனவேதனையையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சபை அமர்வொன்றில் நான் ‘பெண்கள் வலுவூட்டல்’ தொடர்பான பிரேரணையை முன்வைத்தேன். சம்மாந்துறையின் பின்தங்கிய பகுதிகளில் சுயதொழில் மேற்கொண்டு வரும் பெண்கள் மற்றும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த முன்மொழிவு கொண்டுவரப்பட்டது. ஆடு வளர்ப்பு, நெசவு, ஆடைத் தயாரிப்பு, சிறு கைத்தொழில்கள் உள்ளிட்ட பல துறைகளில் பயிற்சிகளும் ஊக்குவிப்புகளும் வழங்கப்பட்டால் பெண்களின் பொருளாதார நிலை உயர்வதோடு, வறுமையையும் குறைக்க முடியும் என்பதை விரிவாக விளக்கியிருந்தேன்.
இந்தப் பிரேரணை சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட போதிலும், இதுவரை அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. இது எனக்கு பெரும் கவலையையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நானே ஒரு சுயதொழில் முயற்சியாளராக இருந்து, பல்வேறு பயிற்சிகளும் ஊக்குவிப்புகளும் மூலம் முன்னேறிய அனுபவம் கொண்டவன். அதேபோல் பின்தங்கிய பெண்களும் முன்னேற வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த முன்மொழிவை கொண்டுவந்தேன்.
அதுமட்டுமல்லாமல், மகளிர் தினம், அன்னை தினம் போன்ற சந்தர்ப்பங்களில் பெண்கள் வலுவூட்டல் தொடர்பான நிகழ்ச்சிகளை சபையின் ஊடாக நடத்த வேண்டும் என உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தபோதும் அதற்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை.
சபையில் நாம் சிறுபான்மை உறுப்பினர்களாக இருப்பதால் எங்களது கருத்துகளும் கோரிக்கைகளும் ஓரங்கட்டப்படுகின்றன. இது ஜனநாயகத்திற்கும் மக்கள் பிரதிநிதித்துவத்திற்கும் பொருந்தாத நிலையாகும்.
மேலும், எங்களது பிரதேசத்தில் சேதமடைந்துள்ள ஒரு முக்கிய பாலம் தொடர்பாக பலமுறை கவனம் செலுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆரம்ப கட்டத்திலேயே சிறிய செலவில் சீரமைக்கக்கூடியதாக இருந்த அந்தப் பாலம் இன்று பெருமளவில் சேதமடைந்துள்ளதால் மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். பெரிய வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான பல விடயங்களில் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு முன்வைக்கப்படும் கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுகின்றன. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பெரும்பான்மை பலத்தை பயன்படுத்தி எங்களை ஓரங்கட்டும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக நான் கருதுகிறேன்.
நான் பல பெண்கள் வலுவூட்டல் பயிற்சித் திட்டங்களில் பங்கேற்றுள்ளேன். நாட்டின் பல பகுதிகளில் உள்ள உள்ளூராட்சி சபைகள் பெண்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுத்து வருகின்றன. ஆனால் சம்மாந்துறை பிரதேச சபையில் அத்தகைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படாததன் காரணம் என்ன என்பது கேள்விக்குறியாக உள்ளது.
பெண்களின் முன்னேற்றம் மற்றும் அவர்களின் பொருளாதார வலுவூட்டலுக்கு தேவையான முக்கியத்துவத்தை தற்போதைய நிர்வாகம் வழங்கவில்லை என்பதை நான் ஆணித்தரமாக சுட்டிக்காட்ட விரும்புகிறேன்” என்றார்.


No comments