(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
கற்பிட்டி கீரிமுந்தல் மீனவ கிராமத்தை கடல் அரிப்பின் கோரப்பிடியிலிருந்து பாதுகாப்பதற்கான தற்காலிக முன்னோடி நடவடிக்கையாக கீரிமுந்தல் கடற்கரையில் மண் வேலி அமைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்
கடலரிப்பு காரணமாக பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ள கீரிமுந்தல் (டச்பே) மீனவ கிராமத்தை பாதுகாத்து தருமாறு கீரிமுந்தல் கிராமிய மீனவ அமைப்பின் தலைவர் தினேஷ் சுரஞ்சன் பெர்னாண்டோவின் தொடர்ச்சியான வேண்டுகோளுக்கு அமைய கரையோர வள பாதுகாப்பு திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் தற்காலிக மண் வேலி அமைக்கும் வேலைத்திட்டம் கற்பிட்டி பங்குத்தந்தை மற்றும் உதவிப் பங்குத்தந்தைகளான குரூஸ் அடிகளாரின் தலைமையில் இறை வழிபாடுகளுடன் இப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது
இயற்கைச் சீற்றத்திடமிருந்து தங்களது கிராமத்தையும், கடற்கரையையும் பாதுகாக்க வேண்டும் என்ற ஒரே இலக்கோடு கீரிமுந்தல் ( டச்பே) மீனவ கிராம மக்கள் இவ் வேலைத்திட்டத்திற்காக ஒன்று திரண்டனர் கரையோர வள பாதுகாப்பு திணைக்களத்தின் கற்பிட்டி பிரதேச காரியாலய அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையின் கீழ் கீரிமுந்தல் (டச்பே) கிராமிய மீனவ அமைப்பின் பங்குபற்றுதலுடன் மிகவும் திட்டமிட்டபடி தரம் வாய்ந்ததாக சுமார் 80 மீட்டர் நீளம் கொண்டதும் 10 அடி அகலத்தை கொண்டதாக இந்த
மண் வேலி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆலய நிர்வாக சபையினர், மீனவ சங்கத் தலைவர் மற்றும் அதன் முக்கிய உறுப்பினர்கள் கீரிமுந்தல் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் இளைஞர்களின் ஒற்றுமையும் அர்ப்பணிப்பும் ஒட்டுமொத்த கரையோர பகுதி மக்களுக்கும் ஒரு முன்மாதிரியாக அமைந்துள்ளது.
இந்த மண்வேலி அமைக்கும் பணி நிறைவடையும் பட்சத்தில், இப்பகுதியில் நிலவி வரும் கடல் அரிப்பு அபாயம் தற்காலிகமாக கட்டுப்படுத்தப்படும் என பொதுமக்களும் அதிகாரிகளும் நம்பிக்கை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





