சிலாபம் கடலில் 2000 கிலோவுக்கும் அதிகமான பீடி இலைகளுடன் 10 சந்தேக நபர்கள் கைது
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
சிலாபம் கடற்பகுதியை உள்ளடக்கி இலங்கை கடற்படையால் செவ்வாய்க்கிழமை (28) அன்று நடத்தப்பட்ட ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கடத்த முயன்ற சுமார் இரண்டாயிரம் 2000 கிலோவுக்கும் அதிகமான பீடி இலைகளை ஏற்றிச் சென்ற ஒரு இந்தியக் மீன்பிடிப் படகுடன் நான்கு (04) இந்திய சந்தேக நபர்களையும், மேலும், மேற்கூறிய பீடி இலைகளை நாட்டிற்குள் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மூன்று (03) இலங்கை படகுகளுடன் ஆறு (06) சந்தேக நபர்களையும் கடற்படையால் கைது செய்ய முடிந்தது.
சிலாபம் கடற்பகுதியில் இலங்கை கடற்படைக் கப்பல் ஒன்று நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, அப்பகுதியில் சட்டவிரோதமாக பயணித்துக்கொண்டிருந்த ஒரு இந்தியக் படகும், மூன்று (03) சந்தேகத்திற்கிடமான உள்ளூர் படகுகளும் ஆய்வு செய்யப்பட்டன. இந்திய மீன்பிடிப் படகிலிருந்து இலங்கை படகுகளுக்கு மாற்றப்பட்டுக் கொண்டிருந்த ஐம்பத்து நான்கு (54) சந்தேகத்திற்கிடமான பைகள் ஆய்வு செய்யப்பட்டன, மேலும் அந்தப் பைகளில் பொதிசெய்யப்பட்டு, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட சுமார் இரண்டாயிரம் 2000 கிலோவுக்கும் அதிகமான பீடி இலைகள் கடற்படையால் கைப்பற்றப்பட்டன.
மேலும், இந்த நடவடிக்கையின் போது கடற்படையால் கைப்பற்றப்பட்ட இந்திய நாட்டுக் சந்தேக நபர்கள் 18 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள் எனவும், இலங்கை சந்தேக நபர்கள் கற்பிட்டியைச் சேர்ந்தவர்கள் என்றும், 21 முதல் 42 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டனர்.
அதன்படி, கடற்படையால் கைப்பற்றப்பட்ட சந்தேக நபர்கள், டிங்கி படகுகள் மற்றும் பீடி இலைகள் ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கொழும்பு துறைமுக சுங்க அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.





No comments