"மினாராவின் நிழலில்: ஒரு மௌலவியின் கதை" - தொடர் - 01
பஜ்ருடைய அதான் ஓசை காற்றில் தவழ்ந்து வருவதற்கு முன்னரே, மினாராவின் நிழலில் அந்தப் பழைய பள்ளிவாசலின் கதவுகள் திறக்கப்படுகின்றன. கையிலிருந்த மொபைல் போன் லைட் வெளிச்சத்தில், ஜலீல் மௌலவி நிழல் நீண்டதாக விழுந்தது. அது வெறும் நிழலல்ல, அந்த ஊரின் ஆன்மீகச் சுமைகளைத் தாங்கி நிற்கும் ஒரு மனிதனின் பாரம்.
வெள்ளை நிற சேட், எந்நேரமும் புன்னகை தவழும் முகமும்தான் ஊர் மக்களுக்குத் தெரியும். ஆனால், அந்தப் புன்னகைக்குப் பின்னால் எத்தனை தியாகங்களும், சமரசங்களும் மறைந்து கிடக்கின்றன என்பது அந்த மினாராவிற்கு மட்டுமே வெளிச்சம்.
கெகுணகொல்லை...
இந்த ஊரின் அதிகாலைகளுக்கு எப்போதும் ஒரு தனி சுதி உண்டு. பனிமூட்டம் கலையாத அந்தப் பொழுதில், ஜன்னல் வழியே புகுந்து வரும் அந்த 'பாங்கு' சத்தம் எங்களை மட்டுமல்ல, ஊரையே அரவணைக்கும்.
சுமார் 35 வருடங்கள்... அந்த மினாராக்களில் ஒலித்தது என் தந்தை ஜலீல் மௌலவியின் குரல். அது வெறும் தொழுகைக்கான அழைப்பல்ல; இந்த ஊருக்கான ஒரு தார்மீகக் காவல்.
அவர் எனக்கு வெறும் தந்தையல்ல; நான் பார்த்து வளர்ந்த ஒரு வாழும் கலைக்களஞ்சியம். முப்பதாண்டு காலமாய் என்னை ஒரு கண்ணாடிப் பாவையைப்போலப் பார்த்துப் பார்த்து வளர்த்தவர்.
"ஹஸ்ரத்... கொஞ்சம் நில்லுங்க!"
அதான் சொல்லிவிட்டு வெளியே வந்தவரை மறித்தார் ஜமாத் உறுப்பினர் ஒருவர். விடியும் முன்பே ஏதோ ஒரு புகார் அல்லது ஒரு தேவை.
மௌலவி என்பவர் வெறும் பாங்கு சொல்லி தொழுகை நடத்துபவர் மட்டுமல்ல; அவர் அந்த ஊரின் ஆலோசகர், நீதிபதி, உளவியல் மருத்துவர், சில நேரங்களில் எளிய சேவகன். ஆனால், இத்தனை பாத்திரங்களை ஏற்று நடிக்கும் அந்த மனிதனுக்குள்ளும் ஒரு தனி உலகம் இருக்கிறது.
ஆயிரம் பேருக்கு ஆறுதல் சொல்லும் மௌலவிக்கு, ஆறுதல் சொல்ல யாருமே இல்லையா? மினாராவின் நிழலில் ஒதுங்கியிருக்கும் அந்த வாழ்க்கை அத்தனை எளிதானதா?
இன்று அந்த மினாராவைப் பார்க்கிறேன். பாங்கு ஒலிக்கிறது... ஆனால் என் தந்தையின் குரல் மட்டும் மௌனமாகி ஒரு வருடம் ஓடிவிட்டது.
இன்று அவர் நினைவுகளாக மட்டுமே என்னோடு இருக்கிறார். தந்தையின் அந்தப் பயணத்தை, அவர் எனக்குக் கற்பித்த பாடங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளப் போகிறேன்...
வரும் 30 நாட்களும் என் வாப்பாவின் நிழலில் நான் பயணித்த கதையைச் சொல்கிறேன்.
பல உண்மைகள் கலந்த கற்பனை சிறுகதை தொடர் என்பதால் அப்துல்லாஹ் ஹஸ்ரத் என்ற பெயரில் இந்தக்கதையின் கதாபாத்திரத்தை தொடர்கிறேன்..
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
ரிம்சி ஜலீல்-
04.05.2026

No comments