புத்தளம் தள வைத்தியசாலையில் முள்ளந்தண்டு நேராக்கல் (Scoliosis Correction) சத்திரசிகிச்சை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் தள வைத்தியசாலையில் இடம்பெற்ற முள்ளந்தண்டு நேராக்கல் (Scoliosis Correction) சத்திரசிகிச்சை புத்தளம் வைத்தியசாலையில் கடந்த மார்ச் 25 அன்று முள்ளந்தண்டு நேராக்கல் சத்திரசிகிச்சை (Scoliosis Correction) ஒன்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், பதுளை மற்றும் இரத்தினபுரி போன்ற ஒரு சில வைத்தியசாலைகளில் மாத்திரம் மேற்கொள்ளப்படும் இவ்வகையான சத்திரசிகிச்சை புத்தளத்தில் முதன்முறையாக இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த சில மாதங்களாக முள்ளந்தண்டு சத்திர சிகிச்சைகள் இங்கு இடம்பெற்றுவந்தபோதிலும் முள்ளந்தண்டு நேராக்கல் (Scoliosis Correction) சத்திர சிகிச்சை, புத்தளம் தள வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
என்பு முறிவு விசேட வைத்திய நிபுணர் ஷெஸார் ஹமீத் தலைமையில் இடம்பெற்ற இந்த சத்திர சிகிச்சைக்கு, சிரேஷ்ட என்பு முறிவு விசேட வைத்திய நிபுணர்களான தேசிய வைத்தியசாலையை சேர்ந்த டாக்டர் உதை டி சில்வா மற்றும் லேடி ரிஜ்வே வைத்தியசாலையின் டாக்டர் நிர்மல் மாரசிங்ஹ ஆகியோரும் வருகை தந்திருந்தனர்.
நினைவிழக்க செய்யும் விசேட வைத்தியராக சரிந்த, தனது பணியை செவ்வனே நிறைவேற்றியுள்ளார்.
40 லட்சம் ரூபாவுக்கும் அதிகம் செலவாகும் இந்த சிகிச்சை முற்றிலும் இலவசமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள தளவைத்தியசாலைகளில் (Base Hospitals) இதுவரை இந்த சத்திர சிகிசிச்சை மேற்கொள்ளப்படவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
இவ்வாறான சத்திரசிகிச்சை புத்தளத்தில் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படவிருப்பதாகவும் தெரியவருகிறது.





No comments