ஈரான்–அமெரிக்க மோதல்: சவூதி, ஈரான் போன்ற அரேபிய நாடுகள் அனுவாயுத நாடுகளாக மாறும் நிலை ஏற்படலாம் : முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் கருத்து
நூருல் ஹுதா உமர்
ஈரான்- அமெரிக்க பேச்சுவார்த்தை தோல்வியோ வெற்றியோ சவூதி, கட்டார், பஹ்ரேன், குவைத் போன்ற நாடுகள் நாங்கள் பாரிய ஆயுத உற்பத்திகளை செய்ய வேண்டும், அணுவாயுதம் தயாரிக்க வேண்டும், ஏவுகணை தயாரிக்க வேண்டும் என்பதை அரச கொள்கையாக இனிவரும் காலங்களில் எடுத்துக்கொள்வார்கள். மேலும், சமீபத்தில் ஈரான் மற்றும் சவூதி அரேபியாவுக்கு இடையிலான வெளிவிவகார மட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளது. அமெரிக்கா தேவையான தொழில்நுட்ப மற்றும் ஆயுத ஆதரவை சவூதிக்கு வழங்காவிட்டால், மாற்று கூட்டணிகளை தேடி ஈரானுடன் சேர்ந்து பயணிக்க வேண்டிய நிலை உருவாகலாம் எனும் எச்சரிகையை சவூதி அமெரிக்காவுக்கு கூறும் நிலை உருவாகும். இப்போதைய மோதலின் பின்னணியில் ராஜதந்திர சிக்கலில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சிக்கப்போகிறார் என்பதே வெளிப்படை உண்மை என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.
மறைந்த ஊடகவியலாளர் மர்ஹூம் ஏ. எல். எம். சலீம் அவர்களின் இழப்பு குறித்து நினைவுகூர்ந்த நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர்,
உலகில் 180-க்கும் மேற்பட்ட நாடுகள் உள்ள நிலையில், பல நாடுகளிலும் இஸ்ரேலை எதிர்மறையாக பார்க்கும் மனநிலை உருவாகி வருவதாக இஸ்ரேல் பிரதமரே பகிரங்கமாக ஒத்துக்கொள்கிறார். ஸ்பெயின், இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் வாழும் யூத மக்களும் அரசின் நடவடிக்கைகளை விமர்சித்து வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. ஈராக்கில் சதாம் ஹுசைனையும், லிபியாவில் கடாபியையும் அழிக்க அமெரிக்காவுக்கு நேட்டோ நாடுகள் உதவிக்கு வந்தது. இப்படியான போர்களில் முதல் ஆளாக பிரித்தானிய படைகளும், அதனை தொடர்ந்து பிரான்ஸ், அவுஸ்திரேலிய போன்ற நாடுகளின் படைகள் போருக்கு வரும். 45 நாடுகளுக்கு மேல் அமெரிக்காவுக்கு ஆதரவாக களமிறங்குவார்கள். ஆனால் இப்போது நிலை தலைகீழாக மாறியிருக்கிறது.
அமெரிக்க பிழை செய்கிறது. ஈரான் பக்கம் நியாயம் இருக்கிறது என்று உலக நாடுகள் கூறிய முதல் சந்தர்ப்பம் இதுவாகும். மேலும், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் முதன்முறையாக, அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு எதிராக சில ஐரோப்பிய தலைவர்கள் திறந்தவெளியில் கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். ஈரானின் நிலைப்பாட்டை உலகிற்கு எடுத்துச் செல்லும் பணியில் சர்வதேச ஊடகங்களின் பங்கு முக்கியமானதாக இருந்துள்ளது. இந்த தலைகீழான சர்வதேச அரசியல் நிலைப்பாடுகளுக்கு ஊடகங்களே பிரதான காரணம்.
பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ள இந்த காலகட்டத்தில் இந்த மோதலின் அடுத்த பரிணாமம் முக்கிய பல செய்திகளை உலகுக்கு சொல்லியுள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் அமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய புதிய உலக ஒழுங்கை உருவாக்கும் வாய்ப்பை உருவாக்கியுள்ளதாகவும், ஜெர்மனி, இந்தியா உள்ளிட்ட நாடுகள் நீண்ட காலமாக கோரி வரும் நிரந்தர உறுப்புரிமை (வீட்டோ அதிகாரம்) தொடர்பான விவாதங்கள் மீண்டும் தீவிரமடையக்கூடும். ஈரான், சவூதி அரேபியா போன்ற நாடுகள் கூட இனிவரும் காலங்களில் வீட்டோ அதிகாரம் கோரும் நிலை உருவாகும்.
அதேவேளை, வளைகுடா நாடுகள் தமது மொத்த வருமானத்தில் இதுவரை நகர அபிவிருத்தி, உலகளாவிய விளையாட்டு விழாக்கள் போன்றவற்றில் அதிக நிதி ஒதுக்கியிருந்த போதிலும், தற்போதைய சூழலில் பாதுகாப்பு மற்றும் ஆயுத வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. அதனால் எதிர்காலங்களில் சவூதி அரேபியா, கட்டார், பஹ்ரைன், குவைத் போன்ற நாடுகள் அணு ஆயுதம் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு திறன்களை உருவாக்க வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது, இது எதிர்கால அரசியல் கொள்கைகளில் பிரதிபலிக்கக்கூடும். தங்களை அணுவாயுத நாடாக மாற்றிக்கொள்ள சவூதி அரேபியா போன்ற நாடுகள் முற்படலாம். இஸ்ரேல் அதற்கான விலையை செலுத்தியே ஆக வேண்டும்
சவூதி, கட்டார், பஹ்ரேன் போன்ற நாடுகளை தாக்கும் ஈரானின் ஏவுகணைகள் தந்தை மகனுக்கு பாடம் நடத்துவது போன்றே எனது பார்வையில் இருக்கிறது. நீச்சல் தடாகங்களையும், கட்டிடங்களையும், வீதிகளையும் நிர்மாணித்துக்கொண்டிருந்த நாடுகள் இப்போது ஆயுதக்கிடங்குகளை நிர்மாணிக்க வேண்டிய நிலைக்கு இந்த யுத்த அவர்களை தள்ளியுள்ளது. இதனை டொனால்ட் ரம்ப் மறுக்கவும் முடியாது.
ஈரானின் தாக்குதலுக்கு நாங்கள் ஈடுகொடுக்க தயாரில்லாது போனால் அகன்ற ஈரான் தேசம் உருவாகுவதை எங்களால் தடுக்க முடியாது. அதனால் அணுவாயுத தயாரிப்புக்களை நீங்களே வந்து எங்களுக்கு தயாரித்து தாருங்கள் என மேற்கத்தைய தலைவர்களிடம் கேட்கும் நிலைக்கு அரேபிய தலைவர்களை இந்த யுத்தம் தள்ளியுள்ளது. இதுதான் நெதன்யாஹூவின் தோல்வியாகும். பொம்மைகளை வைத்துக்கொண்டு விளையாடிய நாடுகள் தங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அணுவாயுதங்களையும், பாரிய ஆயுத தொழில்சாலைகளையும் உருவாக்கும் நிலைக்கு வந்துள்ளது.
துருக்கி ஒரு காலத்தில் பலவீனமான நாடாக ஐரோப்பியாவின் நோயாளியாக கருதப்பட்டாலும், தற்போது ஐரோப்பிய நாடுகளுடன் போட்டியிடும் அளவுக்கு ஆயுத உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முன்னேறியுள்ளது என்பதும் இதற்கான எடுத்துக்காட்டாகும். அமெரிக்கா பயன்படுத்தும் பல முக்கிய ஆயுதங்கள், ஏவுகணைகள் துருக்கியில் தான் தயாரிக்கப்படுகிறது. ஐரோப்பிய நாகரிகத்தில் அவர்கள் அறிவாளிகளாக இருந்தமையால் அவர்கள் முந்திக்கொண்டு இப்படியான வேலைகளை செய்கிறார்கள். அதனால் தான் நெதன்யாஹுவே பல பேட்டிகளில் துருக்கி எங்களுக்கு சவாலான நாடு என கருத்து வெளியிட்டுள்ளார். தேன்கூட்டில் கல்லெறிந்த நிலைக்கு இப்போது இஸ்ரேல் தள்ளப்பட்டுள்ளது. - என்றார்

No comments