JobVibe.lk - Sri Lanka Job Portal

பல கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் புத்தளம் வணாத்தவில்லு எரியூட்டும் உலையில் தகனம்

 (கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சுற்றிவளைப்புகளின் போது கைப்பற்றப்பட்ட பெருந்தொகையான போதைப்பொருட்கள் நீதிமன்ற உத்தரவிற்கமைய அழிக்கப்பட்டது.


திங்கட்கிழமை (2026.04.27)  காலை 09.00 மணியளவில், புத்தளம் வணாத்தவில்லு பகுதியில் அமைந்துள்ள ‘லெக்டோவத்தை’ (Lactowatta) எரியூட்டும் உலையில் வைத்து குறித்த போதைப்பொருட்கள் தகனம் செய்யப்பட்டது.


பலபிட்டி மற்றும் சிலாபம் ஆகிய நீதிவான் நீதிமன்றங்களில் விசாரணைகள் நிறைவடைந்த வழக்குகளுடன் தொடர்புடைய பெருமளவான போதைப்பொருள் தொகையே இவ்வாறு அழிக்கப்பட்டன.


அந்த வகையில் ஹெரோயின்: 22 கிலோ  888 கிராம், கேரளா கஞ்சா: 33 கிலோ 172 கிராம், கஞ்சா: 247 கிலோ 940 கிராம் போதைப்பொருட்கள் எரியூட்டும் உலையில் வைத்து தகனம் செய்யப்பட்டது.


திங்கட்கிழமை (27) அதிகாலை 05.00 மணிக்கு, பலபிட்டி நீதவான் நீதிமன்ற வளாகத்திலிருந்தும், காலை 07.30 மணியளவில், சிலாபம் நீதவான் நீதிமன்ற வளாகத்திலிருந்து  போதைப்பொருள் பொதிகள் எரியூட்டும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


இந்நிகழ்வில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசோக தர்மசேன, போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் சந்தன ஹேரத் ஆகியோர் கலந்துகொண்டனர்.


அத்தோடு அரசாங்க இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் மற்றும் அபாயகரமான ஒளடதங்கள் கட்டுப்பாட்டு தேசிய சபை ஆகியவற்றின் உயர்மட்ட அதிகாரிகளும் இந்த அழிப்பு நடவடிக்கையின் போது பிரசன்னமாகியிருந்தனர்.








Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال