சிலாபம் கடற்பகுதியில் மிதந்த பீடி இலைகள்
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
சிலாபம், அம்பகந்தவில் பகுதியில் கடலில் மிதந்து வந்த பெருமளவிலான பீடி இலைகளை கடலோர பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட இந்த பீடி இலைகள் மேலதிக விசாரணைகளுக்காக சிலாபம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
புதன்கிழமை (ஏப்ரல் 29) மாலை, சிலாபம் – அம்பகந்தவில கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் சோதனைச் சாவடி அதிகாரிகளுக்கு கடலில் சில சந்தேகத்திற்கிடமான பொதிகள் மிதப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது, கடலில் மிதந்து வந்து கரையை அடைந்த 250 கிலோ 900 கிராம் எடையுள்ள 06 பொதிகள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன.
இந்த பீடி இலைகள் இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக கடத்தி வரப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். பெரிய படகுகளில் இருந்து சிறிய படகுகள் மூலம் கரைக்கு மாற்ற முற்பட்ட போது, கடற்படையினரின் சோதனையில் இருந்து தப்பிக்கும் நோக்கில் அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக கடத்தல்காரர்கள் இப்பொதிகளை கடலில் வீசிச் சென்றிருக்கலாம் என நம்பப்படுகிறது.
தற்போது வரை இந்த கடத்தலுடன் தொடர்புடைய நபர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை. கைப்பற்றப்பட்ட பீடி இலைகளின் பெறுமதி மற்றும் அவற்றை கொண்டு வந்தவர்கள் குறித்த மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments