Breaking News

புத்தளம் ரத்மல்யாயவில் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட 994 கிலோகிராம் உலர்ந்த மஞ்சளுடன் ஒருவர் கைது

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

புத்தளத்தின் ரத்மல்யாய பகுதியில் இலங்கை கடற்படை, கடலோர பாதுகாப்பு திணைக்களம் மற்றும் புத்தளம் பிரதேச குற்றப் புலனாய்வு பணியகம் இணைந்து புதன்கிழமை (29) நடத்திய ஒரு சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் விளைவாக, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் தொள்ளாயிரத்து தொண்ணூற்று நான்கு கிலோகிராம் (994) உலர்ந்த மஞ்சளுடன் ஒரு (01) சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.


புத்தளம் பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியகத்துடன் இணைந்து, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பலான தம்பபண்ணி மற்றும் கடலோரக் பாதுகாப்பு திணைக்களம் ஆகியவற்றால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


புத்தளத்தின் ரத்மல்யாய பகுதியில் உள்ள ஒரு சந்தேகத்திற்கிடமான வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது, ​​சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும், இருபத்தைந்து (25) பைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் தொள்ளாயிரத்து தொண்ணூற்று நான்கு கிலோகிராம் (994) உலர்ந்த மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டது.


மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நொரோச்சோலையைச் சேர்ந்த 33 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும், மேலதிக சட்ட நடவடிக்கைக்காக, சந்தேக நபருடன் உலர்ந்த மஞ்சள் தொகையை புத்தளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





No comments