(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
இலங்கை கடற்படையின் 263 ஆம் ஆட்சேர்ப்பைச் சேர்ந்த நிரந்தர கடற்படையின் இருநூற்று முப்பது (230) பயிற்சி மாலுமிகள் மற்றும் தன்னார்வ கடற்படையின் நூற்று நாற்பத்து மூன்று (143) பயிற்சி மாலுமிகள் உட்பட மொத்தம் முந்நூற்று எழுபத்து மூன்று (373) பயிற்சி மாலுமிகள் அவர்களின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்து 2026 ஏப்ரல் 27 ஆம் திகதி காலி, பூஸ்ஸ இலங்கை கடற்படை கப்பல் நிபுன நிறுவனத்தின் பிரதான பயிற்சி மைதானத்தில் இருந்து வெளியேறிச் சென்றனர். இலங்கை கடற்படைக் கப்பல் நிபுனவின் தளபதியும் கட்டளை அதிகாரியுமான கெப்டன் ரசிக பியசேனவின் அழைப்பின் பேரில், சுகாதார மற்றும் சேவைகள் பணிப்பாளர் நாயகம், ரியர் அட்மிரல் ஜனக மாரபகே, இந்தப் வெளியேறிச் செல்லும் அணிவகுப்பில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார்.
வெளியேறிச் செல்லும் அணிவகுப்பின் பிரதம விருந்தினர், சவாலான ஒரு பணி மூலம் தாய்நாட்டிற்கு சேவை செய்வதற்காக இலங்கை கடற்படையில் இணைந்து, இலங்கை கடற்படை கப்பல் நிபுன நிறுவனத்தில் தமது கோட்பாட்டு மற்றும் செய்முறைப் பயிற்சிகளை வெற்றிகரமாக நிறைவுசெய்த 263 ஆவது ஆட்சேர்ப்பின் சிறந்த பயிற்சி மாலுமிகளுக்குக் கோப்பைகளை வழங்கினார். அதன்படி, வெளியேறிச் செல்லும் முந்நூற்று எழுபத்து மூன்று (373) பயிற்சி மாலுமிகளில், சிறந்த பயிற்சி மாலுமிக்கான வெற்றிக்கிண்ணத்தை பயிற்சி மாலுமி டப்எம்எம்என் வீரசேகர பெற்றுக்கொண்டதுடன் அனைத்து பாடங்களிலும் அதிக புள்ளிகளைப் பெற்ற பயிற்சி மாலுமிக்கான வெற்றிக்கிண்ணம் பெண் பயிற்சி மாலுமி எஸ்எச் திவானியும் சிறந்த விளையாட்டு வீரருக்கான கோப்பையை எம்எம்பீஎன் மாபாவும் சிறந்த விளையாட்டு வீராங்கைக்கான கோப்பையை ஏஎம்என்ஏ அதிகாரியும் சிறந்த துப்பாக்கி சுடும் வீரருக்கான கோப்பையை ஏஎம்ஏஆர் பண்டார மற்றும் சிறந்த துப்பாக்கி சுடும் வீராங்கனைக்கான கோப்பையை என்எல்டீடீஎஸ் லியனகேவும் பெற்றுக்கொண்டதுடன் 263 வது ஆட்சேர்பின் சிறந்த பிரிவாக 'அனுலா' பிரிவு தெரிவு செய்யப்பட்டது.
வெளியேறிச் செல்லும் பயிற்சி மாலுமிகளுக்கு உரையாற்றிய ரியர் அட்மிரல் ஜனக மாரபகே, முதலில் வெளியேறும் பயிற்சி மாலுமிகளுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். தேசிய பாதுகாப்பு தொடர்பாக இலங்கை கடற்படைக்கு ஒரு சிறப்பு பொறுப்பு இருப்பதாகவும், தொழில்நுட்பத்துடன் கூடிய தொழில்முறை படையாக இலங்கை கடற்படை அதன் செயல்பாடுகள் மூலம் அடைந்துள்ள சுதந்திரத்தை எதிர்கால சந்ததியினருக்கு விட்டுச் செல்லும் பொறுப்பு வெளியேறும் பயிற்சி மாலுமிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.
உலகில் வேகமாக வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பத்தை அறிந்து கொள்வதன் மூலம், கடற்படையின் முன்னேற்றத்திற்காக, தாங்கள் பெறும் புதிய அறிவு மற்றும் திறன்களை திறம்பட பயன்படுத்துவதை வெளியேறும் பயிற்சி மாலுமிகள் உறுதி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்திய அவர், கடற்படை வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையின் சவால்களை வெற்றிகரமாக நிர்வகித்து, தாய்நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாத்து, இலங்கை கடற்படைக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று கடற்படை எதிர்பார்க்கிறது என்றார்.
அதேபோல், தாய்நாட்டைப் பாதுகாப்பதற்காக இலங்கை கடற்படைக்கு தங்கள் ஆற்றல்மிக்க மற்றும் ஒழுக்கமான மகன்கள் மற்றும் மகள்களை வழங்கிய பயிற்சி மாலுமிகளின் பெற்றோருக்கும், அவர்களின் பயிற்சிக்கு பங்களித்த பயிற்சி ஆலோசகர்களுக்கும் ரியர் அட்மிரல் ஜனக மாரபகே தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
வெளியேறிச் செல்லும் பயிற்சி மாலுமிகளின் கண்கவர் அணிவகுப்பு மற்றும் கடற்படை இசைக்குழு, கலாச்சார நடனக் குழுவின் வண்ணமயமான நிகழ்ச்சிகளால் சிறப்பிக்கப்பட்ட இந்த நிகழ்வில், தெற்கு கடற்படைக் கட்டளையின் தளபதி, ரியர் அட்மிரல் தம்மிக விஜேவர்தன, கடலோரக் காவல்படையின் பணிப்பாளர் நாயகம், ரியர் அட்மிரல் ரொஹான் ஜோசப், கடற்படைத் தலைமையகம் மற்றும் தெற்கு கடற்படைக் கட்டளையைச் சேர்ந்த கடற்படைப் பணியாளர்கள், மற்றும் வெளியேறிச் செல்லும் பயிற்சி மாலுமிகளின் பெற்றோர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
















