பள்ளிவாசல்துறையில் கண்டது பிறையா பிரமையா....! - பேராதனைப் பல்கலைக்கழக மெய்யியல் விரிவுரையாளர் எம் எஸ் எம் அனஸ்
பள்ளிவாசல்துறை எனது ஊர். அங்கு தலைப் பிறை கண்ட செய்தியை முகநூல் வழியாக அறிந்து கொண்டேன். வெல்லங்கரை இளைஞர்களும் இதில் சம்பந்தம்.
பள்ளிவாசல் துறையில் பிறை காணப்பட்டது என்பதில் எனக்கு ஒரு நம்பிக்கை இருந்தது.
பிறையைப் பார்த்த இளைஞர்களின் வாக்கு மூலத்தையும் கேட்டேன். பள்ளிவாசல்துறை பள்ளிவாசல் நிர்வாகம் வெல்லங்கரை பள்ளி வாசல் நிர்வாகத்தையும் இணைத்து கொழும்பு பிறைக் கமிட்டிக்கு அனுப்பிய உத்தியோக பூர்வமான கடிதத்தையும் முக நூலில் படித்தேன் .
கவனிக்க வேண்டிய பல விடயங்கள் அவற்றில் இருந்தன. அது சில இளைஞர்களின் விண்ணப்பம் மட்டுமல்ல. பள்ளிவாசல் நிர்வாகத்தின் அங்கீகாரமும் பெறப்பட்டுள்ளது. அந்தக் கடிதம் தெளிவாக எழுதப்பட்ட ஒரு சிறிய அறிக்கை.
சனிக் கிழமை பெருநாள் என பிறைக் கமிட்டி தீர்மானம் எடுத்துள்ளது . அதை ஏற்றுக் கொண்டாலும் சில பிரச்சினைகள் உள்ளன.
பள்ளிவாசல்துறை பல நூற்றாண்டு க்பழையான ஊர். பள்ளிவாசல்,ஊர் நிர்வாகம் ,பள்ளித்தலைத்துவம் இப்படி அந்த ஊருக்கென சில பண்பாட்டு மரபுகள் உள்ளன.
வெல்லங்கரையும் ஒரு பண்டைய கிராமம். பள்ளிவாசல் துறைக்கு அடுத்த கிராமம்.
பிறை பார்க்கும் விடயம் பள்ளிவாசல்துறைக்குப் புதியதல்ல . பிறைக் கமிட்டிக்கு வயது அரை நூற்றாண்டு என்றால் அந்த மக்களது பிறை பார்க்கும் வரலாறு ஐந்து நூற்றாண்டுகளுக்கும் அதிகம்.
நாங்கள் சிறுவர்களாக, இளைஞர்களாக ஊரில் இருந்த காலம் எல்லாம் நோன்பு தலைப் பிறை, பெருநாள் ( ஷவ்வால்) தலைப்பிறை பார்க்க பள்ளிவாசல்துறை பழைய பள்ளிக்கு ( இப்போது இல்லை ) பின்னால் பரந்து கிடந்த வெண் மணற் பரப்பில் மணற் திடர்களில் நின்று பிறை பார்ப்பது வழக்கம். சில பள்ளிப் பிரமுகர்களும் சில முதியோரும் பிறை பார்க்க வல்லவர்களும் அங்கு கூடுவார்கள்
எந்த இடத்தில் எந்தக் கோணத்தில் நின்றால் சரியாக பிறைபார்க்கலாம் என்பதை பெரியவர்கள் சொல்லிக் காட்டுவார்கள். ஊரில் இருந்த காலத்தில் 10 தலைப் பிறைகளையாவது அவர்களின் வழிகாட்டலில் அதே இடத்தில் பார்த்துள்ளேன். பிறை பார்க்காது திரும்பிய அனுபவங்களும் உண்டு
தலைப்பிறையின் காலமும் அளவும் பசுமரத்தாணிபோல் நெஞ்சில் பதிவாகி உள்ளது.
ஆனால், எங்களைப் போல் அல்லாது கிராமத்திலேயே தொடர்ச்சியாக வாழ்வோரின் பிறை அனுபவம் எவ்வளவு பெரியது.
கிராமத்தில் பிறையும் நிலவும் மக்களுடன் கலந்திருக்கும் சந்தர்ப்பங்கள் அதிகம்.
கடல் வற்றுப் பெருக்கை எங்கள் மீனவர்கள் பிறையின் வளர்ச்சியை வைத்துத்தான் கணக்கிடுவார்கள் .
எங்கள் பெண்களின் கலண்டரே பிறைக் கணக்குத்தான்.தலைப் பிறையை எப்படிப்பார்ப்பது அதன் நீள அகலம் என்ன என்று பள்ளிவாசல்துறை மக்களுக்கு யாரும் பாடம் எடுக்க வேண்டியதில்லை.
ஷவ்வால் பிறை பார்க்க என்றே ஒரு இடத்தை ஒதுக்கி அழகு பார்த்த ஊர்.
அங்கிருந்து ஒரு மைல் நடந்தால் வெல்லங்கரை. பள்ளிவாசல்துறை பிறைக் காட்சி வெல்லங்கரைக்கும் உரியதுதான்.
பிறைக் கமிட்டிக்கு இந்த உண்மை தெரியாதது ஆச்சரியமாக உள்ளது. இந்த வரலாறு தெரிந்திருந்தால் அந்த இளைஞர்களின் வாக்குமூலம் மீண்டும் மீண்டும் படித்துப் பார்க்கப் பட்டிருக்கும். மயிர் பிளக்கும் வாதங்களுக்குள் நுழைந்து நியாயம் தேடும் தேவை ஏற்பட்டிருக்காது.
கிராம மக்கள் , இளைஞர்கள் பிறை பார்ப்பதில் காட்டி வரும் ஆர்வத்தை தகர்ப்பது போன்ற கருத்துக்களுக்குப் பதிலாக இதில் உள்ள பிரச்சினைகளை உணர்ந்து தீர்க்கக் கூடிய வழிவகைகளைத் தேட வேண்டும்.

No comments