புத்தளம் - ரத்மல்யாய முல்லை ஸ்கீம் நூரானிய்யா ஜூம்ஆ மஸ்ஜித் நிர்வாக சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பெருநாள் தொழுகையும், கௌரவிப்பு நிகழ்வும்!
ரஸீன் ரஸ்மின்
புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு புத்தளம், ரத்மல்யாய - முல்லை ஸ்கீமில் பெருநாள் தொழுகையும், விஷேட கௌரவிப்பு நிகழ்வும் நேற்று (21) முல்லை ஸ்கீம் நூரானிய்யா ஜூம்ஆ மஸ்ஜிதில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
நூரானிய்யா ஜூம்ஆ மஸ்ஜித் நிர்வாக சபையினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நோன்புப் பெருநாள் தொழுமை மற்றும் கௌரவிப்பு நிகழ்வில் மஸ்ஜிதின் பிரதம இமாம் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம்.சப்ரின் (மிஸ்பாஹி), பெருநாள் தொழுகை மற்றும் குத்பா என்பவற்றை நடத்தினார்.
இதன்போது விஷேட துஆப் பிரார்த்தனை இடம்பெற்றதுடன், பெருநாள் தொழுகை முடிந்தவுடன் வருகை தந்தவர்கள் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி அன்பையும், தமது பெருநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
இதில் ஆண்கள், பெண்கள் என பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்துகொண்டனர்.
இதன்போது, புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புத்தளம் நகரக் கிளையின் மேற்பார்வையின் கீழ் இடம்பெற்ற ஹிஸ்புல் குர்ஆன் நிகழ்வில் முல்லை ஸ்கீம் நூரானிய்யா ஜூம்ஆ மஸ்ஜிதில் தராவீஹ் மற்றும் சுபஹ் தொழுகைகளுக்குப் பின்னர் ஹிஸ்புல் குர்ஆன் நிகழ்வில் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்ற 27 மாணவர்கள் இதன்போது சான்றிதழ்கள், பரிசுப் பொருட்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மேலும், அல்காசிம் சிட்டி ஹிப்ழ் மதரஸாவில் புதிதாக சேர்ந்த கல்வியை தொடரும் முல்லை ஸ்கீம் கிராமத்தைச் சேர்ந்த 11 மாணவர்களுக்கு இங்கு பரிசில்கள் வழங்கப்பட்டன.
அத்தோடு, முல்லை ஸ்கீம் நூரானிய்யா ஜூம்ஆ மஸ்ஜித் பிரதம இமாம் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம்.சப்ரின் (மிஸ்பாஹி), முஅத்தின் முஹம்மது சம்சுதீன் மற்றும் தராவீஹ் தொழுகை, கியாமுல் லைல் தொழுகை நடத்திய ஹாபிழ்களான எம்.ஆர்.எம்.அம்மார் (நூரி), எம்.ஆர்.எம்.யாசிர் (நூரி), மற்றும் ரத்மல்யாய குல்லியத்துல் மிஸ்பாஹூல் உலூம் அரபுக் கல்லூரியின் விரிவுரையாளர் அஷ்ஷெய்க் ஏ.டபிள்யூ.பஸ்லுல் ஹக் (தீனி) ஆகியோர் இங்கு பரிசு மற்றும் அன்பளிப்புக்கள் வழங்கி ஊர்மக்கள் சார்பில் கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன், இந்த வருடம் சவுதி தூதுவராலயத்தினால் நடத்தப்பட்ட அல்குர்ஆன் மனனப் போட்டியில் 2500 மாணவர்கள் பங்குபற்றிய இரண்டாம் பாகம் (இரண்டாம் ஜூஸ்) மனனப் பிரிவில் தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தைப் பெற்று பெற்றோருக்கும், முல்லை ஸ்கீம் கிராமத்திற்கும் பெருமை சேர்த்த பாணந்துரை தீனிய்யா அரபுக் கல்லூரியில் ஹிப்ழ் பிரிவில் கல்வி கற்றுவரும் அப்துல் வாஜித் முஹம்மது ஸகரிய்யா என்ற மாணவன் ஊர்மக்கள் சார்பில் இதன்போது பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார்.
இதேவேளை, முல்லை ஸ்கீம் கிராமம் உருவாக்கப்பட்டதில் இருந்து நடப்பு ஆண்டு வரை சுமார் 18 வருடங்களாக கிராமத்தில் மஸ்ஜித் தலைவராக இருந்து கிராமத்தின் நீண்ட கால திட்டங்கள் மஸ்ஜித் மற்றும் குர்ஆன் மதரஸாக்களின் அபிவிருத்தி தொடர்பில் மிகவும் அர்ப்பணிப்புடன் பணியற்றிய முல்லை ஸ்கீம் நூரானிய்யா ஜூம்ஆ மஸ்ஜிதின் தலைவரான மூத்த உலமா அப்துல் வதூத் மௌலவியின் சேவைகளைப் பாராட்டி மஸ்;ஜித் நிர்வாகம் மற்றும் ஊர்மக்கள் சார்பில் சோசியல் எயிட் சமூக அமைப்பினர் இணைந்து பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

















No comments