Breaking News

அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் முதுமாணிக்கான ஆய்வை சமர்ப்பிக்கும் முதல் இலங்கைப் பெண், ஆலிமா அஸ்ரா முஹம்மத் நிஸார் -ஸித்தீகிய்யா, அல் அஸ்ஹரிய்யா!

ஆலிமா அஸ்ரா முஹம்மத் நிஸார் -ஸித்தீகிய்யா, அல் அஸ்ஹரிய்யா- அவர்கள் இலங்கை, மாவனெல்லை நகர் பெற்றடுத்த ஒரு முத்து, இவர் முஹம்மத் நிஸார், ரஹ்மத் பேஜான் தம்பதியினரின் அன்புப் புதல்வியுமாவார்.


ஆலிமா அஸ்ரா நிஸார், அல்-அஸ்ஹரிய்யா அவர்கள் அரபு மற்றும் குர்ஆன் அறிவியல் கல்வியாளர் பெண்கள் வலுவூட்டல் மற்றும் தர்பியாவில் சிறப்பு கவனம் செலுத்தும் இஸ்லாமிய வாழ்க்கை பயிற்சியாளர் மட்டுமல்லாது இவர் அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் இளமாணி, முதுமாணியை நிறைவுசெய்து தற்போது அங்கே கலாநிதி கற்கையை தொடரும் அஷ்ஷைக் ரிக்ஸீ அஸ்ஹரீ அவர்களின் அன்பு மனைவி என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் முஸ்அப், முஸன்னா, உபாதா, உபைதா (இரைட்டையர்) ஆகிய நான்கு பிள்ளைகளின் தாயுமாவார்.


இவர் தனது ஆரம்பக் கல்வியை மாவனெல்லை ஸாஹிரா பாடசாலையில் கற்றவர் பின்னர் மார்க்கக் கல்வியை முறையாக கற்கும் பொருட்டு கல்வியில் பல உயர் அடைவுகளை அடைந்து சிறந்து விளங்கும் மாவனெல்லையில் அமைந்துள்ள ஆயிஷா ஸித்தீகா பெண்கள் அரபுக் கல்லூரியில் இணைந்து ஆலிமா கற்கைநெறியைப் பூர்த்தி செய்து விஷேட சித்தி பெற்று சிறந்த ஆலிமாவாக 2011 ஆம் ஆண்டு பட்டம் பெற்றார்.


பின்னர் மேற்படிப்பை தொடரும் பொருட்டு எகிப்திலுள்ள அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் இணைந்து சிறப்பாகக் கற்று தனது இளமாணி பட்டப்படிப்பை 2014 ஆம் ஆண்டு விஷேட சித்தியுடன் நிறைவு செய்தார். கல்வித் தேடலில் தொடர்ந்து, தாய்நாட்டுக்குத் திரும்பியவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் PGDE கற்கைநெறியை 2015 ஆம் ஆண்டு நிறைவுசெய்து தனது கல்வித் தகைமைகளை மேலும் வலுப்படுத்தினார்.


அத்தோடு இவரது கல்வித் தாகம் மேற்படிப்பை நோக்கி நகர ஆரம்பித்ததையடுத்து, மீண்டும் அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் இணைந்து நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் முதுமாணிக் கற்கைக்கு தெரிவாகி, தற்போது அதற்கான ஆய்வை சமர்ப்பிக்கும் இறுதித் தருவாயில் வந்துள்ளார்.


இவரே அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் முதுமாணிக்கான ஆய்வை சமர்ப்பிக்கும் முதல் இலங்கைப் பெண் எனும் வரலாற்றுப் பக்கத்தை அடைந்தவர் என்றால் ஒருபோதும் மிகையாகாது.

தனது முதுமாணி ஆய்வை

منهج المستعربين اليابانيين في تفسير القرآن الكريم ( دراسة نصية خطابية)

எனும் தலைப்பில் நான்கு பேராசியர்கள் கொண்ட நடுவர் குழுவுக்கு முன்னணியில் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 17, பெப்ரவரி 2026 ஆண்டு ஆய்வை சமர்ப்பிக்கவுள்ளார்.


உண்மையில் நான்கு பிள்ளளைகள், அதிலும் இரட்டையர்கள், குறிப்பாக திருமணத்திற்குப் பின் இவ்வளவு உயரிய அடைவுகளை அடைவது என்பது சாதாரண விடயமல்ல, பிரத்தியேகமாக இவ்வாலிமாவின் சாதனைகள், அடைவுகளுக்கு கணவனின் சரியான ஆதரவும், பங்களிப்புகளும் பின்னணியில் உள்ளதென்பதை இங்கு குறித்துக்காட்ட வேண்டிய விடயமாகும்.


இவரது ஆய்வுத் தேர்வு சிறப்பாக அமையவும், சிறந்த சித்தி பெறவும், என்றும் இவரது பரந்த அறிவின் மூலம் சமூகம் பயன் பெற வல்லவன் அல்லாஹ் அருள் புரிவானாக!.


மென்மேலும் உயர் அடைவுகள் அடைந்து கலாநிதி கற்கையையும் தொடர எமது முற்கூட்டிய வாழத்துக்கள்.

الحمد لله الذي بنعمته تتم الصالحات أولا وآخرا


நட்புடன்

Azhan Haneefa

09/02/2026




No comments