JobVibe.lk - Sri Lanka Job Portal

இலங்கை மனித உரிமை ஆணைக்குழு களுத்துறை மலையகத் தமிழர்களுக்குமிடையில் விஷேட கலந்துரையாடல்

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பு (VOPP) மற்றும்  ஜபென் (IPEN) நிறுவனத்தின் அழைப்பின் பெயரில் கடந்த சனிக்கிழமை (07) இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவினர்  வரலாற்றில் முதல் தடவையாக களுத்துறை மாவட்ட மலையகத் தமிழர்களை சந்தித்து நேரடியாக கலந்துரையாடினர்.


ஆணைக்குழுவின் ஆணையாளர்களான சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா, பேராசிரியர் டி. தனராஜ், ஆணைக்குழுவின் வெளிவிவகார பணிப்பாளர் திரு. எம். கபிலன், அலுவலர்களான ஜனாப் யாசீர், திருமதி.நிரோஷினி திசாநாயக்க, சட்ட அலுவலர் திருமதி. பாத்திமா பர்ஹா மற்றும் உபக்குழு உறுப்பினர் ஜீவரத்தினம் சுரேஷ் ஆகியோர் இந்த கலந்துரையாடலில்  பங்கேற்றனர்.


இதன்போது பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பின் நிறைவேற்று இயக்குனர் கலந்துரையாடலை வழிநடத்தியதுடன் முன்மொழிவுகளை முன்வைத்தார். அதேவேளை பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பின் திட்ட இயக்குனர்  லவீனா ஹஸந்தி, மாவட்ட இணைப்பாளர் கே. யோகசுஜி, ஐபென் நிறுவனத்தின் மாவட்ட இணைப்பாளர் அன்டனி மற்றும் ஆசிரியர் ஆலோசகர் திருமதி. நந்தகௌவரி, விவேகானந்தா தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபர் ஆகியோர் கருத்துக்களை வழங்கிய அதேவேளை இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.


களுத்துறை மலையகத் தமிழர்கள் நீண்ட காலமாக எதிர்கொண்டுவரும் அடிப்படை மனித உரிமை மீறல்கள், பெருந் தோட்ட கம்பனிகளின் அத்துமீறல்கள் மற்றும் சமகால சமூக பிரச்சினைகள் குறித்தும் ஆராய நேரடியாக சந்தித்தது இச்சந்திப்பானது மத்துகம பிரதேசத்தை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.


இந்த நிகழ்வில் மலையக மக்கள் சார்பில் தொழிலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், ஆசிரியர்கள், அரச ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதன் போது களுத்துறை மலையக மக்கள் முகம் கொடுக்கின்ற காணி மற்றும் வீட்டு பிரச்சினை, குறிப்பாக 1994ம் ஆண்டுக்குப் பிறகு மலையக மக்களின் சிலருக்கு வழங்கப்பட்ட 7 பர்ச்சஸ் நிலங்களுக்கு இதுவரை எந்தவித ஆவணங்களும் வழங்கப்படாமை , இதுவரை  சொந்த முகவரி இல்லாமை, கல்விப் பிரச்சினை, அடிப்படை வசதிகள், பெண்கள் முகம்கொடுக்கின்ற தொழில் மற்றும் அதுசார்ந்த பிரச்சினைகள், அடிப்படை வசதிகள் பிரச்சினை உட்பட்ட  மனித உரிமை மீறல்கள் குறித்து பங்குபற்றுனர்கள் மிகத் தெளிவாகவும், உணர்வுபூர்வமாகவும்  எடுத்துரைத்தனர். இதை செவிமடுத்துக்கொண்டிருந்த ஆணையாளர்கள் மிக கவலையடைந்தனர்.


மக்கள் முன் வைத்த பிரச்சினைகளை கேட்டறிந்த ஆணையாளர்கள் பிரச்சினைகளோடு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து பேசுவதாகவும், பிரச்சினைகளுக்கான தீர்வுகளை எடுப்பதற்கான சிபாரிசுகளை அரசுக்கு அனுப்புவதாகவும் உறுதியளித்தனர்.


இந்தக்  கலந்துரையாடலை பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பு ஒழுங்கு செய்த அதேவேளை ஐபென் நிறுவனம் பூரண ஒத்துழைப்பை வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.








Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال