Breaking News

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சங்கமப் பொங்கலாய் மலர்ந்த சமூக நல்லிணக்கம்

நூருல் ஹுதா உமர்

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீட மாணவர் பேரவையின் ஏற்பாட்டில், சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையிலான “சங்கமப் பொங்கல்” விழா 2026.02.10 ஆம் திகதி பீட வளாகத்தில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.


இவ்விழாவிற்கு கலை கலாசார பீடத்தின் அதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில் அவர்கள் தலைமை வகித்ததுடன், பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜூனைடீன் அவர்கள் விசேட அதிதியாக கலந்து சிறப்பித்தார்.


இதனுடன் பல்கலைக்கழகத்தின் ஏனைய பீடங்களின் பீடாதிபதிகள், பதில் பதிவாளர், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள், உதவி விரிவுரையாளர்கள், சிரேஷ்ட உதவிப் பதிவாளர், கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு விழாவை மெருகூட்டினர்.


விழாவிற்கு வருகைதந்த அதிதிகள் பாரம்பரிய மேள வாத்தியங்களுடன் வரவேற்கப்பட்டு விழா மேடைக்கு அழைத்துவரப்பட்டமை குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாக அமைந்தது. விழாவின் ஆரம்ப நிகழ்வாக மும்மத அனுஷ்டானங்கள் இடம்பெற்றதுடன், வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது. இவ்வரவேற்புரையை மாணவர் பேரவை பிரதிநிதி எஸ்.எம். சஹான் அவர்கள் நிகழ்த்தினார்.


தலைமை உரையாற்றிய பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில் அவர்கள், சங்கமப் பொங்கல் விழா இலங்கையின் யுத்தத்திற்குப் பிந்திய சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் முக்கிய அடையாளமாக விளங்குகிறது எனக் குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்து உரையாற்றிய உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜூனைடீன் அவர்கள், பல்லின மாணவர்களை ஒன்றிணைத்து இவ்வாறான விழாவை ஏற்பாடு செய்த மாணவர் பேரவையின் முயற்சியைப் பாராட்டியதுடன், இதன் மூலம் சமூக நல்லிணக்கமும் பல்லின சமூகத்தின் ஒற்றுமையும் வெளிப்படுகின்றது எனச் சுட்டிக்காட்டினார்.


மேலும், மொழிகள் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் என். சுபராஜ் அவர்கள் பொங்கல் திருவிழாவின் பாரம்பரியம் மற்றும் அதன் மகிமைகள் குறித்து சிறப்புரையாற்றினார். அதேநேரம், பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரும் சமூகவியல் பேராசிரியருமான றமீஸ் அபூபக்கர் அவர்கள் மாணவர்களை மகிழ்விக்கும் வகையில் பாடலொன்றை பாடியிருந்தமை விழாவிற்கு மேலும் சிறப்பு சேர்த்தது.


இவ்விழாவை அலங்கரிக்கும் வகையில் மாணவர்களின் இசை, நடன நிகழ்ச்சிகள் பலவும் அரங்கேற்றப்பட்டதுடன், சமூக நல்லிணக்கத்தை வெளிப்படுத்திய இச்சங்கமப் பொங்கல் விழா அனைவருக்கும் நினைவுகூறத்தக்க நிகழ்வாக அமைந்தது.














No comments