JobVibe.lk - Sri Lanka Job Portal

புதியதோர் கற்பிட்டி பிரதேசத்தை கட்டி எழுப்ப பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லக்ஸ்மன் திடசங்கற்பம்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கிளீன்  ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் ஊடாக கற்பிட்டி புதுக்குடியிருப்பு கிராம சேவையாளர் பிரிவில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விஷேட கலந்துரையாடல் ஒன்று  தேசிய மக்கள் சக்தியின் புதுக்குடியிருப்பு வட்டார அமைப்பாளர் மஜீத் கான் தலைமையில் வியாழக்கிழமை (26) இடம்பெற்றது.



இக் கலந்துரையாடலில் கற்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லக்ஸ்மன் ரன்வலராச்சி, பொலிஸ் அதிகாரிகளான கே.சஞ்ஜீவ, ஜே.எம் ஜயகொடி, கற்பிட்டி பிரதேச சபையின் உப தவிசாளர்  சமன் குமார ஹேரத், கிராம உத்தியோகத்தர் எம்.றியால் ஆகியோர் கலந்து கொண்டனர்.



இதன் போது உரையாற்றிய கற்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லக்ஸ்மன் ரன்வலராச்சி ; தற்போதைய நிலையில் பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் நீண்டதொரு இடைவெளி காணப்படுகின்றது. இதற்கு காரணம் சில பொலிஸ் அதிகாரிகள் குற்றம் புரியும் நபர்களுடன் கொண்டுள்ள நட்புறவு ஆகும். இந்த நிலை கற்பிட்டி பொலிஸ் நிலையத்திலும் காணப்படுகின்றது. நான் கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஆறு வருடங்களுக்கு முன் பொறுப்பதிகாரியாக கடமையாற்றும் போது இருந்த கற்பிட்டி இல்லை தற்போது பாரிய வளர்ச்சி அடைந்துள்ளது பொருளாதார முன்னேற்றம் காணப்படுகின்றது. நான் புதிதாக கற்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமை ஏற்று ஒரு மாத காலம் மட்டுமே சென்றுள்ளது. கற்பிட்டி பிரதேசத்தில் உள்ள சகல சட்டவிரோத குற்றச் செயல்களையும் தடுத்து நிறுத்தி புதியதோர் கற்பிட்டி பிரதேசத்தை கட்டி எழுப்புவதற்கு திடசங்கற்பம் பூண்டுள்ளேன். அதன் நிமித்தம் சகல கிராம சேவையாளர் பிரிவுகளிலும் தனித்தனியாக மக்களை சந்தித்து கலந்துரையாடி அப் பகுதிகளில் காணப்படும் போதைப் பொருள் விற்பனை மற்றும் பாவனை உள்ள இடங்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வது என்பவற்றோடு சட்டவிரோத செயல்களையும் முற்றாக இல்லாமல் செய்வதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றேன். அதற்கான பொது மக்களின் ஒத்துழைப்பும் அவசியமாக காணப்படுகின்றது என்பதனையும் தெரிவித்தார்.


மேலும் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டவர்களும் தமது பூரண ஒத்துழைப்புக்களையும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கற்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு வழங்குவதாக தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.







Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال