JobVibe.lk - Sri Lanka Job Portal

இரட்டைக்கோபுர தாக்குதலுக்கு முன்பே ஆப்கானை ஆக்கிரமிக்கும் சூழ்ச்சியும், தாலிபான்களின் நேர்மையும்

முப்பத்தி இரண்டாவது தொடர்..............

அமெரிக்கா போன்ற நாடுகள் பெருமளவு இலாபத்தை எதிர்பார்த்துத்தான் முதலீடுகளை செய்வார்கள். முதலீடு என்னும்போது ஒரு நாட்டின் மீது போர் தொடுத்தல், ஆக்கிரமிப்பு செய்தல், போருக்கான உதவிகளை வழங்குதல் போன்றன அமெரிக்காவை பொறுத்தவரையில் பாரிய முதலீடுகளாகும்.

ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிப்பு செய்த ரஷ்ய படைகளை விரட்டுவதற்காக அங்குள்ள முஜாஹிதீன்களுக்கு உதவுகிறோம் என்றபோர்வையில் பில்லியன் கணக்கான டொலர்களை அமெரிக்கா செலவு செய்தது.

ரஷ்ய படைகளை ஆப்கானைவிட்டு விரட்டுவது மட்டும் அமெரிக்காவின் நோக்கமாக இருக்கவில்லை. மாறாக தங்களால் உருவாக்கப்பட்ட அல்-கொய்தா, தாலிபான் உற்பட முஜாஹிதீன்களை தங்களது கூலிப்படைகளாக பாவிப்பதுடன், ஆப்கானிஸ்தானையும் தங்களது கட்டுப்பாட்டின்கீழ் வைத்துக்கொள்ள வேண்டும் என்பது அமெரிக்காவின் திட்டமாகும். 

இதில் “வடக்கு முன்னணி” என்னும் முஜாஹிதீன் அமைப்பினர் தொடர்ந்து அமெரிக்காவின் கூலிப்படைகளாக செயல்பட்டனர். தாலிபான்களையும், அல்-கொய்தாவையும் வேட்டையாடுவதில் குறியாக இருந்தனர்.  

ஆனால் அல்-கொய்தா, தலிபான் போன்ற முஜாஹிதீன்கள் தங்களது வளர்ச்சிக்காக அமெரிக்காவை பயன்படுத்தினார்களே தவிர, இவர்களை அமெரிக்காவின் தேவைக்காக பயன்படுத்த முடியவில்லை. 

இவ்வியக்கங்களுக்கு பல பில்லியன்களை செலவு செய்திருந்தும் அதனால் இலாபமாக தனது நோக்கத்தை அடையமுடியாத காரணத்தினால் இவ்வியக்கங்களை பழிவாங்குவதற்கு அமெரிக்கா சந்தர்பம் பார்த்துக் கொண்டிருந்தது.  

1990 இல் குவைத்தை சதாம் ஹுசைன் ஆக்கிரமித்தபோது மத்திய கிழக்கு பிராந்தியத்தில்  அமெரிக்க படைகளின் வருகையை எதிர்த்தனால் அமெரிக்காவுடன் அல்-கொய்தா இயக்கம் நேரடியாக முரன்பட்டுக்கொண்டது. 

இதனால் அல்-கொய்தா இயக்கத்தின் வலையமைப்புக்களை தேடி அழித்தாலும், தன்னால் வளர்க்கப்பட்ட மற்றுமொரு இயக்கமான தலிபான்களை அழிப்பதற்கு அமெரிக்காவுக்கு சந்தர்ப்பம் அமையவில்லை.  

இந்த நிலையில்தான் அமெரிக்காவின் நியோர்க் நகரில் அமைந்திருந்த இரட்டைக்கோபுர வர்த்தக கட்டிடங்கள் மீது 2001 செப்டம்பர் 11 இல் கடத்தப்பட்ட விமானங்களை மோதச்செய்து தாக்குதல் நடாத்தப்பட்டது. 

இந்த தாக்குதளினால் சர்வதேச அரசியலில் பல மாற்றங்களை உருவாக்கியது. உலகின் பல பாகங்களிலும் சுதந்திரத்துக்காக போராடிய விடுதலை இயக்கங்களை பயங்கரவாதிகள் என்று அமெரிக்கா பட்டியலிட்டதன் காரணமாக போராட்ட இயக்கங்கள் அச்சமடைந்தன. இதனால் தங்களது போராட்ட தந்திரோபாயங்களை மாற்றிக்கொண்டனர். அதில் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தினரையும் குறிப்பட முடியும். 

இந்த தாக்குதலை காரணம் காட்டி உலகில் உள்ள இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அமெரிக்காவுக்கு வளைந்துகொடுக்காத ஆட்சியாளர்கள் என தனது அத்தனை எதிரிகளையும் அழிப்பதற்கு அமெரிக்காவுக்கு சந்தர்ப்பமாக அமைந்தது.     

தங்களால் வளர்க்கப்பட்ட அல்-கொய்தா, தலிபான் ஆகிய இயக்கங்கள் ஒன்றாக ஆப்கானிஸ்தானில் இருப்பதனாலும், ஏற்கனவே ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிப்பதற்கான சந்தர்ப்பத்தினை பார்த்துக்கொண்டிருந்த அமெரிக்காவானது தனது இரட்டை கோபுரம்மீதான தாக்குதலை அல்-கொய்தா இயக்கம்தான் மேற்கொண்டது என்று உடனடியாக அறிவித்தது. 

அதனால் தாக்குதல் நடாத்துவதற்கு கட்டளை வழங்கிய அவ்வியக்கத்தின் தலைவர் ஒசாமா பின் லேடனை தங்களிடம் ஒப்படைக்கும்படி தாலிபான் அரசை அமெரிக்கா கோரியது. தலிபான்கள் ஏற்கமாட்டார்கள் என்று தெரிந்துகொண்டுதான் அமெரிக்கா அவ்வாறு கோரியது.   

தங்களது ஆட்சி அதிகாரத்தை பாதுகாக்க நினைத்திருந்தால் சத்தமின்றி ஒசாமாவை அமெரிக்காவிடம் ஒப்படைத்திருக்கலாம். வேறு எந்த நாட்டினது அரசியல்வாதிகளாக இருந்தாலும் அதனைத்தான் செய்திருப்பார்கள். 

ஆனால் அவ்வாறு அரசியல்வாதிகள்போன்று செயல்படுவதற்கு போராளிகளான தலிபான்கள் உடன்படவில்லை. இது தாலிபான்களின் நேர்மையையும், அவர்களின் கொள்கையில் உள்ள உறுதிப்பாட்டினையும் காண்பிக்கின்றது. 

அமெரிக்காவின் வர்த்தக கட்டிடத்தின்மீது அல்-கொய்தா இயக்கம்தான் தாக்குதல் நடாத்தியது என்பதற்கான ஆதாரத்தினை வழங்குமாறும், அவ்வாறு ஒசாமாதான் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் நிச்சயம் அவர் தண்டிக்கப்படுவார் என்றும் தலிபான்கள் கூறினர். 

ஆனால் தலிபான்களின் இந்த பதிலை உதாசீனம் செய்துவிட்டு ஒசாமாவை ஒப்படைப்பதற்கு தலிபான்கள் மறுக்கின்றார்கள் என்ற செய்தியினை மாத்திரம் ஊடகங்கள் மூலமாக அமெரிக்கா உலக மக்களை நம்பச்செய்தது.    

அமெரிக்காவின் யுத்தத்துக்கான ஆயத்தங்களை அவதானித்தபோது வர்த்தக கட்டிடம் தாக்கப்படுவதற்கு முன்பே ஆப்கானிஸ்தான்மீதான இராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்கா தயாராகியிருந்தது போன்றதொரு தோற்றப்பாடு காணப்பட்டது. 

முகம்மத் இக்பால் 
சாய்ந்தமருது 

தொடரும்..............



Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال