எம்.யூ.எம்.சனூன்
நிக்கவரட்டி கல்வி வலயத்தைச் சேர்ந்த இசிப்பத்தான மத்திய கல்லூரியின் (தேசிய பாடசாலை) அதிபர் திரு. காமுனி அவர்களின் தலைமையில், 60 ஆசிரியர்கள் அடங்கிய பணிக்குழாத்தினர் புத்தளம் பாத்திமா பாலிகா மகாவித்தியாலயத்திற்குச் கல்விசார் விஜயம் ஒன்றை வியாழக்கிழமை (12) மேற்கொண்டனர்.
பாடசாலைகளுக்கிடையிலான சிறந்த நடைமுறைகளைப் பார்வையிடுதல் (Best Practices) மற்றும் அனுபவங்களைப் பரிமாறிக்கொள்ளுதல் (Experience Sharing) ஆகிய நோக்கங்களுடன் இவர்களது விஜயம் அமைந்தது.
கல்லூரிக்கு வருகை தந்த இசிப்பத்தான மத்திய கல்லூரி பணிக்குழாத்தினரை புத்தளம் பாத்திமா பாலிகா மகாவித்தியாலயத்தின் அதிபர் ஏ.எல். சரீனா பர்வீன் உள்ளிட்ட நிர்வாகத்தினரும், ஆசிரியர்களும் இணைந்து மிகவும் உற்சாகத்துடனும், விமரிசையாகவும் மலர்க்கொத்துகள் வழங்கி வரவேற்றனர்.
அதனைத் தொடர்ந்து இரு பாடசாலைகளுக்குமிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பும் கலந்துரையாடலும் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலின் போது புத்தளம் பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தின் பல்வேறு துறைகள் மற்றும் சாதனைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
பாடசாலையின் வரலாறு மற்றும் கல்விசார் அபிவிருத்தி நடைமுறைகள் குறித்து அதிபர் ஏ.எல். சரீனா பர்வீன் மற்றும் பிரதி அதிபர் செல்வி என்.டபிள்யூ.பிரியதர்ஷனி ஆகியோர் விளக்கமளித்தனர்.
பாடசாலையின் இணைப்பாடவிதான செயற்பாடுகள், அவற்றின் சாதனைகள் வெற்றிகள் தொடர்பில் உதவி அதிபர் இல்ஹானா அவர்களினால் முன்வைக்கப்பட்டது.
இரு மொழிப் பிரிவு (Bilingual Education) கல்வியில் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகள் மற்றும் தேசிய மட்டத்தில் அது ஈட்டிய சாதனைகள் குறித்துப் பிரிவுத் தலைவர் பி.எஸ். ரொமிலா விளக்கமளித்தார்.
சிங்கள மொழிப் பிரிவு தொடர்பான தகவல்களை, அதற்குக் பொறுப்பான இணைப்பாளர் எம்.எச். ஹஸ்னி சமர்ப்பித்தார்.
தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்ற மாணவர்களின் இருமொழி (Bilingual) ஆக்கக் காட்சிப்படுத்தலும் இதன்போது முன்வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, வருகை தந்த குழுவினர் பாடசாலையின் இருமொழிப் பிரிவு, சிங்கள மொழிப் பிரிவு, உயர்தரப் பிரிவு, சாதாரண தரப் பிரிவு மற்றும் ஏனைய வகுப்பறைகளுக்கும் மற்றும் அலுவலகப் பகுதிகளுக்கும் நேரில் சென்று அங்கு பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகளைப் பார்வையிட்டு மேற்பார்வை செய்தனர்.
புத்தளம் பாத்திமா பாலிகா மகாவித்தியாலயத்தில் நடைமுறைப்படுத்தப்படும் கல்வி மற்றும் நிர்வாக முறைகளின் சிறப்பம்சங்களைப் பாராட்டிய இசிப்பத்தான மத்திய கல்லூரி குழுவினர், எதிர்காலத்தில் தமது பாடசாலையிலும் இத்தகைய நடைமுறைகளைப் பின்பற்ற உத்தேசித்துள்ளதாகக் கூறி விடைபெற்றனர்.
வருகை தந்த அனைத்துக் குழுவினருக்கும் பாடசாலை நிர்வாகம் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டது.
















