(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
கற்பிட்டி தில்லையூர் அரசினர் முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலயத்திற்கு வேர்ல்ட் விஷன் (world vision) நிறுவனத்தின் கற்பிட்டி பிரதேச அபிவிருத்தி திட்டத்தின் ஒரு அங்கமாக பாடசாலை மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் முகமாக சுமார் 22 இலட்சம் பெறுமதியில் அமைக்கப்பட்ட மீள் நீர் சுத்திகரிப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டு மாணவர்களுக்கு கையளிக்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (03) பாடசாலையின் அதிபர் எஸ் எம் அரூஸ் தலைமையில் இடம்பெற்றது
இந் நிகழ்வின் அதிதிகளாக புத்தளம் பாராளுமன்ற உறுப்பினர் என் டி எம் தாஹீர், கற்பிட்டி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எஸ்.எம் றிகாஸ், உப தவிசாளர் சமன் குமார ஹேரத் மற்றும் உறுப்பினர்களான ஏ.ஆர்.எம் முஸம்மில், எஸ் எச் எம் முஸம்மில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கற்பிட்டி நகர அமைப்பாளர் எம் எப் எம் றில்மியாஸ் வடக்கு, வடமேல் மாகாண பிராந்திய முகாமையாளர் ஜூட் நிசாந்த், கற்பிட்டி பிராந்திய நிகழ்ச்சி திட்ட முகாமையாளர் சுபுன் பீரிஸ், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அசேல ரத்வத்த, கற்பிட்டி கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம் ஜவாத், அல்மனார் ஐயூப் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையின் அதிபர் எஸ் சியாவுல் ஹக், தில்லையடி தாருல் அர்கம் ஜூம்ஆ பள்ளிவாசல் பேஷ் இமாம் எம்.டி எம் றிப்கான் (றஹ்மானி) பள்ளிவாசலின் தலைவர் அன்வர்தீன். மீனவ சங்கத்தின் தலைவர் சபுறுல்லாஹ் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
கற்பிட்டி தில்லையூர் அரசினர் முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலய மாணவர்களின் அன்றாட சுத்தமான குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த மீள் நீர் சுத்திகரிப்பு இயந்திரம் நீண்ட நாட்களாக பழுதடைந்து காணப்பட்ட நிலையில் அப்பாடசாலை மாணவர்களுக்கான சுத்தமான குடி நீரைப் பெற்றுக்கொள்வதில் பல ஆண்டுகள் தீர்க்கப்படாத பிரச்சினை நிலவி வந்தது.
அதற்கமைய, வேர்ல்ட் விஷன் நிறுவனத்தின் நிதிப் பங்களிப்பில் நிறுவப்பட்ட இந்த நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் மாணவர்களின் சுத்தமான குடிநீர்த் தேவையை இலகுவாகப் பூர்த்தி செய்துகொள்ள முடியும் என அதிபர் எஸ் எம் அரூஸ் தெரிவித்தார்.
மேலும் இந் நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் அதிதிகளுக்கான நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.















