31 வது தொடர்.................
கிழக்கை மீட்கும் இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்ட அரச படையினர்கள் அனைவருக்கும் கிழக்கில் உள்ள அனைத்து பிரதேசங்களும் பரீட்சயமானதல்ல. அத்துடன் பொது மக்களுக்குள் ஊடுருவியுள்ள LTTE யினரை அடையாளம் காண்பதும் கடினம்.
அதனால் அரச படைகளுக்கு வழிகாட்டுவதற்கும், பொது மக்களிலிருந்து LTTE யினரை வேறுபடுத்துவதற்கும், LTTE க்கு எதிரான தமிழ் இயக்கங்களில் சிலர் முகமூடி அணிந்துகொண்டு காட்டிக்கொடுக்கும் நடவடிக்கை பரவலாக இருந்தது.
இந்திய படையினர் நாட்டைவிட்டு சென்றபோது EPRLF உட்பட அனைத்து தமிழ் இயக்கங்களும், குழுக்களும் இந்தியாவுக்கு தப்பிச் சென்றனர். ஆனால் அவ்வாறு எல்லோரும் இந்தியாவுக்கு சென்றார்கள் என்று கூற முடியாது.
EPRLF, PLOTE, TELO ஆகிய இயக்க உறுப்பினர்கள் இலங்கை அரச பாதுகாப்போடு கொழும்பில் செயற்பட்டு வந்தனர்.
LTTE – பிரேமதாச பேச்சுவார்த்தையின்போது, அனைத்து தமிழ் தரப்பினருடனும் பேசும் நோக்கில், EPRLF இயக்கத்துடன் பிரேமதாசா பேச்சை ஆரம்பித்ததன் காரணமாகே அப்போதைய LTTE யுடனான பேச்சு தோல்வியில் முடிந்தது.
LTTE இயக்கத்தினர் பற்றிய தகவல்களை சேகரித்து இராணுவத்துக்கு வழங்கும் நடவடிக்கையில் PLOTE யின் பங்களிப்பு பிரதானமானதாக இருந்தது. அத்துடன் இராணுவத்துடன் இணைந்து பொது மக்கள் மத்தியில் புலிகளை அடையாளப் படுத்தும் நடவடிக்கையில் மிகத் தீவிரமாக ஈடுபட்டனர்.
மட்டக்களப்பில் இராணுவத்துடன் இணைந்த “ப்லொட் மோகன்” குழுவின் செயற்பாடுகள் அதிகமாக இருந்தது. குறிப்பாக கிழக்கு பல்கலைக்கழக அகதிமுகாமிலிருந்து காணாமல் போனவர்கள் ப்லொட் மோகன் குழுவினரால் காட்டிக் கொடுக்கப்பட்டார்கள் என்று கூறப்படுகின்றது.
அத்துடன் EPRLF இயக்கத்தை சேர்ந்த ராசீக் குழுவும் இராணுவத்துடன் இணைந்து மிகவும் தீவிரமான செயற்பாடுகளில் ஈடுபட்டனர்.
LTTE உறுப்பினர்களை அடையாளம் காண்பது மட்டுமல்லாது, தகவல் வழங்குதல், அரச படைகளுடன் இணைந்து அரச துணைப் படையாக இராணுவ நடவடிக்கையிலும் ஈடுபட்டனர். அத்துடன் பல கொலைகளுக்கு இந்த குழு பொறுப்பாக இருந்ததாகவும் தகவல்கள் உள்ளன.
குறிப்பாக PLOTE, EPRLF, TELO, ராசீக் குழு, மோகன் குழு ஆகிய உறுப்பினர்கள் முகமூடி அணிந்துகொண்டு LTTE உறுப்பினர்களை அடையாளம் காண்பிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டது மட்டுமல்லாது, சுற்றி வளைப்புக்கள், தேடுதல்கள், தாக்குதல் நடவடிக்கைகள், கடத்தல்கள் ஆகியவற்றினை மேற்கொண்டிருந்தனர்.
இலங்கை அரசுடனான LTTE யினரின் பேச்சுக்கள் தோல்வியடைந்து கிழக்கை மீட்கும் இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதும், இந்தியாவில் தஞ்சமடைந்திருந்த தமிழ் இயக்க உறுப்பினர்கள் படிப்படியாக மீண்டும் இலங்கைக்கு வந்து இராணுவத்துடன் இணைந்து செயற்பட ஆரம்பித்தனர்.
1990.11.14 அன்று வெளியான Japan Economic Newswire செய்தியில், PLOTE, TELO ஆகிய இயக்கங்களைச் சேர்ந்த 100 க்கும் அதிகமான ஆயுத உறுப்பினர்கள் LTTE யை தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் மிகத் தீவிரமாக அரசாங்கத்துக்கு உதவி செய்ததாக குறிப்பிட்டிருந்தது.
இராணுவ சோதனை சாவடிகள், இராணுவ வாகனங்கள் ஆகியவற்றினுள் தமிழ் இயக்க போராளிகள் காணப்பட்டதுடன், அகதி முகாம்களில் உள்ளவர்களை அடையாளம் காண்பிப்பதற்கும், அதில் LTTE போராளிகள் மட்டுமல்லாமல், புலிகளுக்கு ஆதரவு வழங்கியவர்களும் அடையாளம் கான்பிக்கப்பட்டனர்.
உண்மை நிலவரம் இவ்வாறிருக்கும்போது இராணுவத்துடன் இணைந்து முஸ்லிம் ஊர்காவல் படையினர் தமிழர்களை கொன்றதான தகவல்கள் உள்ளது.
புலிகள் என்ற சந்தேகத்தில் ஏராளமான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். இந்த கொலைகளுக்கு தமிழ் இயக்கங்களும் ஓர் காரணமாகும். இதனை மறைத்து பழியை முஸ்லிம்களின் தலையில் போடும் திட்டத்திலேயே முஸ்லிம் ஊர்காவல் படையினர் தமிழர்களை கொன்றனர் என்ற பிரச்சாரமாகும்.
இந்த பிரச்சாரத்துக்கு வலுச் சேர்க்கும் விதமாக, உண்மையை அறியாத சில அப்பாவித் தமிழர்கள், யாரோ சொல்லிக் கொடுத்ததை அப்போது ஊடகங்களுக்கு அப்படியே வாக்குமூலம் வளங்கியுமுள்ளனர். அதில் இராணுவத்துடன் இணைந்து நன்றாக தமிழ் பேசியவர்கள் முஸ்லிம்கள் என்ற ரீதியில் அவர்களது வாக்குமூலம் இருந்தது.
முஸ்லிம் ஊர்காவல் படை எப்போது உருவாக்கப்பட்டது ? அவர்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சிகள், ஆயுதங்கள் பற்றி அடுத்துவருகின்ற கட்டுரையில் விரிவாக ஆராயும்போது இந்த உண்மைகளை நிரூபிக்க முடியும்.
தொடரும்....................
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
