நேற்று (20) பாராளுமன்றத்தில் நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பான ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், அக்குறணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கோடிக்கணக்கான ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு முகங்கொடுக்க நிலையான மற்றும் விஞ்ஞானபூர்வமான பொறிமுறையொன்று அவசியமென்றும் வலியுறுத்தினார்.
மேலும் தெரிவித்ததாவது:
சில நாட்களுக்கு முன்னர் அக்குறணையும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களும் மீண்டும் ஒருமுறை பாரிய வெள்ளப்பெருக்கைச் சந்தித்தன. இது தொடர்பாக நாம் தொடர்ந்தும் பேசி வருகின்றோம். இந்த பாராளுமன்றத்தில் மட்டுமல்ல, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் பல தடவைகள் இது தொடர்பாக கடந்த இரண்டு வருடங்களாக நாம், அமைச்சர் லால் காந்தவின் தலைமையிலும், அப்போதைய ஆளுநர் சரத் அபேகோன் தலைமையிலும் நாம் கலந்துரையாடியுள்ளோம். குழுக் கூட்டங்களும் நடத்தப்பட்டன. ஹன்சக விஜயமுனி, பிரதி அமைச்சரும்கூட, கண்டி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு பிரதி அமைச்சராவார். அவரும்கூட இதை அறிவார். இது தொடர்பாக நாம் கலந்துரையாடி, பல நடவடிக்கைகள் எடுத்திருப்பினும், இது விஞ்ஞானபூர்வமாக நடக்கின்றதா என்ற கேள்வியும் இருந்தது.
இப்போது சில நடவடிக்கைகளைக் கையாள்வதாக நமக்குத் தெரியப்படுத்தினார்கள். விசேடமாக பிங்கா ஓயா, கிளை அருவிகளின் மருங்குகள் மற்றும் நீர்த் தேங்கும் பள்ளமான படுகைப் பிரதேசங்கள் ஆகிய இடங்களில் இருந்து மக்களை வெளியேற்றுவதுடன், அதனை வலிமைப்படுத்துவதற்காகப் பலமான கட்டமைப்புகளை உருவாக்குவது போன்ற, பல செயற்பாடுகள் அங்கு இடம்பெற்றிருந்தபோதிலும், இம்முறை கனமழை மற்றும் காற்றுடன் கூடிய சூழலுடன், பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதனால் இப்போது பல கோடிக்கணக்கில் அழிவுகள் ஏற்பட்டுள்ளன.
அடிக்கடி இவ்வாறு நிகழ்கின்ற சூழலை நாம் நன்றாக நினைவில் கொள்ள வேண்டும், இதில் இப்போது பிங்கா ஓயா பகுதி தொடர்பாக ஒரு தீர்மானம் எடுக்க வேண்டும், நாற்பது அடி என்று. ஆனால், அறுபது அடிகளாவது அகலம் இருக்க வேண்டியது அவசியம். அதுமட்டுமல்லாமல், இந்தச் சிறிய ஆற்றுப் பள்ளத்தாக்குகள் மற்றும் பாதுகாப்பு வலயங்கள் (குறிப்பாக ஆற்றங்கரையை ஒட்டியுள்ள நிலப்பகுதிகள் மற்றும் பாதுகாப்புத் திட்டுக்கள் தொடர்பான எல்லைகள்) இருபது அடிக்காவது இருக்க வேண்டும் என்பது நீதி அடிப்படையிலான ஒர் அவசியமாகும்.
ஆனால், அப்படிப்பட்ட பாதுகாப்பு வலையங்களைப் பொருட்படுத்தாமல், அங்கு தேவையற்ற கட்டுமானங்கள் ஏராளமாக, முறையற்ற விதத்தில் கட்டப்பட்டுச் செல்லும் நிலை காணப்படுவதை யார் தான் அறிய மாட்டார்கள். இங்கே நகர அபிவிருத்தி அமைச்சர் இருக்கின்றார். இந்த நகர அபிவிருத்தி அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கின்றார்களா என்று நான் கேட்க விரும்புகிறேன். ஏனெனில், இது தொடர்பாகப் பல பொறுப்புகளும் கொடுக்கப்பட்டன. 'இந்தத் தேவையற்ற கட்டுமானங்களை நாம் உடனடியாக அகற்றுவோம்" என்று கூறினார்கள்.
நான் நேற்று முன்தினம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஊடாக வினவியபோது, இதற்காக இதுவரை இரண்டு வழக்குகள் மட்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அறுநூறுக்கும் அதிகமான தேவையற்ற கட்டுமானங்கள் உள்ளன என்று கூறிவிட்டு, இவ்வாறாக இரண்டு வழக்குகள் மட்டும்தான் தொடுக்கப்பட்டிருக்கின்றன என்பது மிக முக்கியமான ஒரு கேள்வியாகும்.
அதுமட்டுமல்லாமல் வெள்ளப்பெருக்கு தொடர்பாக மழைவீழ்ச்சியை அளவிடும் மானியை, அக்குறணையைச் சேர்ந்த அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற தனிப்பட்ட பொறியியலாளர் ஒருவர் கடந்த இருபது, முப்பது ஆண்டுகளாக, அது தொடர்பான கணிப்புகளை பகுப்பாய்வு செய்து, அது தொடர்பான தகவல்களை வழங்கியும், அது தொடர்பாக விஞ்ஞானபூர்வமாகக் கையாள்வதில் பின்தங்கியே இருக்கின்றோம்.
இது ஒர் அரசாங்கம் மட்டும் செய்த தவறு என்று நாம் கூறவில்லை. இந்த அரசாங்கமும் ஆட்சிக்கு வரும்போது, "இது குறித்து நாம் நடவடிக்கைகள் எடுக்கின்றோம்" என்று பெரியதொரு வாக்குறுதியைக் கொடுத்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, மீண்டும் ஒருமுறை பெரியதொரு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மறுபடியும் ஒருமுறை இந்தச் சிக்கல் எழுந்துள்ளது.
ஆகையால், இது தொடர்பாக விஞ்ஞானபூர்வமாக நாம் செய்ய வேண்டியது என்னவென்று பார்க்க வேண்டும். அனர்த்த முகாமைத்துவ நிலையமும், அதன் அதிகாரிகளும், இது தொடர்பாக செய்வது என்ன என்பது தொடர்பாகவும் ஒரு கேள்வி எழுகிறது. இந்த அதிகாரிகள் அவசியமான கடமைகளை உரிய வேளையில் முறையாகச் செய்கின்றார்களா, இல்லையா என்ற கேள்வியை நாம் மீண்டும் ஒருமுறை இங்கு எழுப்புகிறோம்.
இந்தத் தொடர்ச்சியான கொங்கிறீட் (வார்ப்பு) தளம் அமைத்தல், தடுப்புச் சுவர்கள், நீர் வழிந்தோடும் மார்க்கங்களுக்குப் பெரியதொரு தடையாக மாறியுள்ளது. இவை தொடர்பாக அவசியமான அளவில், அந்த இருபது அடி உள்ள பாதுகாப்பு வலையத்தை உறுதிப்படுத்திக்கொண்டு, இந்தச் செயற்பாடுகளை எடுப்பதில் உள்ள தடையை நீக்குவதா அல்லது இந்தத் தேவையற்ற கட்டுமானங்களை அகற்றுவதா என்பது தொடர்பாகத் தீர்மானம் எடுக்க வேண்டிய காலம் கனிந்துள்ளது.
இது தொடர்பாக நாம் அடிக்கடி பாராளுமன்றத்திலும் பேசினோம்; எமது மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும் பேசினோம். ஆனால், இன்னும் இதற்குத் தீர்வு கிடைக்கவில்லை என்பதை நாம் இங்கு கூறியாக வேண்டும்.
அதேபோன்று, இப்போது பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியர் நந்தலால், அதேபோன்று பொறியியலாளர் நிலூகா போன்றோர் இது தொடர்பாக உரிய அறிக்கைகளையும் வழங்கியுள்ளனர். அந்த அறிக்கைகளைப் பகுப்பாய்வு செய்து ஏதேனும் ஒரு காரியத்தைச் செய்வார்கள் என்று வாக்குறுதி அளித்தும் கூட, அதற்காக எந்தவொரு நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
அதேபோன்று, காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் (SLRDC), இந்த நாட்டின் வெள்ளப்பெருக்கு தொடர்பாகச் சிறப்பான அறிவைக் கொண்ட ஒரு நிறுவனம் ஆகும். அந்த நிறுவனமும் ஏதேனும் ஒரு அறிக்கையைப் பெற்று, இதைக் கவனத்தில் கொண்டு, இந்தச் சிக்கல் மீண்டும் உருவாகாதவாறு, அதற்கான தீர்வொன்றைக் காண வேண்டும்.
அதுமட்டுமல்லாமல், அங்குள்ள பல அரசாங்க நிறுவனங்கள், குறிப்பாக நகர அபிவிருத்தி அதிகார சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை போன்ற இன்னும் பல நிறுவனங்கள் அருகில் உள்ள ஆற்றில் மழை வீழ்ச்சி அதிகரித்தவுடன் மண்சரிவு ஏற்படும் இடங்களில் பல வீதி விபத்துக்கள் ஏற்படுகின்றன. அக்குறணைப் பகுதியில் ஏழாவது மைல் கட்டைக்கும் எட்டாவது மைல் கட்டைக்கும் அருகில் குருகொட சந்தியில், நேற்று முன்தினம் கூட சிலரின் உயிர்கள் அநியாயமாகப் பறிபோயின.
இது தொடர்பாகவும், அந்த வீதி தொடர்பாகவும், அந்த வளைவில் உள்ள பல சிக்கல்கள் தொடர்பாகவும் கவனத்தில்கொண்டு, இந்தக் சிக்கல்களுக்கெல்லாம் தீர்வுகளைப் பெற்றுத் தர வேண்டும். இந்தச் சிக்கலில் அரசாங்கத்தின் கவனம் அதிகம் ஈர்க்கப்பட வேண்டும்.
விசேடமாக, அனர்த்த முகாமைத்துவ நிலையம், நகர அபிவிருத்தி அதிகார சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை, அதேபோன்று நீர்ப்பாசனத் திணைக்களம், மகாவலி அதிகார சபை போன்ற பல நிறுவனங்களை ஒன்றிணைத்து, இதற்கு அவசியமான பல்வேறு நிறுவனங்களின் விசேட செயலணியை கட்டமைத்து, இந்த முறை வரவு-செலவுத் திட்டம் ஊடாக ஜனாதிபதியின் கீழான அரசாங்கம் இதற்காகத் தனி நிதி ஒதுக்கீட்டை மேற்கொண்டு, இந்தப் பிரச்சினைக்கு நிலையான தீர்வுகளைப் பெற்றுத் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, விடைபெறுகிறேன்.
(-விருட்ச வேந்தன்)
