பா. கிருபாகரன் – ந. ஜெயகாந்தன்
அரசாங்கத்திடம் இனவாதம் இல்லை என்றால், சுங்கத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முஸ்லிம் சமூகத்தின் பிரதான புனித நூலான குர்ஆன் பிரதிகளை விடுவிக்க வேண்டும். இல்லாவிட்டால் குர்ஆனை தடுத்து வைத்திருப்பதற்கான தண்டனையை அனுபவிக்க நேரிடும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினரான எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற நலன்கள், அபிவிருத்தி மற்றும் அபாயகரமான அவுடதங்கள் (திருத்தச்) சட்டமூலமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்று கையிலேயே இவ்வாறு தெரிவித்த
அவர் மேலும் பேசுகையில், நாட்டில் இருந்து பயங்கரவாதத்தை ஒழித்தது போன்று போதைப்பொருளையும் நாட்டில் இருந்து ஒழிப்பதற்கு கட்சி பேதமின்றி அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும். போதைப்பொருள் ஒழிப்புக்கு அரசாங்கம் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் நாங்கள் பூரண ஆதரவை வழங்குவோம்.
அதேநேரம் அரசாங்கம் இனவாதத்துக்கு இடமளிப்பதில்லை என தெரிவிக்கிறது. ஆனால் கோத்தாபய ராஜபக்ஷ அரசாங்கத்தின்போது, முஸ்லிம் சமூகத்தின் 40 ஆயிரம் புனித குர்ஆன் பிரதிகள் சுங்கத்தில் தடுக்கப்பட்டன. அந்த குர்ஆன் பிரதிகளை அவர்கள் இறுதிவரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது, அதனை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப் பட்டபோதும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.
இந்த குர்ஆன் பிரதிகளை விடுவிக்குமாறு தெரிவித்து, 22 முஸ்லிம் எம்.பிக்கள் கைச்சாத்திட்டு கடிதம் ஒன்றை அரசாங்கத்துக்கு கையளித்திருந்தோம். நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தும் இதுவரை அதனை அரசாங்கம் செய்யாமல் இருக்கிறது. அதனால் அரசாங்கம் இனவாதம் இல்லை என்றால், முஸ்லிம் சமூகத்தின் பிரதான புனித நூலான அந்த குர்ஆன் பிரதிகளை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லாவிட்டால் குர்ஆனை தடுத்து வைத்திருப்பதற்கான தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்றார்.
