(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
அகில இலங்கை முஸ்லிம் வாலிப பேரவையின் (ACYMMA) ஏற்பாட்டில், உயர்கல்விக்கான உதவித்தொகை பெறும் மாணவர்களைத் தெரிவு செய்வதற்கான நேர்முகத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை (25) புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரியில். அகில இலங்கை வை எம் எம் ஏ யின் புத்தளம் மாவட்ட இணைப்பாளர் எம் டி எம் நபீல் தலைமையில் நடைபெற்றது.
இத் திட்டத்தின் கீழ், க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்து, தற்போது க பொ த உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்கான நேர்முகத் தேர்வு புத்தளம், கற்பிட்டி, மதுரங்குளி , அநுராதபுரம் மற்றும் மன்னார் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 50 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.
பொருளாதாரச் சவால்களுக்கு மத்தியிலும் மாணவர்கள் தமது கல்வியைத் தடையின்றித் தொடர்ந்து, உயர்கல்வி வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இந்நிகழ்வில் அகில இலங்கை முஸ்லிம் வாலிப பேரவையின் தற்போதைய தேசியத் தலைவர் எம்.ஆர்.எம். சியாத், முன்னாள் தேசியத் தலைவர் எம்.டி. தாசிம், விசேட உறுப்பினர் அன்வர் சதாத், மற்றும் புத்தளம் நகரக் கிளைத் தலைவர் ஏ.டபிள்யூ. ஆசிக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு நிதியுதவி வழங்குவதன் மூலம் அவர்களின் எதிர்காலக் கல்விப் பயணத்தை வலுப்படுத்துவதுடன், பொருளாதாரக் குறைபாடுகள் காரணமாக உயர்கல்வி வாய்ப்புகள் தடைப்படுவதைத் தவிர்ப்பதிலும் இத்தகைய உதவித்தொகைத் திட்டங்கள் முக்கிய பங்காற்றுகின்றன.
மேலும் கண்டி, கொழும்பு, அம்பாறை , பதுளை மற்றும் திருகோணமலை போன்ற பகுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்கான நேர்முகப் பரீட்சை விரைவில் அந்தந்த பகுதிகளில் நடைபெற உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





