JobVibe.lk - Sri Lanka Job Portal

ஹாஜியானி சித்தி ஜெஸீனா நிஸ்றீனின் ‘சங்கையின் ஒலி’ கவிதைத் தொகுப்பு நூல் வெளியீடு!

நூருல் ஹுதா உமர்

ஹாஜியானி சித்தி ஜெஸீனா நிஸ்றீன் எழுதிய ‘சங்கையின் ஒலி’ கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா இன்று (25) ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணிக்கு சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தில் அமைந்துள்ள கலாசார மத்திய நிலையத்தில் நடைபெற்றது.

முன்னாள் அதிபரும் முன்னாள் கோட்டக் கல்வி அதிகாரியுமான கலாபூஷணம் ஏ. பீர்முகம்மது (இரண்டாம் விசுவாமித்திரன்) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஸகீலா இஸ்ஸதீன் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.

கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் ஏ.எல். தௌபீக், அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரீ.எம். றின்ஸான், சாய்ந்தமருது பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம். றஷ்மி மூஸா ஆகியோர் கலந்து கொண்டனர்.

விசேட அதிதிகளாக சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையப் பொறுப்பதிகாரியும் கலாசார மேம்பாட்டு உத்தியோகத்தருமான ஏ.பி. நௌஷாத் மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எம். தௌபீக் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

நூலாசிரியர் ஹாஜியானி சித்தி ஜெஸீனா நிஸ்றீன், தனது கவிதைத் தொகுப்பு நூலை ஹாஜியானி ஜெமீலா கரீம் அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்தார்.

நூலின் முதன்மைப் பிரதிகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உச்சபீட உறுப்பினரும் இளைஞர் அமைப்பாளருமான எம்.எம்.எம். பாமி, ஓய்வுபெற்ற பொறியியலாளர் அல்ஹாஜ் எம்.ஐ.எம். அப்துல் ஸலாம் மற்றும் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர் அல்ஹாஜ் சி.பி.எம். ஹனீபா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

நிகழ்வில் ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்த்துறை சிரேஷ்ட பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ் மற்றும் தென்கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்த்துறை முதுநிலை விரிவுரையாளர் எம். அப்துல் றஸாக் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

ஸ்ரீலங்கா பென் கிளப்பின் தலைவியும் கலாபூஷணமுமான சித்தி மஷுறா சுஹுர்தீன் நூல் தொடர்பான இரசனைக் குறிப்பை வழங்கினார். அம்பாறை மாவட்ட கலாசார அதிகாரசபையின் பிரதித் தலைவரும் மருதம் கலைக்கூடல் மன்றத்தின் தலைவருமான அஸ்வான் சக்காப் மௌலானா வாழ்த்துரை வழங்கினார்.

இந்நூல் வெளியீட்டு விழா கவிதை இலக்கியத்தையும் படைப்பாற்றலையும் ஊக்குவிக்கும் நிகழ்வாக அமைந்ததுடன், இலக்கிய ஆர்வலர்கள், கல்வியாளர்கள், கலாசாரத் துறை சார்ந்தோர் மற்றும் சமூகப் பிரமுகர்களின் பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்றது.

























Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال