JobVibe.lk - Sri Lanka Job Portal

BIMSTEC – 2026’ கடல்சார் பாதுகாப்புப் பயிற்சியில் பங்கேற்பதற்காக கஜபாகு கப்பல் இந்தியாவுக்குப் புறப்பட்டது

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

இந்தியக் கடற்படையினால் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்படும் ‘BIMSTEC – 2026’ கடல்சார் பாதுகாப்புப் பயிற்சியில் பங்கேற்பதற்காக, இலங்கை கடற்படைக் கப்பலான கஜபாகு ஞாயிற்றுக்கிழமை (2026 ஒக்டோபர் 25) நாட்டிலிருந்து புறப்பட்டது.

 இதன்போது, குறித்த கப்பலுக்கு கடற்படை மரபுகளுக்கமைய பிரியாவிடை வழங்கும் நிகழ்வு கொழும்புத் துறைமுகத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டுப் பயிற்சியில் பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மியான்மர், நேபாளம், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான முன்னெடுப்பின் (Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation – BIMSTEC) உறுப்பு நாடுகளின் கடற்படைகள் மற்றும் கடலோரக் காவல் படைகள் பங்கேற்க உள்ளன. 

இந்தப் பயிற்சியானது கடல்சார் கள விழிப்புணர்வை மேம்படுத்துதல், வங்காள விரிகுடா பிராந்தியத்தில் கடல்சார் நடவடிக்கைகளின் ஒருங்கிணைப்பை உருவாக்குதல் மற்றும் பிராந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்துகிறது.

மேலும், 2026 ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் நவம்பர் 03 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இப்பயிற்சியில் பங்கேற்பதற்காக, இலங்கை கடற்படைக் கப்பலான கஜபாகு புறப்படும் நிகழ்வு கடற்படை மரபுகளுக்கு அமைவாக நடைபெற்றது.

இந்நிகழ்வில், நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் நாயகமான ரியர் அட்மிரல் சமிந்த கருணாசேன, மேற்கு கடற்படை கட்டளையின் பிரதி தளபதியான கொமடோர் அருண விஜேவர்தன, கடற்படை நடவடிக்கைகளுக்கான பணிப்பாளரான கொமடோர் அதுல ஜயவீர உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். 

இதன்போது, கஜபாகு கப்பலின் கட்டளை அதிகாரியான கெப்டன் அசோக வீரசேகர அவர்களால், நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் நாயகமான ரியர் அட்மிரல் சமிந்த கருணாசேன அவர்களுக்கு நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.









Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال