(எழுத்து: வை.அறபாத்)
இலங்கையின் நீண்டகால பொருளாதார மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்குத் தொடர்ச்சியாகவும் தாராளமாகவும் உதவிகளை வழங்கி வரும் நட்பு நாடான சவூதி அரேபியா மீதான தாக்குதல்கள் மற்றும் அங்கு நிலவும் போர்ச்சூழல் குறித்து, இலங்கை அரசாங்கமும் இராஜதந்திரத்தரப்புகளும் வெளிப்படுத்தியுள்ள உறுதியான ஆதரவுப்போக்கு மிகுந்த வரவேற்புக்குரியதுடன், இரு நாடுகளுக்கிடையிலான ஆழமான நட்புறவின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது.
இலங்கையின் அபிவிருத்தியில் சவூதி வளர்ச்சி நிதியம் (SFD) மூலம் சவூதி அரேபியா இதுவரை 420 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான சலுகைக்கடன்களையும் பெருந்தொகை நிதியுதவிகளையும் வழங்கியுள்ளது.
இலங்கையின் சப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவபீட உருவாக்கம் (50 மில்லியன் டொலர்), வயம்ப பல்கலைக்கழக அபிவிருத்தி, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட அதிநவீன காக்காய் வலிப்பு சிகிச்சை மையம், மகாவலி கங்கை மற்றும் களுகங்கை நீர்ப்பாசனத்திட்டங்கள், மட்டக்களப்பு – திருகோணமலை மற்றும் பேராதனை – பதுளை – செங்கலடி வீதிப் புனரமைப்புத்திட்டங்கள் எனப்பல பிரமாண்ட அபிவிருத்திகளுக்கு நிதியுதவி வழங்கி தொடர்ந்து தோள்கொடுத்த நாடு சவூதி அரேபியாவாகும்.
நெருக்கடியான காலகட்டங்களில் நமக்கு தொடர்ந்தும் கைகொடுத்த இத்தகைய நட்பு நாட்டிற்கு என்றும் நன்றியுடையவர்களாக இருப்பது இலங்கையின் பிரதான கடமையாகும்.
யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்தும் தொடர் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களால் சவூதி அரேபியாவில் தற்போது ஒரு போர்ச்சூழல் நிலவி வருகிறது.
குறிப்பாக, அமெரிக்கா-ஈரான் மோதலால் தூண்டப்பட்ட தீவிரமடைந்து வரும் போரின் மத்தியில், யேமனின் ஹூதி கிளர்ச்சிக்குழு சவூதி அரேபியா மீதான ஏவுகணைத்தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி அதன் வான்வெளியை முடக்க முயன்றுள்ளது.
இதன் ஒரு கட்டமாக, ரியாத் (King Khalid International Airport) விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 'சவூதியா' விமான நிறுவனத்தின் விமானி கப்டன் ஹமூத் அலி அல்கல்தமி உட்பட மூன்று சவூதி பிரஜைகள் கொல்லப்பட்டதாக சவூதி அதிகாரிகள் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர்.
இத்தாக்குதல்கள் நிலத்தில் நிறுத்தப்பட்டிருந்த 'சவூதியா' விமானத்தைச்சேதப்படுத்தியதுடன், விமான நிலையத்தின் மீது கரும்புகை எழச்செய்ததோடு, பல சர்வதேச விமான நிறுவனங்களின் சேவைகளையும் தற்காலிகமாக இரத்து செய்யத்தூண்டியுள்ளது.
இத்தகைய அச்சுறுத்தலான சூழலிலும், சவூதி அரேபியா முழுவதும் சுமார் இரண்டரை இலட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் பல்வேறு துறைகளில் தொழில் நிமித்தம் பாதுகாப்பாக வசித்து வருகின்றனர்.
சவூதி மீதான இத்தகைய வன்முறைத்தாக்குதல்கள் அந்நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதுடன், அங்கு வாழும் நமது இலட்சக்கணக்கான இலங்கைத்தொழிலாளர்களின் பாதுகாப்பையும் நேரடியாகப் பாதிக்கக்கூடும்.
இதனை உணர்ந்து, சவூதி அரேபியாவிலுள்ள சிவிலியன் விமான நிலையங்கள் மீதான சமீபத்திய தாக்குதல்களுக்கு இலங்கை வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தனது வலுவான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
அத்துடன், தாக்குதல்களில் உயிரிழந்த சவூதி விமானி உட்பட மூன்று பேரின் குடும்பங்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத்தெரிவித்துள்ள இலங்கை அரசாங்கம், காயமடைந்தவர்கள் விரைவில் நலம் பெற பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளதுடன், சவூதி அரசுடனும் மக்களுடனும் தனது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.
மேலும், பதற்றமான சூழ்நிலைகளைத்தணிக்க அனைத்துத்தரப்பினரும் அதிகபட்ச பொறுமையைக் கடைப்பிடித்து ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டுமெனவும் இலங்கை அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
வரலாற்று ரீதியாக இலங்கை மக்களின் கல்வி, கலாசார மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்குச் சவூதி அரேபியா அளப்பரிய பங்காற்றியுள்ளது.
"ஆபத்தின் போது தான் உண்மையான நண்பனை அறிந்து கொள்ள முடியும்" என்ற முதுமொழிக்கேற்ப, சவூதி அரேபியா எதிர்கொள்ளும் இத்தகைய சவாலான காலகட்டத்தில் இலங்கை அரசும், அரசியல் தலைவர்களும், ஊடகங்களும் அந்நாட்டிற்குத் தங்களது முழுமையான ஆதரவை வழங்குவதும், இலங்கைத்தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தொடர்ச்சியாகக் குரல் கொடுப்பதும் இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை உச்சத்திற்குக் கொண்டு செல்லும்.
சவூதி அரேபியா இலங்கைக்கு செய்த வரலாற்றுச் சிறப்புமிக்க அபிவிருத்தி உதவிகளுக்கு மதிப்பளித்தும் அந்நாட்டின் மீதான பற்றுதலை வெளிப்படுத்தியும், அங்கு வாழும் இலட்சக்கணக்கான இலங்கைத் தொழிலாளர்களின் உயிர்ப்பாதுகாப்பை முன்னிறுத்தியும், சவூதி அரேபியாவிற்கெதிரான தாக்குதல்களை இலங்கை அரசு உத்தியோகபூர்வமாகக் கண்டித்துள்ளமை நன்றியுள்ள ஒரு நாடாக இலங்கையின் பொறுப்புணர்வை சர்வதேச அரங்கில் மிகச்சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளது.
