எம்.யூ.எம்.சனூன்
1990 ஆம் ஆண்டு வடக்கு முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட சம்பவத்தின் 36 ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு, பலவந்தமாக வெளியேற்றப்பட்டோர் சங்கம் (1990) ஏற்பாட்டில் வெள்ளிக்கிழமை (30) புத்தளம் ரத்மல்யாய சந்தியில் அமைதியான கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சங்கத்தின் தலைவர் முஜாகித் நிஸார் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்தார்.
பல தசாப்தங்களாகத் தீர்க்கப்படாமல் இருக்கும் வடக்கு முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள், உரிமைகள் மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பான கோரிக்கைகளை அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டுவரும் நோக்கில் இப்போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் முன்வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கைகள்,
மீள்குடியேற்ற அமைச்சு ஒன்றை நிறுவுதல். பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடக்கு முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றப் பணிகளைத் திட்டமிட்டு முன்னெடுக்கத் தனியான அமைச்சு ஒன்றை நிறுவ வேண்டும்.
வடக்கு முஸ்லிம்களுக்கு நீதி வழங்குதல்.1990 ஆம் ஆண்டு இடம்பெற்ற பலவந்த வெளியேற்றத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் இழப்புகள், துயரங்கள் மற்றும் உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டு உரிய நீதி வழங்கப்பட வேண்டும்.
ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்தல். 1990 ஆம் ஆண்டு பலவந்த வெளியேற்றம் தொடர்பான உண்மைகளைக் கண்டறியவும், பாதிக்கப்பட்ட மக்களின் முறைப்பாடுகளைப் பதிவு செய்யவும், தீர்வுகளைப் பரிந்துரைக்கவும் ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும்.
அங்கு முன்வைக்கப்பட்ட ஏனைய கோரிக்கைகள்,
மீள்குடியேற்றம் வேண்டும்,
நீதியை நிலைநாட்ட வேண்டும்,
எமது உரிமைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும், வரலாற்று உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய தீர்வுகள் வழங்கப்பட வேண்டும்.
36 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால் எமது நீதி கோரிக்கை இன்னும் முடிவடையவில்லை. எமது போராட்டம் வெறுப்புக்கானதல்ல நீதிக்கானது. எமது கோரிக்கை பழிவாங்கலுக்கானதல்ல. உரிமைக்கானது.
பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடக்கு முஸ்லிம் மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை எமது குரல் ஓயாது என ஆர்ப்பாட்ட காரர்கள் தெரிவித்தனர்.






