எம்.யூ.எம்.சனூன்
வட பகுதியிலே இருந்து, எல்.ரீ.ரீ.ஈ. பயங்கரவாதிகளால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு, இன்றைக்கு முப்பத்தி ஆறு ஆண்டுகள் நிறைவடைகிறது. 1990.10.30 திகதியை, உலகறிந்த உண்மைகளை யாராலும் மறுக்க முடியாத ஒரு உண்மை. பயங்கரவாதிகளால், யாழ் முஸ்லிம்கள், பலவந்தமாக, உரிமைகள் மறுக்கப்பட்டு, உடைமைகள் பறிக்கப்பட்டு, தமிழ் சகோதரத்துவ உறவுகள் வேரறுக்கப்பட்ட அந்த நாள் இன்றாகும் என அஹ்மத் லெப்பை நைஸர் தெரிவித்தார்.
பலவந்தமாக வெளியேற்றப்பட்ட யாழ். முஸ்லிம் அமைப்பு, கறுப்பு அக்டோபரை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (30) நடாத்திய செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே அதன் செயலாளரான அஹ்மத் லெப்பை நைஸர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
புத்தளம் கடுமையான குளம் வீதியில் அமைந்துள்ள அதன் காரியாலயத்தில் நடைபெற்ற இந்த செய்தியாளர் மாநாட்டில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
அந்த நாள் தொட்டு, இன்று வரைக்கும், நாங்கள் நீதிக்காக அழுது, கண்ணீரின் மூலமாக, எத்தனையோ அரசாங்கங்களிடம் கோரிக்கைகள் விடுகின்றோம்.
எவ்வளவு அரசாங்கங்கள் வந்தும், மூன்று தசாப்தங்கள் கடந்தும் கூட, எங்களுடைய நீதியான, எங்களுக்கு நடக்க வேண்டிய மீள்குடியேற்றம், அதே மாதிரி கொடுப்பனவுகள் என பல்வேறு விவகாரங்கள் யாழ் முஸ்லிம்களுக்கு மட்டும், ஏன் ஒன்றுமே நடைபெறவில்லை என்றுதான் எங்களுடைய முதல் கேள்வி.
இந்த விடயங்களை ஐந்து வருடங்களுக்கு முன்பிருந்து, கிழக்கு மாகாண மக்கள், அதுவும் காத்தான்குடி மக்கள், அங்கே வேலை செய்யக்கூடிய மீடியாக்கள், அதே போன்று அங்கே பணி புரியக்கூடிய ஊடகங்கள் மூலமாக, தொடர்ச்சியான முறையிலே, அந்த ஞாபகங்களை, வட பகுதியிலே யாழ் முஸ்லிம்களுக்கு நடந்த அநியாயத்தை ஞாபகமூட்டிக் கொண்டே வந்தார்கள்.
அந்த ஞாபக மூட்டல் காரணமாக, கோமாவில் இருந்த பலர் இன்றைக்கு விழித்து விட்டார்கள். அந்த விழிப்புணர்வுக்கு காரணம் அந்த கிழக்கு மாகாண மக்கள்தான். அந்த காத்தான்குடி மக்கள் எங்களுக்கு முழு ஆதரவாக இருக்கின்றார்கள்.
அதே போன்று, எங்களுடைய புத்தளம் சகோதரர்கள், நிலத்தால் வேறென்றாலும், இனத்தால் ஒன்று என்று உறுதி செய்யப்பட்ட எங்களுடைய சகோதரர்கள், இன்று வரைக்கும் எங்களுடன் தோளுக்கு தோள் நின்று, உதவி எனும் அஸ்திவாரத்தை போட்டுத் தந்து, "நாங்கள் இருக்கின்றோம்" என்று உதவி புரிகிறார்கள்.
எங்களுடைய கௌரவ ஜனாதிபதி அவர்களிடம், அன்பான, பண்பான, கவலையுடன் நாங்கள் கேட்டுக் கொள்வது என்னவென்றால்,
வருகின்ற பட்ஜெட்டில், எல்லா விஷயங்களுக்காகவும் நிதிகள் ஒதுக்கப்பட்டுக் கொண்டிருக்கையில், எங்களுடைய விஷயங்கள் ஏன் ஒன்றுமே பாராமுகமாக இருக்கிறது.
ஆனால், நிச்சயமாக இந்த அரசாங்கம் எங்களுக்கு செய்து தரும் என்ற ஒரு நம்பிக்கையோடு, நாங்கள் இரண்டு விஷயங்களை முன் வைக்க விரும்புகின்றோம். அதில் ஒன்றுதான் மீள்குடியேற்றம்.
மீள்குடியேற்றம் என்று சொல்லும் போது புத்தளத்தில் சோல்டன் முகாம் என்று ஒன்று இருக்கிறது. அந்த முகாமை காட்டி பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் பிழைத்து விட்டார்கள்.
ஆனால், எங்களுடைய விஷயங்கள் அதாவது வடபகுதியிலிருந்து வந்த முஸ்லிம்கள், மீண்டும் மீள்குடியேறப் போனார்கள்.
அண்ணன் பாலசிங்கம் ஒத்துக்கொண்டார், முஸ்லிம் தரப்புக்கு நாங்கள் செய்தது சரியான துரோகம் என்று. அதே போன்று, தமிழ் தரப்புகளில் சிலர் எங்களை இப்போதும் விமர்சித்து கொண்டிருக்கின்றார்கள்.
ஆனால், பணத்தைக் கொண்டோ, இருக்கக்கூடிய சீட்டுக்காகவோ, முஸ்லிம்களை அடகு வைக்க வேண்டாம். நாங்கள் யாருக்கும் அடிமையும் இல்லை. யாருக்கும் தொந்தரவாளரும் இல்லை.
நாங்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றோம். தமிழ் சகோதரர்கள் எங்களுடைய உறவு. ஒரு கண் வலது கண் என்றால், இடது கண் எங்களுடைய சிங்கள சகோதரர்கள். அதை அசைக்க முடியாது. அதை அசைப்பதற்கு பார்த்தாலும் எப்பவும் நடைபெறாது என்று சொல்லி, என்னுடைய இந்த பலவந்தமாக வெளியேற்றப்பட்ட ஞாபகார்த்த பேச்சை நிறுத்திக் கொண்டு விடைபெறுகிறேன் எனக்கூறினார்.


