JobVibe.lk - Sri Lanka Job Portal

அக்கரைப்பற்று கொலைச் சம்பவமும், திராய்க்கேணி பழிவாங்களும்.

33 வது தொடர்..........

திராய்க்கேணி படுகொலை சம்பவம் மிகவும் பிரபலமானது. இதனை வைத்து சில தமிழ் ஊடகங்கள் மிகைப்படுத்திய செய்திகளை வெளியிட்டதன் காரணமாக இதன் வரலாற்று உண்மையை இங்கே பதிவு செய்கிறேன்.  

06.08.1990 அன்று திராய்க்கேணி கிராமத்தில் சுமார் 41 தமிழர்கள் கொல்லப்பட்டதாக பதிவுகள் உள்ளது. திராய்க்கேணி கிராமமானது அம்பாறை மாவட்டத்தின் ஒலுவில், பாலமுனை ஆகிய கிராமங்களுக்கு இடையில் அமைந்துள்ள சிறிய கிராமமாகும். 

இரண்டாவது ஈழப்போர் ஆரம்பிக்கப்பட்டு கிழக்கு மாகாணத்தில் LTTE யினரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த நகரங்கள் அரச படையினரினால் கைப்பற்றப்பட்டதன் பின்பு தமிழ் – முஸ்லிம் இனங்களுக்கிடையில் வன்முறை தீவிரமடைந்தது.  

குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் கொலைகள், கடத்தல்கள், காணாமல் போதல், பழிவாங்கும் தாக்குதல்கள் ஆகியன தொடர்ந்து நடைபெற்று வந்தன. வீட்டைவிட்டு செல்கின்றவர்கள் மீண்டும் வீடு திரும்புவார்களா என்ற அச்சம் அப்போது இருந்தது. 

1990 ஆகஸ்ட் முதலாவது வாரம் அம்பாறை மாவட்டத்தில் என்றுமில்லாத பதட்டம் நிலவியது. 1990.07.30 அன்று அக்கரைப்பற்று பகுதியை சேர்ந்த 17 முஸ்லிம் விவசாயிகள் காணாமல் போனார்கள். அதில் கொல்லப்பட்ட 14 பேரின் உடல்கள் 05.08.1990 அன்று கண்டுபிடிக்கப்பட்டதாக Human Rights Watch பதிவு செய்துள்ளது. 

விவசாயிகள் எப்போதும் சூரிய உதயத்துக்கு முன்பு வயல்களுக்கு சென்றுவிடுவார்கள். அன்றைய தினம் நாட்டில் என்ன நடக்கப்போகின்றதென்று அவர்களுக்கு தெரியாது. அவ்வாறு எதுவும் அறியாத அப்பாவி விவசாயிகள் வயலுக்கு சென்று வீடு திரும்பவில்லை. பின்பு சித்திரவதை செய்யப்பட்ட நிலையில் அவர்களது உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டது. 

மேலும், 4 – 5.08.1990 ஆகிய இரு தினங்களில் அம்பாறை மாவட்டத்தில் பல ஊர்களிலிருந்து வயல்களுக்கு சென்ற 30 க்கு மேற்பட்ட முஸ்லிம் விவசாயிகள் வீடு திரும்பவில்லை. சில நாட்களில் 18 பேர்களின் உடல்கள் பரவலாக கண்டுபிடிக்கப்பட்டன. அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டவர்களில் ஒலுவில், பாலமுனை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளும் அடங்கும். 

இந்த சம்பவங்கள் அனைத்தும் LTTE யினரால் மேற்கொள்ளப்பட்டவை என்று பதிவாகியுள்ளது.  

கொல்லப்பட்ட விவசாயிகளின் உடல்களை பார்த்ததும், ஆத்திரமடைந்த முஸ்லிம் இளைஞர்கள் STF உதவியுடன் திராய்க்கேணி கிராமத்துக்குள் புகுந்து கத்தி, வாள் போன்ற ஆயுதங்களை பாவித்து வன்முறைகளில் ஈடுபட்டுள்ளனர். 

எந்தத் தரப்பாக இருந்தாலும், போரில் சம்பந்தப்படாத அப்பாவி பொது மக்களை கொலை செய்வதும், அச்சுறுத்துவதும் கண்டிக்கத்தக்கது. அதனை ஏற்றுக்கொள்ள முடியாது.  

காணாமல் போன தங்களது உறவுகளை 05.08.1990 அன்று சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்ட நிலையில் உடலைக் கண்டதும் உணர்ச்சிவசப்பட்டு பொங்கியெழுந்த முஸ்லிம் இளைஞர்கள், மறுநாள் 06.08.1990 அன்று காலை திராய்க்கேணி கிராமத்துக்குள் புகுந்து பழிதீர்த்தனர். இதற்கு STF உடந்தையாக இருந்ததாக UTHR யின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

திராய்க்கேணி படுகொலை பற்றி பலவிதமான மிகைப்படுத்தப்பட்ட செய்திகள் உள்ளது. அதில், நூற்றுக்கு மேற்பட்ட தமிழர்களை முஸ்லிம் ஜிஹாத் மற்றும் முஸ்லிம் ஊர்காவல் படையினர் திட்டமிட்டு கொலை செய்து, சொத்துக்களை கொள்ளையடித்ததாக கூறப்படுகின்றது. 

ஆனால் அது அவ்வாறல்ல, இந்த சம்பவத்தில் ஒரு துப்பாக்கி ரவைகள்கூட பாவிக்கப்படவில்லை, 41 பேர் வாள், கத்தி போன்ற ஆயுதங்களினால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நடைபெறும்போது முஸ்லிம் ஊர்காவல் படையினர் உருவாக்கப்படவில்லை. 

அத்துடன், திராய்க்கேணி கிராம மக்கள் மிகவும் வறுமையான நிலையில் கூலி வேலை செய்கின்றவர்கள். அங்கு கொள்ளையடிப்பதற்கு அவர்களிடம் அப்போது எதுவும் இருந்திருக்கவில்லை. 

திராய்க்கேணி கிராம மக்கள் பாலமுனை, ஒலுவில் ஆகிய கிராம மக்களுடன் நீண்டகாலமாக மிக நெருக்கமாக இரண்டரக் கலந்து வாழ்ந்து வந்தவர்கள். எந்தக் காலத்திலும் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடந்ததில்லை. 

அதாவது சம்பவம் நடைபெற்ற 06.08.1990 அன்றைய தினத்துக்கு முன்போ அல்லது அதற்கு பின்போ திராய்க்கேணியில் மீண்டும் இவ்வாறான சம்பவம் நடந்ததில்லை. 

எளியவன் தலையில் பொழுது விடிவது போன்று, 05.08.1990 அன்று முஸ்லிம் விவசாயிகளின் கொலை செய்யப்பட்ட உடலைக் கண்டதும், ஆத்திரத்தில் பொங்கியெழுந்து பழிதீர்க்கும் நடவடிக்கையாக இதனை பார்க்கலாமே தவிர, இது திட்டமிட்ட கொலை என்பது மிகைப்படுத்தப்பட்ட செய்தியாகும். 

அத்துடன் முஸ்லிம் விவசாயிகள் கொலை செய்யப்படாமல் இருந்திருந்தால், திராய்க்கேணியில் இவ்வாறான சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை.   

தொடரும்.................

முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது




Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال