JobVibe.lk - Sri Lanka Job Portal

"நீர்ப்பாசனத்தின் பெருமை எமது பாரம்பரியம்" எனும் தேசிய குளங்கள் புனரமைப்பு ஆரம்பம்.

எம்.யூ.எம்.சனூன்

விவசாயம், கால்நடை வளர்ப்பு, நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சகத்தின் கீழ் செயல்படுத்தப்படும் "நீர்ப்பாசனத்தின் பெருமை எமது பாரம்பரியம்" எனும் தேசிய குளங்கள் புனரமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஆனமடு தொகுதியின் நவகத்தேகமவில் அமைந்துள்ள மல்மடுகம குளத்தின் அபிவிருத்திக்கான அதிகாரபூர்வ ஆரம்ப விழா ஞாயிற்றுக்கிழமை (04) இடம்பெற்றது.

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

சராசரி நுகர்வோருக்கு நியாயமான விலையில் தரமான உணவை வழங்குவதற்கும், பழைய உணவுப் பண்பாட்டை மீட்டெடுப்பதற்கும், கடந்த காலத்தில் ஒடுக்கப்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை வளப்படுத்துவதற்கும் அரசாங்கம் தேசியப் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளது என்பதாக இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் குறிப்பிட்டார்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில், நாட்டில் உள்ள சிறு குளங்கள் உட்பட முழுமையான கிராமப்புற நீர்ப்பாசன அமைப்பும் முழுமையாக நவீனமயமாக்கப்படும் என்று அவர் தெரிவித்ததோடு, நாட்டை விவசாயத்தில் தன்னிறைவு அடையச் செய்யும் இந்த மாபெரும் தேசியத் திட்டத்தில் கட்சி வேறுபாடின்றி அனைவரும் இணையுமாறும் அழைப்பு விடுத்தார்.

வேளான்மை அபிவிருத்தித் திணைக்களத்தால் பராமரிக்கப்படும் 10 ஏக்கர் மல்மடுகம குளத்தின் அபிவிருத்தி, சுமார் 70 ஏக்கர் நெல் வயல்களில் பயிரிடுவதற்கு வழி வகுக்கும்.

இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹான், உள்ளூர் அரசியல் பிரதிநிதிகள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் உள்ளூர் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.







Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال