JobVibe.lk - Sri Lanka Job Portal

கிழக்கில் தமிழர்கள் படுகொலையும், காணாமல் போனமையும்.

30 வது தொடர்............ 

இரண்டாவது ஈழப் போரின் கிழக்கை மீட்கும் நடவடிக்கையில் அரச படையினர் மிகவும் மூர்க்கமாக செயற்பட்டனர். இந்த படை நடவடிக்கைக்கு தேசிய ரீதியில் General Hamilton Wanasinghe அவர்களும், கிழக்கு நடவடிக்கைக்கு பொறுப்பாக Major General Denzil Kobbekaduwa அவர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர். 

அப்போது “அம்புட்டால் கும்பிட்டாலும் விடமாட்டார்கள், மண்டையில் போடுதல், டயரில் போடுதல்’ போன்ற வார்த்தைகள் மிகவும் பிரபலமாக இருந்தது. 

இதற்கு காரணம் LTTE யின் வாக்குறுதிகளை நம்பி சரணடைந்த சுமார் 700 பொலிசாரை எந்தவித ஈவிரக்கமின்றி கொலை செய்ததானது படையினர் மத்தியில் ஆத்திரமும், ஆவேசமும், பழி வாங்கும் அவசரமும் இருந்தது.   

கிழக்கில் உள்ள பொலிஸ் நிலையங்களில் சரணடைந்த பொலிசாரின் மொத்த எண்ணிக்கை சுமார் (1,000) ஆயிரம் பேர் இருந்திருக்கலாம். இவர்களை இனரீதியில் பிரித்து கொலை செய்யாமல், அனைவரையும் தடுத்து வைத்துக்கொண்டு பிரேமதாசா அரசிடம் பேரம் பேசி இருக்கலாம். 

அவ்வாறு பேரம் பேசியிருந்தால், குறைந்தது இராணுவ நடவடிக்கையையாவது மட்டுப்படுத்தியிருக்கலாம். அல்லது வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி இருக்கலாம். ஆனால் எந்தவித தாமதமுமின்றி சரணடைந்த அனைவரையும் ஈவிரக்கமின்றி உடனடியாக கொலை செய்ததானது அரச படையினரை ஆத்திரப்படுத்தியது. 

அத்துடன் இது LTTE யினரின் வரலாற்றில் செய்த ராஜதந்திர பிழைகளில் ஒன்றாகும். 

இராணுவ நடவடிக்கையின்போது கொல்லப்பட்ட, கைது செய்யப்பட்டு காணாமல் போன தமிழ் மக்களின் எண்ணிக்கை ஏராளம். 

11.06.1990 தொடக்கம் 30.09.1990 வரையில் ஆவணப்படுத்தப்பட்ட தரவுகளை இங்கே திகதி வரிசையில் பதிவிடுகிறேன். 

மட்டக்களப்பு மாவட்டம்

19.06.1990:

இராணுவம் மட்டக்களப்பு நகரைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பின்னர் இளைஞர்கள் கைது செய்யப்படுவதும், எரிக்கப்பட்ட உடல்கள் ஆங்காங்கே தோன்றியதையும் காணக்கூடியதாக இருந்ததாக UTHR பதிவு செய்கிறது. 

1990 ஜூன் இறுதி வாரம்:

வெல்லாவெளியில் தமிழர்கள் கொல்லப்பட்டதாக சர்வதேச மன்னிப்புச் சபை பதிவு செய்துள்ளது.  

07.07.1990 :

மட்டக்களப்பு Teachers' Training College அருகே 7 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் UTHR கூறுகிறது. 

20.07.1990:

சித்தாண்டி கோவில் அகதி முகாமில் இருந்தவர்களிடையே நடத்திய சுற்றிவளைப்பில் 44 தமிழர்கள் அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் போனதாக UTHR பதிவு செய்கிறது. அவர்கள் பெரும்பாலும் மாணவர்கள், தொழிலாளர்கள் எனக் கூறப்படுகிறது. 

21.08.1990:  

சித்தாண்டி ஸ்ரீ முருகன் கோவில் அகதி முகாமிலிருந்து பலரை அழைத்துச் சென்றதாகவும் அவர்கள் மீண்டும் திரும்பவில்லை என்றும் பதிவாகியுள்ளது. 

5.09.1990 – கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாம், வந்தாறுமூலை:  

இது பிரபலமான சம்பவமாகும். கிழக்கு பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்திருந்த அகதி முகாமிலிருந்து 159 பேர், பலர் முன்னிலையில் அழைத்துச் செல்லப்பட்டதாகவும், பின்னர் எவரும் காணப்படவில்லை என்றும் சர்வதேச மன்னிப்புச் சபை குறிப்பிடுகிறது.  

9.09.1990: 

சீருடை மற்றும் சிவில் உடை அணிந்தவர்கள் பெருமளவானவர்களை வீதிக்கு வரச் செய்து 184 பேரை அழைத்துச் சென்றதாக UTHR பதிவு செய்கிறது. (அதில் சத்துருக்கொண்டான் 38, கொக்குவில் 47, பன்னியாச்சியடி 37, பிள்ளையாரடி 62  என்று கூறப்படுகிறது.)  

20.09.1990: 

ஏறாவூர் – மட்டக்களப்பு இடையிலுள்ள கடற்கரைப் பகுதியான சவுக்கடியிலிருந்து 31 பேரை அழைத்துச் சென்றதாகவும், அவர்கள் காணாமல் போனதாகவும் UTHR பதிவு செய்கிறது. 

அம்பாறை மாவட்டம்

20.06.1990 : 

காரைதீவு அகதி முகாம்மீது ஹெலிகொப்டர் தாக்குதல் நடத்தப்பட்டதில் 3 பேர் கொல்லப்பட்டு 3 பேர் காயமடைந்தனர். 

அடுத்த நாள் 64 பேர் கைது செய்யப்பட்டதாகவும், 5 பேர் பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும், மீதமுள்ளவர்கள் காணாமல் போனதாகவும் குறிப்பிடப்படுகிறது. 

20–23.06.1990: 

கல்முனையில் எரிக்கப்பட்ட கடை ஒன்றில் 30 க்கும் மேற்பட்ட உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், மருத்துவமனைக்கு வெளியே மேலும் 6 உடல்கள் கிடந்ததாகவும் 70 க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாகவும் சர்வதேச மன்னிப்புச்சபை குறிப்பிடுகிறது.  

21.06.1990:

வீரமுனை அகதி முகாமிலிருந்து முதலில் 13 இளைஞர்களை அழைத்துச் சென்றதாகவும், பின்னர் இன்னும் சிலர் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் UTHR பதிவு செய்கிறது. 

25.06.1990:

அக்கரைப்பற்று சுற்றிவளைப்பில் 37 பேர் கைது செய்யப்பட்டதாகவும் இவர்களில் அரச ஊழியர்கள் மற்றும் சமூகத்தில் அறியப்பட்டவர்களும் அடங்குவதாக கூறப்படுகிறது. 

27.06.1990:  

காரைதீவில் மீண்டும் சுற்றிவளைப்பு நடைபெற்று 75 பேர் நைனாகாடு நோக்கி அழைத்துச் செல்லப்பட்டதாகவும், பாண்டிருப்பு பகுதியில் இருந்து சுமார் 80 பேர் அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் போனதாகவும் பதிவு செய்கிறது. 

திருகோணமலை மாவட்டம்

13.06.1990: 

இராணுவம் திருகோணமலை நகருக்குள் நுழைந்தபோது மருத்துவமனை அருகில் உள்ள பகுதிகளில் உடல்கள் கிடந்ததாக குறிப்பிடப்படுகிறது. 

1990 ஜூன் இறுதி: 

திருகோணமலையில் பரவலாக நடத்தப்பட்ட தேடுதலில் ஏராளமானவர்கள் அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அதில் சிலர் மாத்திரமே விடுவிக்கப்பட்டதாகவும் மீதமுள்ளவர்களின் நிலை பற்றி தெரியவில்லை என்றும் சாட்சியங்கள் கூறப்பட்டுள்ளது. 

11.07.1990: 

திருகோணமலை மெக்கைசர் விளையாட்டு மைதானப் பகுதியில் பெருமளவு மக்கள் கைது செய்யப்பட்டதாகவும், அதில் 52 பேர் காணாமல் போனதாகவும் கூறப்படுகிறது.  

2.08.1990: 

பொத்துவில் அகதிமுகாமிலிருந்து 150 பேர் அழைத்துச் செல்லப்பட்டு, அவர்களில் 30 பேர் பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும், மீதமுள்ள 120 பேரின் நிலை தெரியவில்லை என்றும் சர்வதேச மன்னிப்புச்சபை குறிப்பிடுகிறது. 

தொடரும்............

முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது




Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال