எம்.யூ.எம்.சனூன்
"தமக்கென சொந்த இடம், ஓர் அழகிய வாழ்வு" எனும் அரசாங்கத்தின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், ஆனமடு பிரதேச சபை பகுதியில் கட்டப்பட்டு வரும் 87 புதிய வீடுகளில், உலக வாழ்விட தினத்தை முன்னிட்டு கட்டி முடிக்கப்பட்ட 7 புதிய வீடுகள் அண்மையில் (05) பயனாளிக் குடும்பங்களுக்கு ஒப்படைக்கப்பட்டன.
தேசிய வீட்டு வசதி அபிவிருத்தி அதிகார சபையால் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ், கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ளும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு ரூபா 10 லட்சம் வீட்டு வசதி உதவித் தொகை வழங்கப்படும்.
மேலும், பயனாளிகளின் பங்களிப்புடன் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒரு வீட்டைக் கட்டிக்கொள்ளும் வாய்ப்பும் இந்தக் குடும்பங்களுக்குக் கிடைக்கும்.
பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன தலைமையில், கட்டி முடிக்கப்பட்ட இந்த வீடுகள் பயனாளிக் குடும்பங்களுக்கு ஒப்படைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் ஆனமடு பிரதேச சபையின் தலைவர் ஆலோக பண்டார, பிரதேச சபை உறுப்பினர்கள், புத்தளம் மாவட்ட முகாமையாளர், வீட்டு வசதி அபிவிருத்தி அதிகார சபையின் தொழில்நுட்ப அதிகாரிகள், பிரதேச செயலாளர், பிரதேசத்தின் அரசாங்க அதிகாரிகள், பிரஜா சக்தி தலைவர்கள் மற்றும் அப்பகுதி வாழ் பொது மக்களும் கலந்து கொண்டனர்.




